Published : 23 Jun 2018 08:46 AM
Last Updated : 23 Jun 2018 08:46 AM

உங்களில் ஒருவர் செய்யும் வதம்..: சசிகுமார் நேர்காணல்

 

‘‘க

டவுள் முருகப் பெருமான், அசுரனை வதம் செய்தது சரி என்றுதானே சொல்றோம். அதுபோலத்தான் ‘அசுரவதம்’ படமும். படத்துல அந்த வதம் நடந்த பிறகு, ‘அட, நாமும் இதைத்தான் செய்திருப்போம்’னு ஒவ்வொருத்தரையும் சொல்ல வைக்கும். அதனால தான் இந்த ஆக்ரோஷக் கதையை உடனே கையில எடுத்துக்கிட்டு கொடைக்கானல் பக்கம் ஷூட்டிங் போய்ட்டோம்..’’ என்று சாந்தமாகப் பேசத் தொடங்குகிறார் ‘அசுரவதம்’ சசிகுமார். தொடர்ந்து அவருடன் பேசியதில் இருந்து..

படம் முழுக்க கோபம் மட்டுமே கொப்பளிப்பது போல தெரிகிறதே. இது வன்முறைக் களமா?

சமகாலத்துல நடக்கிற ஒரு விஷயத்தை மையமா வைத்து பிரதிபலிக்கிற கதைதான் இது. இதில் வன்முறை எதுவும் இல்லை. ஆக்சன் காட்சிகள் அதிகமா தெரியும். தப்பு செய்றதுக்கு சரியான தண்டனை கொடுப்பதுதானே சரி. அதனால, இந்த வதமும் சரிதான் என்று சொல்கிற படம். இது என் தனிப்பட்ட ஒருத்தனோட கோபம் அல்ல. படம் பார்க்குற எல்லோருடைய கோபமாகத்தான் வெளிப்படும். இது உங்களில் ஒருவர் செய்யும் வதமாகக்கூட எடுத்துக்கலாம்.

‘அலாதி அன்பே’ என்ற பாடலை, ‘இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சமர்ப்பணம்’ என ரிலீஸ் செய்தீர்களே, ஏன்?

கொடைக்கானல்ல வசிக்கிற ஒருவன் தன் குடும்பத்தைப் பிரிந்து, துபாய் போய் ஒப்பந்த தொழிலாளியா வேலை செய்றான். அந்தத் தொழிலாளியாக நான் நடிச்சிருக்கேன். அவன் தனது வாழ்க்கையில் எதிர்கொள்கிற விஷயம்தான் படம். அதனாலதான் படத்துல ஒரு பாட்டை குடும்பம், குழந்தைகள், உறவுகளைப் பிரிந்து வலியோடு இடம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறோம்.

படம் முழுக்க கொடைக்கானல் பின்னணியில் உருவாகியுள்ளது. உங்கள் பள்ளிக்கூட வாழ்க்கை நகர்ந்த இடமாச்சே. பழைய நினைவுகள் வந்திருக் குமே?

இருக்காதே பின்னே. எனக்கு பிரின்ஸ்பாலா இருந்த ஆசிரியர்தான் எங்க செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியில இப்பவும் இருக்காங்க. அங்கே படிக்கிற நிறைய மாணவர்களை படப்பிடிப்புக்கு பயன்படுத்திக்கிட்டேன். அந்தப் பகுதியில இருக்குற ஒரு அரசுப் பள்ளிக்கு, நான் படித்த பள்ளி நிர்வாகத்தினரும், இன்னும் சிலரும் சேர்ந்து ஒரு கழிப்பறை கட்டிக் கொடுத்திருக்காங்க. படப்பிடிப்புக்கு நடுவுல அந்தக் கழிப் பறையைத் திறந்துவைத்தேன். பால்ய நாட்கள்ல வாழ்ந்த இடங்கள், நண்பர்களைப் பார்த்தேன். சில இடங்கள் மாறியிருந்தன. இருந்தாலும் ரொம்ப சந்தோஷமா இருந்தது.

உங்களது புதிய இயக்குநர்கள் பட்டியலில் மருதுபாண்டியன் எப்படி இணைந்தார்?

‘சசிகுமார் எப்பவும் வழக்க மான கதையையே தொடுறார்’னு வெளியில ஒரு பேச்சு இருக்கே. அதை மாத்துற மாதிரி ஒரு கதை அமைக்கணும்னு நினைச்சிட்டிருந்தேன். அப் போது வந்த கதைதான் இது. எனது வழக்கமான படம் மாதிரி இருந்தாலும், இதுல கிராமத்துக்கு பதிலா டவுன். அதனால மற்ற விஷயங்களும் ஓரளவு மாறியிருக்கும். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவும், கோவிந்த் மேனன் இசையும் இந்தக் கதைக்கு பெரிய பலமாக இருக்கும். குறிப்பாக, பின்னணி இசை கண்டிப்பாக கவனிக்கப்படும்.

நந்திதாவின் கதாபாத்திரம் எப்படி?

என் மனைவியா வர்றாங்க. எங்களுக்கு டூயட் எல்லாம் கிடையாது. கணவன் - மனைவியை சுற்றிச் சுழலும் கதை. அதில் அவங்க கதாபாத்திரம் தனித்து நிற்கும்.

‘தாரை தப்பட்டை’ படத்துக்கு பிறகு பெரும்பாலும் புதிய இயக்குநர்களையே விரும்பு கிறீர்கள், ஏன்?

அப்படி இல்லையே. அடுத்து வெளிவர உள்ள ‘நாடோடிகள் 2’ சமுத்திரகனி படம். என்னை அணுகும் எல்லோரிடமும் கதை கேட்கிறேன். ஏதாவது புதுசா இருக்கா, நாம் அதுக்கு சரியா இருப்போமான்னு பார்த்து தேர்வு செய்கிறேன்.

‘நாடோடிகள் 2’ பற்றி சொல்ல முடியுமா?

படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ‘நாடோடிகள்’ படம் போலவே அதன் 2-ம் பாகமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை கட்டாயம் பூர்த்தி செய்யும். இதுல நட்பு மட்டுமின்றி, குடும்பம், பாசம் என எல்லா அம்சங்களும் இருக்கும்.

உங்கள் மைத்துனர் அசோக்குமார் மறைந்து, ஓராண்டு ஆகப்போகிறது. அந்த வேதனையில் இருந்து நீங்கள் இன்னும் விடுபடாததுபோல தெரிகிறதே?

அந்த பாதிப்பில் இருந்து என்னால் இன்னும் வெளியே வர இயலவில்லை. இன்னும் ரெண்டு, மூணு வருஷங்கள் ஆகும். இப்படி இன்னும் எத்தனை வருஷங்கள் ஓடினாலும் என் அசோக்கின் இழப்பை என்னால் மறக்கவே முடியாது. அது அழியாம எனக்குள் இருந்துகொண்டேதான் இருக்கும். அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக் கிறது. நீதிமன்றத்தையும், நீதியையும் நான் முழுசா நம்புகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x