Published : 06 Jul 2018 04:32 PM
Last Updated : 06 Jul 2018 04:32 PM

பொது சுகாதாரத்துறை நோட்டீஸ் எதிரொலி: ‘சர்கார்’ போஸ்டரை நீக்கியது சன் பிக்சர்ஸ்

பொது சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியதால், ‘சர்கார்’ போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டரில் இருந்து நீக்கியுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மூன்றாவது முறையாக விஜய் நடித்துவரும் படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, ஈவிபி பொழுதுபோக்குப் பூங்கா, கொல்கத்தா உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ராதாரவி, பழ.கருப்பையா இருவரும் அரசியல்வாதிகளாக நடித்திருப்பதால், இந்தப் படம் அரசியலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மாதம் (ஜூன்) 21-ம் தேதி மாலை இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியிடப்பட்டது. முதன்முதலாக வெளியிடப்பட்ட போஸ்டரில், விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

இந்த போஸ்டருக்கு பலரிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, 2007-ம் ஆண்டு, ‘இனிமேல் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்’ என அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸுக்கு வாக்குறுதி கொடுத்திருந்தார் விஜய். அந்த செய்தி, சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து பாமகவைச் சேர்ந்த ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ‘சர்கார்’ போஸ்டரைக் கண்டித்து தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

இந்நிலையில், படத்தில் இருந்து அந்தக் காட்சியை நீக்குமாறு தமிழக அரசின் பொது சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் புகையிலைத் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவு, விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆகிய மூவருக்கும் நோட்டீஸ் அனுப்பியது. புகைப்பழக்கத்தை இளைஞர்களிடம் இருந்து அறவே ஒழிக்க அரசு மேற்கொண்டு வரும் முதற்கட்ட முயற்சிக்கு திரையுலகினர் ஒத்துழைக்க வேண்டுமென பொது சுகாதாரத்துறை சமீபத்தில் கேட்டுக் கொண்டது.

இதன் எதிரொலியாக அந்த போஸ்டரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் நீக்கியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘துப்பாக்கி’ படத்திலும் இப்படி சிகரெட் பிடிப்பது போன்ற போஸ்டர் வெளியானது. ஆனால், இந்த அளவுக்கு அப்போது எதிர்ப்பு எழவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x