Published : 10 Jul 2018 05:41 PM
Last Updated : 10 Jul 2018 05:41 PM

பாபா, சர்கார் பிரச்சினை குறித்து அன்புமணியுடன் விவாதிக்கத் தயார்: சிம்பு

‘பாபா’ மற்றும் ‘சர்கார்’ பிரச்சினை குறித்து அன்புமணி ராமதாஸுடன் விவாதிக்கத் தயார் என சிம்பு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான ‘சர்கார்’ பட போஸ்டரில், விஜய் புகைபிடிப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது. பாமக நிறுவனர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பியது. அதை ஏற்று, ட்விட்டரில் இருந்து அந்த போஸ்டரை நீக்கியது சன் பிக்சர்ஸ்.

அத்துடன், சிகரெட் நிறுவனத்துக்கு விளம்பரமாக இது அமைந்துள்ளது என்று சென்னை, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சிரில் அலெக்ஸாண்டர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், கலாநிதி மாறன் மூவரும் ஆளுக்கு தலா 10 கோடி ரூபாயை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இயங்கிவரும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்கு வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கூறியிருந்தார். இதுகுறித்து இரண்டு வாரங்களுக்குள் மூவரும் விளக்கம் அளிக்க வேண்டுமென தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ‘அன்புமணி ராமதாஸுடன் இதுகுறித்து விவாதிக்கத் தயார்’ என சிம்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “சினிமாவைப் பற்றி நிறைய கருத்துகள், பிரச்சினைகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. ‘பாபா’ படமாக இருக்கட்டும், இப்போ ‘சர்கார்’ படமாக இருக்கட்டும்... ‘தம்’ அடிப்பது ஏன் ஃபர்ஸ்ட் லுக்கில் வருகிறது? என்பது போன்று நிறைய கேள்விகள் வருகின்றன.

அங்கிள் அன்புமணி ராமதாஸ் கூட அதைப்பற்றிக் கேட்டிருந்தார். அதைப்பற்றி நான் ஏதாவது சொன்னால், எந்த விதத்திலாவது அது தவறாகிவிடும். அதுகுறித்து விவாதம் பண்ணத் தயார் என்றுகூட அவர் ஏற்கெனவே சொல்லியிருந்தார். ஒரு விவாத மேடையில் அவர் நினைக்கின்ற எல்லா கேள்விகளையும் கேட்கும்போது, சினிமா தரப்பில் இருந்து எங்கள் பதில்களை நேரடியாக மக்கள் பார்க்கும் வகையில் கலந்துரையாடலாம் என்று நினைக்கிறேன்.

இதுதான் சரியான வழியாக இருக்கும் என்றும் நினைக்கிறேன். அது அவருக்கு ஓகே என்றால், எப்போது, எங்கே, எந்த நேரம் என்று சொன்னால், வருவதற்கு நான் தயாராக இருக்கிறேன். ஏனென்றால், தொடர்ச்சியாக சினிமாவைப் பற்றி இந்த மாதிரியான பிரச்சினைகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. நான் ஒன்று சொல்ல, வேறொருவர் இன்னொன்று சொல்ல... அது அப்படியே போய்க்கொண்டே இருக்கும். அதனால், அவர் சொல்கிற நேரத்தில், சொல்கிற இடத்துக்கு வந்து விவாதம் செய்ய நான் தயார்” என்று சிம்பு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x