Published : 09 Apr 2018 06:57 PM
Last Updated : 09 Apr 2018 06:57 PM

படத்தில் மட்டும்தான் தண்ணீருக்காகக் குரல் கொடுப்பாரா நயன்தாரா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் சினிமாத்துறையினர் சார்பில் நேற்று கண்டன அறவழிப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் நயன்தாரா, த்ரிஷா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கூடக் கலந்து கொள்ளவில்லை.

தமிழ் சினிமாவில் 15 வருடங்களுக்கும் மேலாக ஹீரோயினாக நடித்து வருகிறார் நயன்தாரா. இடையில் சில ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்தாலும், சொந்த வாழ்க்கையில் சறுக்கல்கள் ஏற்பட்டாலும், அவற்றில் இருந்து மீண்டுவந்து இன்றைக்கு நம்பர் ஒன்னாக இருக்கிறார் நயன்தாரா. அதற்கு உறுதுணையாக இருந்தது தமிழ் ரசிகர்களின் அன்பு தான். ஆனால், அவர்களுக்காக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை என்பது வருத்தமான விஷயம்.

சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அறம்’ படத்தில், கலெக்டராக தண்ணீர்ப் பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்திருந்தார் நயன்தாரா. அவரின் தத்ரூபமான நடிப்பு, அந்தப் படத்துக்குப் பெரிய பலம். அதற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து, தியேட்டர்களுக்கே நேரடியாகச் சென்று ரசிகர்களைச் சந்தித்தார் நயன்தாரா. இத்தனைக்கும் எந்த சினிமா புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாதவர் அவர்.

‘அறம்’ படத்தின் இரண்டாம் பாகம் வருகிற அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. ‘அறம் 2’ படத்திலும் சமூகக் கருத்துகள் நிறைந்திருக்கும் என்பது வெளிப்படையாகவே எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால், படத்தில் மட்டும்தான் இப்படி சமூகப் பிரச்சினைகளுக்காக நயன்தாரா குரல் கொடுப்பாரா? தன்னை 15 வருடங்களாக ஹீரோயினாக நீடிக்க வைத்திருக்கும் தமிழ் ரசிகர்களுக்காகவும், தன்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் தமிழர்களுக்காகவும் நேரடியாகக் குரல் கொடுக்க மாட்டாரா? என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x