Published : 25 Jun 2018 12:34 PM
Last Updated : 25 Jun 2018 12:34 PM

‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் வெளியாகும் ‘விஸ்வரூபம் 2’ பாடல்

‘விஸ்வரூபம் 2’ படத்தில் இருந்து ஒரு பாடல் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் வெளியிடப்பட இருக்கிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ் 2’. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் இந்த நிகழ்ச்சியில், அனந்த் வைத்யநாதன், பொன்னம்பலம், யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா, மும்தாஜ், பாலாஜி, நித்யா, டேனியல், ஷாரிக் ஹாசன், சென்றாயன், மமதா சாரி, வைஷ்ணவி, மஹத், ஜனனி, என்.எஸ்.கே.ரம்யா, ரித்விகா ஆகியோர் போட்டியாளர்களாகப் பங்கேற்றுள்ளனர்.

கடந்த வருடம் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைத் தன்னுடைய அரசியல் வருகைக்கு முன்னோட்டமாகப் பயன்படுத்திக் கொண்ட கமல்ஹாசன், ‘இந்தியன் 2’ படத்தின் அறிவிப்பையும் அதில் வெளியிட்டார். இந்நிலையில், இந்த சீஸனில் தற்போது ‘விஸ்வரூபம் 2’ படத்தின் பாடல் ஒன்றை வெளியிட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வருகிற 29-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் இந்தப் பாடல் வெளியாக இருக்கிறது. இந்தப் பாடலை கமல்ஹாசனே பாடியிருக்கிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, ஆஸ்கர் ஃபிலிம்ஸ் மற்றும் கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளன. ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x