Published : 13 Oct 2017 08:49 AM
Last Updated : 13 Oct 2017 08:49 AM

விஜய் நடித்து, தீபாவளிக்கு திரையிடப்படவுள்ள ‘மெர்சல்’ படத்துக்கு தடை கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை

திரையரங்குகளில் புதிய படங்கள் வெளியிடும்போது, விதிகளை மீறி பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது சட்டவிரோதம். எனவே, தீபாவளிக்கு திரையிடப்படவுள்ள ‘மெர்சல்’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

பெரம்பூரை சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறையினர், சென்னையில் உள்ள 33 திரையரங்குகள், டிக்கெட் விற்பனையில் ஈடுபடும் இணையதள சேவை நிறுவனங்கள், வருமானவரித் துறை தலைமை முதன்மை ஆணையர், விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றை எதிர் மனுதாரர்களாக மனுவில் சேர்த்திருந்தார்.

மனுவில் அவர் கூறியிருந்ததாவது:

அத்துமீறி அதிக கட்டணம்

முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் புதுப் படங்களைத் திரையிடும்போது முதல் 5 நாட்களுக்கு அத்துமீறி அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எந்த திரையரங்கிலும் வசூலிக்கப்படுவதில்லை. எந்த திரையரங்கும் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை அரசு அதிகாரிகளும் சரியாக அமல்படுத்துவதில்லை. திரையரங்கு உரிமையாளர்களும் கடைபிடிப்பதில்லை.

ஏற்கெனவே ‘கபாலி’, ‘பைரவா’, ‘சிங்கம்’, ‘விவேகம்’ என பல படங்களுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது இந்த திரையரங்குகளில் ஜிஎஸ்டி என்ற பெயரிலும் தனியாக மக்களிடம் கொள்ளையடிக்கப்படுகிறது. திரையரங்குகள் அத்துமீறி வசூலிக்கும் கட்டணத்தால் பொதுமக்களின் பணம் நாள்தோறும் கோடிக்கணக்கில் சுரண்டப்படுகிறது.

முதல் 5 நாட்கள்

தற்போது நடிகர் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படம் வரும் தீபாவளிக்கு திரையிடப்படவுள்ளது. இந்தப் படத்துக்கும் முதல் 5 நாட்களுக்கு அத்துமீறி கூடுதல் கட்டணம் வசூலிக்க சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்க உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இது சட்டவிரோதம்.

ரூ.1 லட்சம் அபராதம்

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் திரையரங்குகளுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதித்து, மக்களிடம் வசூலிக்கப்பட்ட அதிகப்படியான கட்டணத்தை அவர்களிடமே திருப்பி வழங்கவோ, அரசு கருவூலத்தில் சேர்க்கவோ சட்டத்தில் இடம் உள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் படையினர் முறையாக ஆய்வு செய்வதில்லை.

மக்கள் தலையில்..

எந்தவொரு நடிகரோ, நடிகையோ, திரைப்படத் தயாரிப்பாளர்களோ, திரையரங்கு உரிமையாளர்களோ தங்களது வரவு செலவுக் கணக்கை முறையாக வருமானவரித் துறையிடம் தாக்கல் செய்வதில்லை. ‘மெர்சல்’ படம் எடுக்க ரூ.150 கோடி செலவிடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இந்தப் பணம் முழுவதும் பொதுமக்களின் தலையில்தான் சுமத்தப்படுகிறது. எனவே, விதிகளை மீறி, திரையரங்குகளி்ல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும். இந்த மனு நிலுவையில் இருக்கும் வரை, நடிகர் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தை திரையிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைமை நீதிபதி அமர்வு

இந்த மனுவை நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு விசாரித்தார். மனு மீதான விசாரணையை, தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வுக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x