Published : 02 Jun 2018 12:31 PM
Last Updated : 02 Jun 2018 12:31 PM

கர்நாடகாவில் வலுக்கும் எதிர்ப்பு: ‘காலா’வை மக்கள் விரும்பவில்லை: முதல்வர் குமாரசாமி ‘ரெட்கார்டு’

ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய மக்கள் விரும்பவில்லை. அவர்களின் விருப்பத்துக்கு மாறாக நடக்க முடியாது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இதனால், திட்டமிட்டபடி கர்நாடக மாநிலத்தில் காலா திரைப்படம் வெளியாகுமா என்பது பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

கடும் எதிர்ப்பு

kaala2jpg 

தனுஷ் தயாரிப்பில், இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் காலா. வரும் 7-ம் தேதி நாடுமுழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது. ஆனால், கர்நாடகத்தில் பிறந்த ரஜினிகாந்த், காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்று கூறினார்.

இந்தக் கருத்து அந்த மாநில மக்களை மிகுந்த அதிருப்தியில் ஆழ்த்தியது. இதனால், காலா திரைப்படத்தை கர்நாடகத்தில் உள்ள தியேட்டர்களில் ரிலீஸ் செய்யக் கூடாது என வலியுறுத்தினார்கள்.

கன்னட அமைப்புகளும் காலா படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்யக்கூடாது, மீறி ரிலீஸ் செய்தால், கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளனர். மேலும், பல்வேறு கன்னட அமைப்புகளும் முதல்வர் குமாரசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கன்னட மக்களின் உணர்வுகளை மதித்து காலா திரைப்படத்தைத் திரையிட அனுமதிக்கக்கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

கன்னட பிலிம் சேம்பர் அமைப்பின் தலைவர் சாரா கோந்தும், முதல்வர் குமாரசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில் காலா திரைப்படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கக்கூடாது எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொலை மிரட்டல்

இதற்கிடையே கர்நாடக்தில் உள்ள ரஜினி ரசிகர்கள், காலா திரைப்படத்தை ரிலீஸ் செய்ய ஏதேனும் முயற்சி மேற்கொண்டால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும், பலருக்குக் கொலை மிரட்டல்களும் கன்னட அமைப்பு நிர்வாகிகள் விடுத்துள்ளனர். இதனால், பெங்களூரு போலீஸ் ஆணையரிடம் இது குறித்து ரஜினி ரசிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆலோசனை

இதற்கிடையே தமிழக திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், நடிகர் பிரகாஷ் ராஜ் ஆகியோர் கர்நாடகத்தில் காலா திரைப்படம் எந்தவிதமான சர்ச்சையும் இன்று ரிலீ்ஸ் ஆக நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். மேலும், கன்னட திரைப்படத் தயாரிப்பாளர்கள், வினியோகிஸ்தர்கள், பிலிம் சேம்பர்கள் அமைப்பு ஆகியோருடன் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆலோசனை நடத்தியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்

kalapng 

காலா திரைப்படத்துக்கு கர்நாடகாவில் எழுந்துள்ள எதிர்ப்புக் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், கர்நாடக பிலிம் சேம்பர் என்பது தென்னிந்திய பிலிம் சேம்பரின் ஒரு அங்கமே. ஆதலால், தென்னிந்திய திரைப்பட சங்கம் இதில் தலையிட்டு காலா திரைப்படம் ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சினை சுமூகமாக முடியும் என நினைக்கிறேன் எனத் தெரிவித்தார்.

மக்கள் விருப்பம்

kumarajpgகர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி100 

இந்நிலையில், காலா திரைப்படம் கர்நாடகத்தில் ரீலீஸ் செய்ய அனுமதிக்கப்படுமா என்பது குறித்து முதல்வர் எச்.டி.குமாரசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள் அப்போது அவர் கூறுகையில், காலா திரைப்படத்துக்கு ஏன் மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது, கன்னட அமைப்புகள் ஏன் எதிர்க்கிறார்கள் என்பதற்கான காரணம் எனக்கு தெரியவந்துள்ளது. காலா திரைப்படத்தை ரீலீஸ் செய்ய அனுமதிக்க கூடாது தடை செய்ய வேண்டும் என எனக்கு கோரிக்கையும் வந்துள்ளது.

கன்னட மக்களும், கன்னட பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸும் காலா திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட விரும்பவில்லை. கன்னட அமைப்புகளும் காலா திரைப்படத்தை எதிர்க்கிறார்கள். இதில் மக்களின் விருப்பமே முக்கியம். இது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

கன்னட முதல்வர் குமாரசாமியும் அரசியலுக்கு வரும் முன் மிகப்பெரிய தயாரிப்பாளராக இருந்தவர். அதன்பின் தீவிர அரசியலுக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்

இதற்கு முன் கன்னட அமைப்புகளுக்கு எதிராக நடிகர் சத்தியராஜ் கருத்துக்கள் கூறியதால், பாகுபலி திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கன்னட அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதன்பின் பேச்சுவார்த்தைக்குப்பின் பாகுபலி ரீலீஸ் ஆனது.

கடந்த 2008-ம் ஆண்டு ஒகேனக்கல் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கன்னட மக்களை உதைக்கவேண்டும் என்று பேசி இருந்தார். இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த கன்னட மக்களும், அமைப்புகளும், ரஜினிகாந்த் மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x