Published : 29 Jul 2018 09:27 AM
Last Updated : 29 Jul 2018 09:27 AM

திரை விமர்சனம்: ஜுங்கா

ஜுங்காவின் (விஜய்சேதுபதி) அப்பா ரங்காவும், தாத்தா லிங்காவும் பெரிய தாதாக்கள். ஆனால், வெட்டி பந்தாவுக்காக பணத்தை வீணாக செலவழிக்கிறார்கள். இதனால் போண்டியாகி, ரங்கா மனைவியின் (சரண்யா பொன்வண்ணன்) பரம்பரை சொத்தான ‘சினிமா பாரடைஸ்’ என்ற தியேட்டரை செட்டியாரிடம் இழக்கிறார்கள்.

மகன் ஜுங்காவும் அவர்களைப் போல தாதா ஆகிவிடக் கூடாது என்பதற்காக இந்த பிளாஷ்பேக் தெரியாமல் வளர்க்கிறார் சரண்யா. பின்னர் இதை தெரிந்துகொள்கிறார் ஜுங்கா. பஸ் கண்டக்டராக இருக்கும் அவர், சென்னைக்கு சென்று தாத்தா, அப்பா வழியில் பிரபல தாதா ஆகிறார். ஆனால், அவர்களைப் போல ஊதாரிச் செலவு செய்யாமல், கடைந்தெடுத்த கஞ்சனாக மாறுகிறார். இழந்த தியேட்டரை மீட்கவும் முயற்சிக்கிறார். இதற்காக செட்டியார் மகள் சாயிஷா சைகலைக் கடத்த பாரிஸ் செல்கிறார். தியேட்டரை மீட்டாரா என்பதுதான் ‘ஜுங்கா’.

அவல நகைச்சுவையை (டார்க் காமெடி) முதன்மைப்படுத்தும் கதையை கோகுல் இயக்கியுள்ளார். முதல் பாதி, லாஜிக் மீறல்கள் இல்லாமல் பயணிக்கிறது. இரண்டாம் பாதி அதற்கு நேர்மாறு. பாரிஸில் ஜுங்காவும், உதவியாளர் யோகிபாபுவும் தங்கியிருக்கும் நட்சத்திர விடுதியை போலீஸ் சுற்றிவளைக்க, இருவரும் உடலில் தூசிகூட படாமல் தப்பித்து வருவது, கடத்தப்பட்ட சாயிஷா அடைக்கப்பட்டுள்ள இடத்தை சிரமமின்றி ஜுங்கா கண்டுபிடிப்பது என பல உதாரணங்கள் கூறலாம். ஆனால், இதையும் தாண்டி, படம் தொடங்கியது முதல் இறுதி வரை ரசிகர்கள் சிரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் விஜய்சேதுபதி, இதில் ‘கஞ்ச தாதா’வாக அசத்தியிருக்கிறார். பாரிஸில் யோகிபாபுவுடன் சேர்ந்து அவர் அடிக்கும் லூட்டிகள் சுவாரசியம். இதற்கு முன்பு தாதா படங்கள் வழியே தமிழ் சினிமா செய்து வைத்திருக்கும் சட்டகங்களை கேலி செய்வதன்மூலம், ‘தாதா பட ஸ்பூஃப்’ என்ற எல்லைக்குள்ளும் கம்பீரமாகப் பிரவேசிக்கிறது படம்.

முதல் பாதியில் தெலுங்கு பேசும் பெண்ணாக மடோனா செபாஸ்டியன் வரும் காட்சிகள் இடைச்செருகல் என்றாலும், அலுப்பூட்டவில்லை. துணுக்கு தோரணங்களாக இடைவேளை வரை காட்சிகள் கலகலப்பாக நகர்கின்றன. அதன் பிறகு, படம் முழுக்க பாரிஸில் ரிச்சாக நகர்கிறது.

திரையரங்கை மீட்கத் தேவைப்படும் பணத்துக்காக, குறைந்த கட்டணத்துக்கு குற்றங்கள் செய்வது, கொலை செய்யச் செல்லும் நபரின் வீட்டிலேயே செல்போனை சார்ஜ் செய்வது, ‘ஒருமுறை கட்டிய புடவையை மறுமுறை கட்டமாட்டேன்’ என்று கூறும் காதலியைவிட்டு தலைதெறிக்க ஓடுவது, பாரிஸில் உதவியாளர் யோகிபாபுவுக்கு ‘பன்’னை மட்டுமே உணவாகக் கொடுப்பது, சகாக்களுக்கு சக்ஸஸ் பார்டி கொடுக்க, தாளிக்காத உப்புமா செய்து போட்டு, அவர்கள் அப்ரூவராக மாறும் அளவுக்கு வெறுப்பேற்றுவது என ஜுங்காவின் கஞ்சத்தனம், படத்தின் இறுதிகாட்சி வரை கலகலப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

சரண்யா, 87 வயது பாட்டி விஜயா, செட்டியாராக வரும் சுரேஷ் மேனன், போலீஸாக வரும் மொட்டை ராஜேந்திரன் என அனைவரின் பங்களிப்பும் சிறப்பு. நடிப்பு சொல்லும்படி இல்லாவிட்டாலும், டான்ஸில் ஈடுகட்டிவிடுகிறார் சாயிஷா. யோகிபாபு அறிமுகத்திலேயே அப்ளாஸ் அள்ளுகிறார்.

படம் முழுக்க அவரது காமெடி பஞ்ச்கள் நன்கு ஒர்க்அவுட் ஆகிறது. இரு காட்சிகளில் மட்டுமே வரும் ராதாரவிக்கு காட்ஃபாதர் கெட்அப்பும், அதில் அவர் மார்லன் பிராண்டோவின் உடல்மொழியை முயன்று பார்ப்பதும் கேலி கலந்த அழகு.

சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் ஓ.கே. டட்லியின் ஒளிப்பதிவில் பாரிஸ் நகரக் காட்சிகள் பிரமிப்பு!

படம் பார்க்க வரும் ரசிகர்களை சிரிக்க வைத்து அனுப்பினால் போதும் என முடிவு கட்டிவிட்டதால், திரைக்கதையில் இயக்குநர் பெரிதாக மெனக்கெடவில்லை போல. தேர்ந்தெடுக்கும் கதை, ஏற்கும் கதாபாத்திரத்தை நம்பகமாக வெளிப்படுத்தும் ஆற்றல் ஆகியவற்றால் விஜய்சேதுபதி எனும் நடிகனின் படமாக மாறிவிடுவதால் குறைகளைத் தாண்டி ஈர்க்கிறது ‘ஜுங்கா’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x