Published : 05 Feb 2018 12:48 PM
Last Updated : 05 Feb 2018 12:48 PM

மார்ச் 1-ம் தேதி முதல் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தம்; தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு, வெளியீடு இல்லை

திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம் தெரிவித்து மார்ச் 1-ம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்ய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதனால் தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்பு, வெளியீடு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கியூப், யுஎஃப்ஓ ஆகிய இரு நிறுவனங்கள்தான் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் டிஜிட்டல் வடிவில் புரஜக்டர்களை நிறுவி வருகின்றன. இதன்மூலமாகத்தான் அனைத்து திரைப்படங்களும் திரையிடப்படுகின்றன. கியூப், யுஎஃப்ஓ ஆகிய நிறுவனங்களுக்கு தயாரிப்பாளர் இரண்டு விதங்களில் பணம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளது. ஒரு படத்தை திரையிட்டு அதை திரையரங்கிலிருந்து எடுத்தும் வரைக்கும் அதிக நாட்களுக்கு 34,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு வாரத்துக்கு திரையிட ரூ.12,000 செலுத்த வேண்டும். இதனால் தயாரிப்பாளர்கள் தங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகக் கூறுகின்றனர்.

இதே சமயத்தில் பிற நிறுவனங்கள் குறுகிய காலத்திற்கு திரையிட 4,000 ரூபாயும், நீண்ட காலத்திற்கு 12,000 ரூபாய் கட்டணமாகப் பெறவும் தயாராக உள்ளன. ஆனால், கியூப், யுஎஃப்ஓ ஆகிய இரு நிறுவனங்கள் அதிக தொகையைக் கேட்கின்றன.

இந்நிலையில், திரைப்படங்களை டிஜிட்டல் முறையில் வெளியிடுவதற்கான ஒளிபரப்புக் கட்டணத்தை அதிகமாக பெற்றுவருவதைக் கண்டித்தும், அந்த நிறுவனங்களின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைத்து திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், திரையுலகினருக்கும் நன்மை செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடும், சிறிய முதலீட்டு படங்களை வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள சிரமத்துக்கும், பொருளாதார இழப்புக்கும் தீர்வு காணும் வகையிலும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்பு, வெளியீடு இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைநிறுத்தத்தில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம், பெப்சி, தென்னிந்திய நடிகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு திரையுலக அமைப்பினரின் நிலைப்பாடு குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x