Published : 24 Jul 2018 09:50 AM
Last Updated : 24 Jul 2018 09:50 AM

சமூக அக்கறையுள்ள கருத்தை கதாநாயகி சொன்னால் எடுபடும்: ‘மோகினி’ இயக்குநர் ஆர்.மாதேஷ் நேர்காணல்

‘‘ஒரு முன்னணி நாயகனின் படத்துக்கு இணையாக, நாயகியை மையமாக வைத்து உருவாக்கப்படும் படங்களும் தற்போது பெரும் வரவேற்பை பெறுகின்றன. ஆணும், பெண்ணும் சமம் என காட்சிகளிலும், குரல்வழியாகவும் பதிவு செய்வது மட்டுமே போதாது. பெண்ணுக்கான கதைகளை பிரத்யேகமாக உருவாக்கி, அது வழியே அவர்களது திறமையைப் பிரதிபலிப்பதும் முக்கியம்’’ என்கிறார், த்ரிஷா நடிப்பில் ‘மோகினி’ திரைப்படத்தை இயக்கியுள்ள ஆர்.மாதேஷ். தொடர்ந்து அவரிடம் பேசியதில் இருந்து..

எவர்கிரீன் மார்க்கெட் கொண்டது காமெடி களம். அதுபோலவே, திகில் பின்னணிக்கு உலகம் முழுவதும் ஒரு மார்க்கெட்டும், எதிர்பார்ப்பும் எப்போதுமே இருக்கிறது. ‘மோகினி’ வெறும் திகில் படம் மட்டுமல்ல. சமூக பொறுப்பு, கூடவே காமெடி, சென்டிமென்ட், பாட்டு, சண்டை என எல்லாம் கலந்த காம்போ மிக்ஸ் திரைப்படமாக இருக்கும்.

நான் ஷங்கரின் பள்ளியில் இருந்து வந்தவன் என்பதால், எப்போதும் கதையில் சமூக அக்கறை இருக்க வேண்டும் என விரும்புவேன். இங்கு சமூக அக்கறை உள்ள ஒரு கருத்தை, ஒரு பெண் சொல்வது இன்னும் பலம். இன்னும் நன்றாக மக்களைச் சென்றடையும். அப்படி நினைத்து எழுதிய கதைதான் இது. படம் தொடங்கிய சில மாதங்களுக்குப் பிறகு, லண்டனில் எதேச்சையாக நடிகர் மாதவனை சந்தித்தபோது, ‘‘இந்தக் கதையை அப்படியே நாயகனை வைத்து மாற்றி திரைக்கதை அமையுங்கள். நானே இந்தியில் நடிக்கிறேன்’’ என்றார். கேட்க சந்தோஷமாக இருந்தது.

ஒரு பங்களா, இரவு, மலை.. இதில் இருந்து மாறுதல் வேண்டும் என நினைத்தேன். இந்த படத்தின் 10 சதவீதக் காட்சிகள் மட்டுமே இங்கு இடம்பெறும். மீதி படம் முழுவதும் லண்டனை கதைக் களமாகக் கொண்டது. கதைக் களத்துக்கு தேவைப்பட்டதால் லண்டன் சென்றோம்.

நடிப்போடு சேர்த்து ஆக்சன் காட்சிகளுக்கும் பொருத்தமான ஒரு நடிகை தேவைப்பட்டார். கயிற்றில் கட்டி தொங்குவது, மிரட்டலாக சண்டையிடுவது என சவாலான வேலைகள் இந்த கதாபாத்திரத்துக்கு உண்டு. அப்படி யோசிக்கும்போது, த்ரிஷாதான் சரியான நபர் என்பதை இப்படத்தின் கதைக் களம்தான் தீர்மானித்தது.

நிச்சயம் த்ரிஷாவின் நடிப்புத் திறமைக்கு தீனி போடும் படமாக இது இருக்கும். ரிஸ்க் எடுத்து நடித்தார். இவ்வாறு மாதேஷ் கூறினார்.

பேய் இருக்கு.. ஆனா, பயம் இல்லை

‘மோகினி’ திரைப்பட விளம்பர நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் த்ரிஷா கூறியதாவது :

‘மோகினி’ படத்தில் வைஷ்ணவி, மோகினி என எனக்கு ரெண்டு கதாபாத்திரம். ரெண்டுக்கும் பயங்கர வித்தியாசம் தெரியும். நான் வேறொரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது இயக்குநர் மாதேஷ் இந்தக் கதையை 6 வரிகளில் எழுதி அனுப்பினார். படித்ததுமே பிடித்துவிட்டது. இதில் எனக்கு நல்ல ஸ்கோப் இருக்கும் என்று தெரிந்தது. மனுஷங்க மாதிரி, பேய்களும் இந்த உலகத்தில் இருக்குன்னு நம்புறேன். ஆனா எனக்கு பயமெல்லாம் கிடையாது.

‘96’, ‘சதுரங்கவேட்டை’ என அடுத்தடுத்து 6 படங்கள் ரெடியாகிட்டு இருக்கு. வருங்காலத்தில், பக்காவா ரெண்டு பீரியட் படத்தில் நடிக்க ஆசை இருக்கு. என் திருமணம் பற்றி கடந்த 2 வருஷமா பெருசா பேச்சு இல்லாம இருந்துச்சு. இப்போ மீண்டும் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. என்கிட்ட பதில்தான் இல்லை.

மற்ற நாயகிகள் படம் பண்ணுவதைப் பார்த்து நான் கதைகளை தேர்வு செய்வதில்லை. எனக்கு பிடித்தால் மட்டுமே ஏற்கிறேன்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிடம் விருது வாங்கும் புகைப்படத்தை  ட்விட்டர் பக்க முகப்புல வைத்திருக்கீங்களேன்னு பலரும் கேட்கிறாங்க. முதல்வரா இருந்தப்போ ஒருமுறை என் ஸ்கூல் நிகழ்ச்சிக்கு வந்தாங்க. அப்போதிருந்தே அவங்கன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். அவங்க இல்லாதது தமிழகத்துக்கு பெரிய இழப்பு.

இவ்வாறு த்ரிஷா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x