Published : 22 Mar 2017 06:42 PM
Last Updated : 22 Mar 2017 06:42 PM

நடிகர் சங்க செயலாளர் பதவிக்கு வந்த காளான் விஷால்: தாணு தாக்கு

நடிகர் சங்கத்தின் செயலாளர் பதவிக்கு வந்த காளான் விஷால். அவரிடம் ஆணவம், மமதை அதிகமாக உள்ளது என்று தயாரிப்பாளர் தாணு குற்றம்சாட்டினார்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரும் ஏப்ரல் 2-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணியின் சார்பில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

தயாரிப்பாளர் எஸ்.தாணு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். அதன்படி தலைவர் பதவிக்கு ஆர்.ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர்கள் பதவிக்கு கே.ராஜன், சுரேஷ் காமாட்சி, கவுரவ செயலாளர்கள் பதவிக்கு சிவசக்தி பாண்டியன், ஜே.சதீஷ்குமார் மற்றும் பொருளாளர் பதவிக்கு விஜயமுரளி ஆகியோர் போட்டியிட உள்ளார்கள். செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 23 பேர் போட்டியிடுகிறார்கள்.

திடீர் திருப்பமாக தலைவர் பதவிக்கு போட்டியிட மனுத் தாக்கல் செய்த டி.சிவா, அம்மனுவை வாபஸ் பெற்று, ராதாகிருஷ்ணன் அணிக்கு இச்சந்திப்பில் தனது ஆதரவைத் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் தயாரிப்பாளர் சிவா பேசியது, " முழுமையான தயாரிப்பாளர்கள் தான் சங்கத்தில் நிர்வாகிகளாக வர வேண்டும். எனவே, தாணு வழிகாட்டுதலின்படி நான் மனுவை வாபஸ் பெற்று ராதாகிருஷ்ணனுடன் இணைந்துள்ளேன். விஷாலுக்கும் எனக்கும் தனிப்பட்ட விரோதம் கிடையாது. தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் வரக் கூடாது என்று நாங்கள் நினைக்கவில்லை. நீங்கள் நடிகர் சங்கத்திலும் இருந்து கொண்டு, தயாரிப்பாளர் சங்கத்திலும் போட்டியிட்டு இரண்டு குதிரைகளிலும் எப்படி சவாரி செய்வீர்கள்?

நடிகர் சங்கத்தைப் பற்றியும், நடிகர்களைப் பற்றியும் எப்போதும் சிந்திக்கும் விஷால் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வரக் கூடாது. தொழில்முறை தயாரிப்பாளர்கள்தான் நிர்வாகிகளாக வர வேண்டும். அதற்கு தகுதியானவர் என்று நினைத்துதான், ராதாகிருஷ்ணனை நான் ஆதரிக்கிறேன்" என்று பேசினார்.

தலைவர் பதிவிக்கு போட்டியிடும் ஆர்.ராதாகிருஷ்ணன் பேசும் போது, "தலைவர் பதவிக்கு போட்டியிடுவதிலிருந்து விலகி டி.சிவா எங்கள் அணிக்கு முழுஆதரவு அளித்துள்ளார்" என்று பேசி, 10 நலத் திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

இச்சந்திப்பில் தயாரிப்பாளர் ஜே.எஸ்.சதிஷ்குமார் பேசியதாவது "தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் சங்கம் ஊடுருவ இடமில்லை. எங்கள் குடும்ப பிரச்சினையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். சினிமா தொழிலில் உள்ள பிரச்சினைகளைத் கண்டிப்பாக எதிர்கொள்ளத்தான் வேண்டும். நடிகர் சங்கத்தில் விஷால் கொடுத்த வாக்குறுதிகளையே நிறைவேற்ற முடியவில்லை. தயாரிப்பாளர் சங்கம் தயாரிப்பாளர் சங்கமாக மட்டும் தான் இருக்க வேண்டும். அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் வருவாய் ஈட்ட எங்கள் அணியிடம் நல்ல திட்டங்கள் நிறைய உண்டு" என்று பேசினார்.

தற்போது தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருக்கும் தாணு பேசியதாவது "விஷாலுடைய பேச்சும், அணுகுமுறையும் தவறாக உள்ளது. நடிகர் சங்கத்தை எந்த காலத்திலும் தவறாக சொல்லமாட்டேன். நடிகர் சங்கத்தின் செயலாளர் பதவிக்கு வந்த காளான் விஷால். அவரிடம் ஆணவம், மமதை அதிகமாக உள்ளது.

எங்களை குறை சொல்வதற்கு விஷால் என்ன செய்தார். அந்த அணியில் போட்டியிடும் கவுதம் மேனன் படமான 'நீதானே என் பொன்வசந்தம்' பிரச்சினைக்கு நான் 1 கோடி ரூபாய் கொடுத்து உதவினேன். தான் நடித்த 'பாயும் புலி' பிரச்சினையின் போது ஓடி ஒளிந்தவர்தான் விஷால்.

அனைத்து தயாரிப்பாளர்கள் வீட்டுக்குச் சென்று ஒட்டுக் கேட்டுப் போகிறார். அவரை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர் வீட்டுக்குச் சென்றாரா?. அவருடைய படத்துக்கு பணம் கொடுத்த பைனான்சியர்கள் கஷ்டப்படுகிறார்கள். ஞானவேல்ராஜாவுக்குதான் இந்த சங்கம் நிறைய பஞ்சாயத்துகளில் பேசி சரி செய்து கொடுத்துள்ளது.

ஆந்திராவில் நிறைய முறை ரெட் கார்டு வாங்கியவர் பிரகாஷ்ராஜ். அவரைத் தயாரிப்பாளர் சங்கத்தைப் பற்றி குறை சொல்லும் முன் கண்ணாடி முன் நின்று பேச வேண்டும்.

நடிகர்கள் இணைந்து படம் செய்து, கட்டிடம் கட்டுவோம் என்றார்களே என்னவானது? கட்டிடத்தையும் காணவில்லை, கல்யாணமும் செய்யவில்லை. விஷால் தம்பிக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும்" என்று பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x