Published : 24 Jul 2018 11:58 AM
Last Updated : 24 Jul 2018 11:58 AM

கீர்த்தி சுரேஷ் என்ன சொன்னாலும் நம்பிவிடுவார்: விக்ரம்

படப்பிடிப்பு தளத்தில் என்ன சொன்னாலும் நம்பிவிடுவார் என்று நடிகர் விக்ரம் கூறினார்.

ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாமி ஸ்கொயர்’. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஷிபு தமீன்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் விக்ரம் பேசியதாவது:

தேவி ஸ்ரீபிரசாத் என்னை ‘கந்தசாமி’ படத்தில் அனைத்துப் பாடல்களையும் பாட வைத்தார். எதிலுமே கொஞ்சம் புதுமையை விரும்புவார். அவர் பாட ஆரம்பித்தால் அந்நியனாக மாறிவிடுவார். அவரிடம் பாடல் பாடும்போது ரொம்ப உத்வேகம் அளிப்பார். ‘சார்.. ஒரு பாட்டு பாடுறீங்களா’ என்று இயக்குநர் ஹரி கேட்டார். ‘மெலடியா’ என்று கேட்டவுடன் ‘இல்ல சார்... ஒரு குத்துப்பாட்டு’ என்றார். ’அய்யோ.. மறுபடியுமா’ என்று தான் நினைத்தேன். ஆனால், அப்பாடலும் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது.

’சாமி ஸ்கொயர்’ படத்துக்குத் தொடர்ச்சியாக ஷூட்டிங் போயிட்டு இருந்ததால், ‘நடிகையர் திலகம்’ பார்த்தேன். உண்மையில் அப்படத்தை தெலுங்கில் தான் பார்த்திருக்க வேண்டும். சாவித்திரி அம்மாவே நடிச்ச மாதிரி இருந்தது. பாரதியார் என்றவுடன் நிறையப் பேருக்கு ஷாயாஜி ஷிண்டே முகம் தான் வரும். அதே போல், இப்போது சாவித்திரி அம்மா என்றால் கீர்த்தி சுரேஷ் முகம் தான் ஞாபகம் வரும். அப்படம் முடிவடைந்த உடன் காட்டப்பட்ட புகைப்படத்தில் இருவருமே ஒரே மாதிரி இருந்தார்கள். இவ்வளவு இளம் வயதில் அவ்வளவு பெரிய கதாபாத்திரம் எடுத்து அற்புதமாக பண்ணியதற்கு வாழ்த்துகள். அவருடைய அம்மா, பாட்டி இருவருமே பெரிய நடிகைகள்.

சாவித்திரி அம்மா கார், குதிரை என அனைத்தும் ஓட்டுவார். ஜெமினி கணேசன் சார் அவரை அவ்வளவு ஊக்குவித்திருக்கிறார். அதே போல, கீர்த்திக்கு வயலின் வாசிக்கத் தெரியும், க்ளாசிக்கல் இசை கற்றிருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் என்ன சொன்னாலும் நம்பிவிடுவார்.

’துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பு தளத்தில் தான் ஐஸ்வர்யா ராஜேஷை முதலில் பார்த்தேன். அதற்குப் பிறகு இருவருமே தொடர்ச்சியாக பேசுவோம். அப்போது அவர் திரையுலகிற்கு வந்தார், அவரது குடும்பம் உள்ளிட்டவற்றைச் சொன்னார். மிகவும் கடுமையான குடும்பச் சூழலிலிருந்து வந்திருக்கிறார். அவருடைய அம்மாவுக்கு எனது வாழ்த்துகள். மிகவும் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஐஸ்வர்யா ராகேஷ் தேர்வு செய்து நடிக்கிறார்.

’சாமி’ படத்தில் த்ரிஷாவுக்கென்று ஒரு மேஜிக் உண்டு. அதை யாராலும் செய்ய முடியாது என்று ஐஸ்வர்யா ராஜேஷ் சொன்னார். ஆனால், அவருக்கென்று ஒரு மேஜிக் உள்ளது. அது கண்டிப்பாக பேசப்படும்.

பிரபு அண்ணனைப் பற்றி ஒட்டுமொத்த படக்குழுவுமே சொல்வார்கள். அனைத்து நடிகர்களுக்குமே வணக்கம் சொல்லி ரொம்ப மரியாதையாக நடத்துவார். ஒரு நடிகராக அவருடைய படங்கள் பார்த்து நிறைய கற்றிருக்கிறேன். நல்ல திறமையான நடிகர்.

நான் நடிச்ச படங்களிலே ரொம்ப  முக்கியமான படம் ’சாமி’. 2-ம் பாகம் பண்ணும் போது நல்ல கதையாக அமைந்து பண்ணலாம். அதற்காக எத்தனை வருஷம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம் என்று ஹரியிடம் சொன்னேன்.

 ’தில்’, ’தூள்’, ‘சாமி’ என படங்கள் பண்ணியும் ரொம்ப நாளாச்சு. ’சாமி ஸ்கொயர்’ ஒரு கமர்ஷியல் மைல்கல்லாக அமையும் என நம்புகிறேன். ஹரி சாருக்கு ரொம்ப நன்றி. என்னுடைய படங்களில் ‘சாமி’ தான் அனைத்து தரப்புக்குமே பிடிக்கும்.

இவ்வாறு விக்ரம் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x