Last Updated : 06 Jul, 2018 05:28 PM

 

Published : 06 Jul 2018 05:28 PM
Last Updated : 06 Jul 2018 05:28 PM

முதல் பார்வை: MR சந்திரமௌலி

ஒரு விபத்தில் தந்தையை இழக்கும் இளைஞன், 2 அடிக்கு மேல் பார்வை தெரியாது என்ற இக்கட்டான நிலையில் கொலைக்குற்றவாளியைக் கண்டுபிடித்துப் பழிவாங்குவதே 'MR சந்திரமௌலி'.

பாக்ஸர் கவுதமின் ஒட்டுமொத்த உலகமும் அவர் அப்பா கார்த்திக்தான். அப்பாவின் அன்பால், அரவணைப்பால், ஊக்கத்தால் குத்துச்சண்டையில் சாதிக்கிறார். அடுத்தடுத்த இலக்குகளைத் தொட ஸ்பான்ஸர் தேவைப்படுகிறது. ஸ்பான்ஸர்ஷிப் உதவியுடன் குத்துச்சண்டைப் போட்டியில் கலந்துகொள்ள பெங்களூரு சென்று கோப்பையுடன் திரும்பும் கவுதம் அன்றைய நாள் நள்ளிரவில் தன் தந்தை கார்த்திக்குடன் ஒரு விபத்தில் சிக்குகிறார். அதில் கார்த்திக் பலியாக, கண் பார்வைக் குறைபாட்டுடன் கவுதம் மட்டும் உயிர் பிழைக்கிறார். சில நாட்களுக்குப் பிறகு நடந்தது விபத்து அல்ல, கொலை என்று கவுதமுக்குத் தெரியவர குற்றவாளிகளைத் தேடும் முனைப்பில் இறங்குகிறார். கவுதம் எப்படி குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறார், யார் அந்த குற்றவாளி, ஏன் கார்த்திக் கொல்லப்பட்டார், அவரை கவுதம் என்ன செய்கிறார், கால் டாக்ஸிக்கும் இந்தக் கதைக்கும் உள்ள தொடர்பு என்ன போன்ற கேள்விகளுக்கு அலுப்புடனும் சோர்வுடனும் பதில் சொல்கிறது 'MR சந்திரமௌலி'.

ரியல் அப்பா - மகனை ரீலிலும் அப்படியே நடிக்கவைத்து மேஜிக் நிகழ்த்த முயற்சித்திருக்கிறார் இயக்குநர் திரு. அத்துடன் ஸ்போர்ட்ஸ் காமெடி என்ற ஜானரில் படம் எடுக்க நினைத்து காமெடி - க்ரைம் கலந்த படத்தைக் கொடுத்திருக்கிறார். அதில் காமெடி எடுபடாதது சோகம்.

குத்துச்சண்டை வீரருக்கான உடல் மொழியில் கவுதம் கார்த்திக் சரியாகப் பொருந்துகிறார். அப்பா மீதான அன்பின் நிமித்தத்தை, அவரின் இழப்பைத் தாங்க முடியாத வலியை, ரெஜினா காஸண்ட்ரா மீதான காதலை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

கார்த்திக் பொறுப்புள்ள அப்பா கதாபாத்திரத்தைக் கண்முன் நிறுத்துகிறார். மகனுடன் கொண்ட தோழமை உணர்வு, ஊக்கம் கொடுத்து வளர்ப்பது, பழைய பொருட்களின் மீதான பிடிமானத்தோடு இருப்பதைக் காரணங்களால் விளக்குவது என கொஞ்சம் மிகைத் தன்மையோடும் நடித்திருக்கிறார். அப்பா- மகன் உறவில் செயற்கைத்தன்மையே இழையோடியது.

நாயகன் கவுதம் கார்த்திக்குடன் படம் முழுக்க வரும் கதாபாத்திரத்தில் ரெஜினா காஸண்ட்ரா வந்து போகிறார். ஏதேதோ ஆனேனே பாடலில் அதீத கவர்ச்சி காட்டும் ரெஜினா மருத்துவமனைக் காட்சியில் உடைந்து அழும்போதும் மட்டும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்.

வரலட்சுமி சரத்குமார் மனதில் நிற்கும் கேரக்டரில் தேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார். சந்தோஷ் பிரதாப் கதாபாத்திரத்திற்கான நோக்கத்தை மிகச் சரியாக நிறைவேற்றுகிறார். மைம் கோபி வழக்கமும் பழக்கமுமான நடிப்பை நல்கி இருக்கிறார்.

சதீஷ், ஜெகன் ஆகிய இருவர் இருந்தும் சிரிப்பதற்கு சிரமப்படவேண்டியிருக்கிறது. அகத்தியன், மகேந்திரன், விஜி சந்திரசேகர் ஆகியோர் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை.

ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ் இசையும், பின்னணியும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன.

கால் டாக்ஸி டிரைவர்கள் செய்யும் குற்றங்கள், அதற்கான பின்புலம் என்று மிகச் சரியாக கதையைக் கட்டமைத்த இயக்குநர் திரு அதற்கான காட்சிப்படுத்துதலில் முதிர்ச்சியற்ற தன்மையைக் கையாண்டிருக்கிறார். இதனால் படம் பலவீனம் அடைகிறது. ஓடாத காரை வைத்து நகைச்சுவை என்ற பெயரில் எடுக்கப்பட்ட காட்சிகள் ரசிகர்களிடம் எந்தவிதத்திலும் எடுபடவில்லை. கவுதம் கார்த்திக்- ரெஜினா சந்தித்துக்கொள்ளும் காட்சி அரதப் பழசு. இவர்கள் காதலில் எந்த அழுத்தமும் இல்லை. கார்த்திக்- கவுதம் முதன்முதலாக திரையில் இணைந்து நடித்திருக்கிறார்கள். அது எந்த மேஜிக்கையும் நிகழ்த்தாமல் சாதாரணமாகவே கடந்து போகிறது.

வரலட்சுமி - கார்த்திக் நட்பு ரசிக்க வைக்கிறது. தேர்வறையில் மைக்ரோபோன், ப்ளூடூத் மூலம் காப்பி அடித்த ஓர் ஐபிஎஸ் அதிகாரியின் செயலை நினைவுகூர்ந்து அதை திரைக்கதைக்கான முக்கியத் திருப்பமாக மாற்றியதில் சபாஷ் பெறுகிறார் திரு. எடிட்டிங் முறையை இன்னும் கொஞ்சம் கலைத்துப்போட்டு அப்பா- மகன் உறவுக்கான நீளத்தைக் கத்தரித்து கால் டாக்ஸி பின்புலத்தை தீவிரப்படுத்தி ஷார்ப்பாக மாற்றியிருந்தால் 'MR சந்திரமௌலி' துறுதுறுவென்று துடிப்புடன் இருந்திருப்பான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x