Published : 09 Jan 2015 11:13 AM
Last Updated : 09 Jan 2015 11:13 AM

தலைவர் பதவிக்கான தகுதி இருக்கிறதா?- விஷால் சிறப்புப் பேட்டி

நடிகர் என்பதைத் தாண்டி நல்ல தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என்ற அடையாளம் கிடைத்ததில் சந்தோஷப்படுகிறேன். இந்தப் புத்தாண்டிலும் இதைத் தக்க வைத்துக்கொள்ள இன்னும் கூடுதலாக உழைப்பேன் என்று சந்தோஷமாகப் பேச ஆரம்பித்தார் விஷால்.

‘ஆம்பள’ படத்தில் ஒரு நட்சத்திரப் பட்டாளமே இருக்கே… படத்தில் அப்படி என்ன விசேஷம்?

இயக்குநர் சுந்தர்.சியின் படங்கள் என்றாலே பண்டிகை, விடுமுறை நாட்களில் குடும்பத்தோடு பார்ப்பது போல இருக்கும். குடும்பத்தில் இருக்கிற தாத்தாவிலிருந்து சின்னக் குழந்தைகள் வரை எல்லோருக்கும் பிடிச்ச சினிமாவைக் கொடுக்கிறது சுந்தர்.சிக்கு கை வந்த கலை. ‘ஆம்பள’ படமும் இதுக்கு விதிவிலக்கு இல்லை. இத்தனை கேரக்டர் இருந்தாலும் எந்த கேரக்டரையும் இயக்குநர் வலிந்து திணிக்கல.

நீங்களும் சுந்தர்.சியும் இணைந்த ‘மதகஜ ராஜா’ வெளியாகாமல் இருக்கும்போதே ‘ஆம்பள’ எப்படிச் சாத்தியமானது?

இது விஷாலோட தயாரிப்பு. கதையைக் கேட்ட உடனே இதுல நாம நடிக்கணும், நாமே தயாரிக்கணும்னு முடிவெடுத்தேன். படத்தையும் உடனே ஆரம்பிச்சுட்டோம். சுந்தர்.சி படமென்றாலே படப்பிடிப்பு நடக்கிற மாதிரியே தெரியாது. ரொம்ப ஜாலியா இருக்கும். இப்படிங்கிறதுக்குள்ள படத்தையே முடிச்சுடுவார்.

‘மதகஜராஜா’வைப் பொறுத்தவரை அந்தப் படம் எப்போது வந்தாலும் வெற்றிதான். ஆனால், எப்போது வரும்ன்னு தயாரிப்பாளர்கிட்டதான் கேட்கணும்.

‘நான் சிகப்பு மனிதன்’, ‘பாண்டியநாடு’ என்று வெவ்வேறு கதைக்களங்களில் விருப்பம் காட்டினீங்க. இப்போ மறுபடியும் ‘பூஜை’, ‘ஆம்பள’ என்று பக்கா வணிகப் படங்கள் பக்கம் போயிட்டீங்களே?

‘ஆம்பள’ படம் பார்த்ததுக்குப் பிறகு இந்தக் கேள்வியைக் கண்டிப்பா கேட்க மாட்டீங்க. நடிகன் என்றால் எல்லாவிதமான பாத்திரங்களிலும் நடிக்க வேண்டும். ‘நான் சிகப்பு மனிதன்’, ‘பாண்டியநாடு’ ஆகியவையும் வணிகப் படங்கள்தான்.

ஓர் இயக்குநர் நல்ல கதையோட வந்தால், அந்தக் கதைக்காக என்னை எந்த அளவுக்கும் மெருகேற்றி நடிக்க விரும்புவேன். அந்த வகையில்தான் என்னோட எல்லாப் படங்களும் அமைந்தன. இந்த வருடம் ‘ஆம்பள’, சுசீந்திரன் இயக்கும் படம், சசிகாந்த் இயக்கத்தில் ஒரு நேரடி தெலுங்குப் படம், அப்புறம் லிங்குசாமி படம் இருக்கு. இப்படி எல்லாப் படங்களுமே ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமாக இருக்கும்.

இந்த வயதில் தயாரிப்பு, விநியோகம், நடிப்பு எப்படிச் சமாளிக்க முடியுது?

சந்தோஷமாகத்தான் பண்றேன். இப்போகூடப் படத்தைச் சொன்ன தேதியில் வெளியிட வேண்டுமே என்று 14 நாட்கள் தொடர்ச்சியாக இரண்டு மொழி பதிப்புகளுக்கு டப்பிங் பேசி முடித்தேன். அதேநேரம் என்னோட தயாரிப்பு என்பதால் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வதையும் கவனித்தேன். என்னுடைய வாழ்நாளில் இந்த 14 நாட்கள் நான் பணியாற்றியதைப் போல இதற்கு முன் பணியாற்றியதில்லை. கடமை என்று வந்துவிட்டால், முடிக்கும் வரை என்றைக்குமே நான் ஓயமாட்டேன்.

ஒவ்வொரு முறையும் பலமான போட்டிக்கு மத்தியில் உங்க படங்கள் வெளியாகுதே. வசூல் ரீதியில் பாதிக்கும் என்று நினைக்கவில்லையா?

கண்டிப்பாக இல்லை. ‘பூஜை’யைப் பொறுத்தவரைக்கும் இன்னொரு தேதியில் வெளியிட்டிருந்தால் இன்னும் ஒரு மடங்கு லாபம் அதிகமாகி இருக்கும். இப்போ இருக்கிற காலகட்டத்தில் எங்கே தனியாகப் படம் ரிலீஸ் பண்ண முடியும்? அதுக்கு வாய்ப்பே இல்லை. ‘ஆம்பள’ பொங்கலுக்கு வெளியீடு என்று விளம்பரம் செய்தே படத்தை ஆரம்பித்தோம்.

இப்போ ‘என்னை அறிந்தால்’ தள்ளிப் போயிடுச்சு. எந்தப் படம் வந்தால் என்ன, உழைப்புக்கும் திறமைக்கும் நம்ம ரசிகர்கள் எப்பவுமே மரியாதை கொடுப்பாங்க. ஒரே விஷயம்தான். உள்ள வரவைத்து அவங்களை ஏமாத்திடக் கூடாது.

திருட்டு வீடியோவுக்கு எதிராக 2015-ல் என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

இப்போ சொல்றேன். 14-ம் தேதி ‘ஆம்பள’ ரிலீஸ். அன்றைக்கு இரவே திருட்டு டி.வி.டி. வந்துடும். 15-ம் தேதி காலையில என்னோட கைக்கு வரும். நான் 16-ம் தேதி அந்த டி.வி.டியை எடுக்க எந்தத் திரையரங்கு ஒத்துழைப்பு கொடுத்தது என்ற சோதனைக்கு அனுப்பி வைப்பேன். முடிவு வர 48 மணி நேரமாகும். முடிவு வந்த அடுத்த நிமிடம், அந்தத் திரையரங்கை மூடுவதற்கான எல்லா முயற்சிகளிலும் இறங்கிடுவேன். இதுதான் நடக்கப் போகிறது.

திருட்டி டி.வி.டி. என்றாலே வெளிநாட்டுக்கு அனுப்பும் படப்பிரதிகளில் இருந்து வருகிறது என்கிறார்கள். நான் தயாரிப்பாளர்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். படம் வெற்றி என்று விருந்து வைக்கும் செலவில், உங்களோட படங்களுக்கு எந்தத் திரையரங்கில் இருந்து திருட்டு டி.வி.டி.உருவானது என்பதை அறியச் செலவு செய்யுங்கள்.

54 ஆயிரம் செலவு. அதைப் பண்ணினால் திருட்டு டி.வி.டி.யை ஒழிக்க வாய்ப்பு உண்டு. முதலில் தயாரிப்பாளர்களுக்குள் ஒற்றுமை வேண்டும். என்னால் இதை ஒழிக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் இந்த ஆண்டில் செய்வேன்.

நடிகர் சங்கப் பிரச்சினை தீர்ந்து விட்டதா?

நடிகர் சங்கத்துக்கு இதுவரை இரண்டு கடிதங்கள் அனுப்பி இருக்கிறேன். எதற்கும் இதுவரை பதில் இல்லை. ஜனவரி 14-ம் தேதி சிறப்புச் செயற்குழு கூட இருக்கிறது. தை மாதம் வழக்கு எல்லாம் முடிந்து, நடிகர் சங்கக் கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கும் என்று சொன்னார்கள். இன்னும் பூமி பூஜை கூட நடக்கவில்லை.

இம்முறை கடிதம் அனுப்பப் போவதில்லை. எனக்குத் தேவை நலிந்த நடிகர்கள் என்று யாருமே இருக்கக் கூடாது. அதே வேளையில், நடிகர் சங்கத்துக்கு என்று நாமே ஒரு கட்டிடம் கட்ட வேண்டும். இதில் என்ன தவறு இருக்கிறது. கேட்கும் கேள்வி எதற்குமே பதில் இல்லை.

விஷால் தலைவர் பதவிக்கு நிற்கப் போகிறார் என்று செய்திகள் பரவுகின்றன. முதலில் ஒரு நடிகனாகச் சங்கத்துக்கு சேவை செய்வேன். என்னைவிட நாசர், பொன்.வண்ணன் என நிறைய மூத்த நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தேர்தலில் நிற்பார்கள். நான் தலைவர் பதவிக்கு நிற்காமல், வேறு ஒரு பதவிக்கு நிற்பேன். தலைவர் பதவிக்கான தகுதி இன்னமும் எனக்கு வரவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x