Published : 04 May 2018 03:15 PM
Last Updated : 04 May 2018 03:15 PM

‘தெருவுக்குத் தெரு ஒயின்ஷாப் வைக்க இடமிருக்கிறது; நீட் தேர்வுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லையா?’ - இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ் காட்டம்

‘தெருவுக்குத் தெரு ஒயின்ஷாப் வைக்க இடமிருக்கிறது. நீட் தேர்வுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லையா?’ எனக் காட்டமாகக் கூறியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜ்.

மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு, வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 6) நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வை எழுத, தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு கேரளா மற்றும் ராஜஸ்தானில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், நீட் தேர்வு எழுதக் காத்திருக்கும் மாணவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோர்களில் பலர், அவ்வளவாக படிப்பறிவு இல்லாதவர்கள். அவர்களால் வெளிமாநிலங்களில் தேர்வு மையத்தை எப்படிக் கண்டுபிடித்துச் செல்ல முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் மையங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதால், உடனடியாக வெளிமாநிலங்களுக்குச் செல்ல எப்படி டிக்கெட் புக் செய்ய முடியும்? போன்ற பல்வேறு காரணங்களால் மாணவர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு, பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்க்குரல் கொடுத்துள்ளனர். சினிமாவில் இருந்து இயக்குநர்கள் வெங்கட் பிரபு, பா.இரஞ்சித் போன்றோர் தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

‘நீட் தேர்வு, மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி’ - இயக்குநர் பா.இரஞ்சித்

இந்நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்பாராஜும் காட்டமாகத் தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார். “எல்லாத் தெருக்களிலும் ஒயின்ஷாப் திறந்துவைக்க இடமிருக்கிறது. ஆனால், நீட் தேர்வு எழுதுவதற்குத் தமிழகத்தில் இடம் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறதா? உங்கள் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதைக் கடுமையாக ஆட்சேபிக்கிறேன்.

‘தமிழகத்தில் நீட் தேர்வைத் தடைசெய்’ என்பதில் இருந்து, ‘தமிழ்நாட்டில் நீட் தேர்வை நடத்துங்கள்’ என்ற நிலைக்கு வந்துவிட்டோம். அருமையான விளையாட்டு. நம் குரல்களை உண்மையிலேயே அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்களா?” என ட்விட்டரில் கூறியுள்ளார் கார்த்திக் சுப்பாராஜ்.

வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதும் 2 மாணவர்களின் போக்குவரத்துச் செலவை ஏற்றுக் கொள்வதாக நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு எழுதும் 2 மாணவர்களின் போக்குவரத்துச் செலவை ஏற்பதாக நடிகர் பிரசன்னா அறிவிப்பு

ராஜஸ்தான் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட மேலும் பலர் மாணவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x