Last Updated : 13 Oct, 2017 04:38 PM

 

Published : 13 Oct 2017 04:38 PM
Last Updated : 13 Oct 2017 04:38 PM

தமிழ் திரையுலகம் இனி சுத்தமாக செயல்படும்; மெர்சல் கண்டிப்பாக தீபாவளிக்கு வெளியாகும்: விஷால்

தமிழ் திரையுலகம் இனி சுத்தமாக செயல்படும். 'மெர்சல்' கண்டிப்பாக தீபாவளிக்கு வெளியாகும் என்று விஷால் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக கேளிக்கை வரி குறைப்பு, திரையரங்கு டிக்கெட் கட்டணம் தொடர்பாக தமிழக அரசுடன் தமிழ்த் திரையுலகினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இன்று (அக்டோபர் 13) முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தமிழ்த் திரையுலகினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்பேச்சுவார்த்தையின் முடிவில் பத்திரிகையாளர்கள் மத்தியில் விஷால் பேசியதாவது:

மல்டிப்ளக்ஸ் குறைந்தபட்சம் 50 ரூபாய், அதிகபட்சம் 150 ரூபாய், ஏசி திரையரங்குகள் குறைந்தபட்சம் 40 ரூபாய், அதிகபட்சம் 100 ரூபாய், ஏசி அல்லாத திரையரங்குகள் குறைந்தபட்சம் 30, அதிகபட்சம் 80 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் கட்டணத்திற்கு மேல் ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரி சேரும்.

முன்பு அறிவித்த 10% கேளிக்கை வரியிலிருந்து 2% குறைத்து, தமிழ் சினிமாவுக்கு 8% கேளிக்கை வரி என்று தெரிவித்துள்ளார்கள். மற்ற மொழி படங்களுக்கு 20% கேளிக்கை வரி என்று அறிவித்துள்ளார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் கடம்பூர் ராஜூ, அமைச்சர் வேலுமணி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

திரையுலகம் சார்ந்த அனைத்து கோரிக்கைகளையும் கேட்டு, அரசாங்கம் விதித்திருக்கும் விஷயம் இதுதான். மற்ற மொழிப் படங்களுக்கான கேளிக்கை வரியை மறு பரிசீலனை செய்யுங்கள் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.

தமிழக அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தாண்டி, ஒரு ரூபாய் கூட அதிகமாக விற்கக்கூடாது என்ற விதிமுறையை வலுவாக தெரிவித்திருக்கிறார்கள். மக்களுக்கு புதிய கட்டண முறையைத் தெரியப்படுத்த வேண்டும். மக்களும் இதைத்தாண்டி ஒரு ரூபாய் கூட கட்ட வேண்டியதில்லை. அதற்கு மேல் கட்ட வேண்டிய சூழல் வந்தால் தமிழக அரசுக்கு புகார் அளிக்கலாம்.

சினிமா பார்க்க திரையரங்குகளுக்கு மக்கள் குடும்பத்துடன் வருவதற்கு, கட்டணம் முறையான அளவில் இருக்க வேண்டும். பலரும் கட்டணம் மிகவும் அதிகம் என்று சொல்கிறார்கள். அனைத்துமே விதிமுறைக்கு உட்பட்டு தான் இருக்கும். இந்த விதிமுறையைத் தாண்டி யாரும் வசூலிக்கக் கூடாது என்பதை நாங்களும் கண்காணிப்போம். ஒட்டுமொத்தமாக கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஏன் இந்த 8% கேளிக்கை வரி என்பதும் பேசப்பட்டது. இனிமேல் டிக்கெட்டுகளில் ஒரு பணம், கொடுப்பது ஒரு பணம் என்பது இருக்காது. அதற்கு ஏற்றார் போல்தான் இனிமேல் தமிழ் சினிமா செயல்படும். இந்த விஷயத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்களும் எங்களுடன் இணைந்து செயல்படுவார்கள் என்று நம்புகிறோம்

ஒவ்வொரு திரையரங்கிற்கும் சி-பார்ம் என்ற விதிமுறை உண்டு. அதில் குறிப்பிட்டுள்ளதைத் தாண்டி யாருமே அதிகமாக வசூலிக்கக் கூடாது. கேண்டீன்களில் விற்கப்படும் உணவுகளில் MRP-ல் குறிப்பிட்டுள்ள பணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதை முறையாக இனிமேல் பின்பற்றப்பட வேண்டும். ஆன்லைன் கட்டணம் தொடர்பாகவும் இன்று தான் நடவடிக்கையில் இறங்குகிறோம். 30 ரூபாய் என்றில்லாமல் அதற்கான முறையான கட்டணத்தை வசூலிப்பது தொடர்பாக விரைவில் வழிமுறைகள் மேற்கொள்ளப்படும்.

'மெர்சல்' கண்டிப்பாக தீபாவளிக்கு வெளியாகும். அரசாங்கத்திற்கு எதிராக நாங்கள் படங்களை வெளியிடாமல் இல்லை. இந்த கேளிக்கை வரியைச் செலுத்தி எங்களால் படங்களை வெளியிட முடியாது என்பதால் மட்டுமே நிறுத்தி வைத்திருந்தோம். திரையரங்குகளுக்கு படங்களை அளிக்கும் தயாரிப்பாளர்கள் சார்பில் சொல்கிறேன்.

தயவு செய்து அதிக கட்டணங்கள் கொடுக்காதீர்கள். நடிகர்களும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள் என்கிறார்கள். அனைத்தையுமே முறைப்படுத்துவதற்கான முயற்சிதான் இது. தமிழ் திரையுலகம் இனிமேல் சுத்தமாக செயல்படும். .

இவ்வாறு விஷால் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x