Published : 22 Jan 2017 06:40 PM
Last Updated : 22 Jan 2017 06:40 PM

ஜல்லிக்கட்டு போராட்டம் திசைமாறிச் செல்கிறது: ஹிப் ஹாப் தமிழா ஆதி வேதனை

ஜல்லிக்கட்டு போராட்டம் திசைமாறிச் செல்வதாக 'ஹிப் ஹாப்' தமிழா ஆதி வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

"எல்லோருக்கும் வணக்கம். உங்களை எங்கே காணவில்லை என பலர் குறுந்தகவல் அனுப்பினீர்கள். நான் பாதுகாப்பாக இருக்கிறேன். கோயம்புத்தூரில் நாள் முழுக்க உட்கார்ந்திருந்தீர்கள், ஏன் இரவு கிளம்பிப் போனீர்கள்? ஏதேனும் அழுத்தமா என்று கேட்கிறார்கள். எனக்கு எந்த ஒரு அழுத்தமும் இல்லை. பயந்துவிட்டீர்களா என சிலர் கேட்டீர்கள். நான் பயந்து அங்கிருந்து செல்லவில்லை. ரொம்ப புண்பட்டு அங்கிருந்து கிளம்பினேன். அது தான் உண்மை.

ஜல்லிக்கட்டுப் போராட்டம் எப்படி ஆரம்பித்தது என்றால், மிருக நல ஆர்வலர்கள் வழக்கு தொடுத்த போது, அதை எதிர்த்து பி.ஆர் தொடர்ச்சியாக அவர்களோடு வாதிட்டு வருகிறார். சிவசேனாதிபதி, ராஜேஷ் என பலர் இதில் இருக்கிறார்கள். 2015-ல் இவர்களை சந்தித்து பேசி, இதற்கு ஏதாவது தீர்வு வர வேண்டும் என்று நினைத்தேன்.

2012ல் 'இறைவா', 2014ல் 'வாடிப்புள்ள வாடி' மாதிரி 2016-ல் நாம் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தலாம் என முடிவு செய்தேன். அதன்படி 'டக்கரு டக்கரு' என்ற பாடலை விவசாயிகளின் பார்வையிலிருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டேன். அதன் மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் என் நோக்கம்.

ஜனவரி4-ம் தேதி மெரினா போராட்டம் நடைபெற்ற பிறகு, திரைப்பட நடிகர்கள் பலர் 'தமிழன்' என்று அப்பிரச்சினை முன்னெடுத்தார்கள். அதை நான் தவறு சொல்லவில்லை. இதில் பி.ஆர், சேனாதிபதி ஆகியோர்தான் உண்மையான நாயகர்கள், அவர்கள் இருவரையும் பிரபலப்படுத்த வேண்டும் என்று தொடங்கினேன். அதற்கு காரணம், மக்கள் இறுதியாக ஒரு தலைவரைத் தேடுவார்கள். அலங்காநல்லூரில் நடைபெற்ற மவுனப் போராட்டத்துக்குப் பிறகு தொடர் போராட்டமாக மாறுகிறது. அலங்காநல்லூர், கோவை, சென்னை என பயணித்தேன். அறப்போராட்டமாக இருக்க வேண்டும், ஜல்லிக்கட்டு வேண்டும் என்றே அமர்ந்திருந்தேன்.

ஆனால், அங்கு நடந்த சில விஷயங்கள் எனக்கு மிகவும் மனவேதனையை உண்டாக்கியது. ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் என்பது மாறியது. ஒரு சிலர் தேசியக் கொடியை எல்லாம் மிதித்துக் கொண்டிருந்தார்கள். நான் எப்போதுமே தேச விரோத செயலுக்கு துணை போக மாட்டேன். உடனே சிலர் "ஹிப் ஹாப் தமிழா.. நீ உண்மையான தமிழனாக இருந்தால் இங்கு வந்து போராடு" என்கிறார்கள். அங்கு நான் நிறைய புண்பட்டுவிட்டேன். சிலர் இந்து - முஸ்லிம் பிரச்சினையைப் பற்றி பேசுகிறார்கள்.

நான் கடந்த ஒரு வருடமாக இப்பிரச்சினையைப் பற்றி பேசி வருகிறேன். எனக்கு எதிராக பீட்டா அமைப்பு நிறைய பேசியுள்ளது. ஆனால், நான் எதுவுமே பேசியதில்லை. பீட்டா சொல்லும் கருத்துகளை மட்டுமே தாக்கியுள்ளேன். தற்போது என் புகைப்படத்தைப் போட்டு கெட்ட வார்த்தையில் எழுதி வைத்துள்ளார்கள். நான் அமர்ந்திருக்கும் போதே கறுப்புசட்டை அணிந்த 10 பேர் வந்து கெட்ட வார்த்தையில் கோஷம் எழுப்புகிறார்கள்.

அதற்குப் பிறகு நடந்த விஷயங்களே வேறு மாதிரி இருந்தன. ஒரு கூட்டத்தில் 10 மைக் வைத்துக் கொண்டு ஒவ்வொருவர் ஒவ்வொரு கொள்கையைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள். பெப்சி, கோக் தடை செய்ய வேண்டும் என்கிறார்கள். வாங்காமல் இருந்தாலே போதும் அது நடந்துவிடும். ஒரு கட்டம் வரை நல்லபடியாக போய் கொண்டிருந்தது. அதற்குப் பிறகு ஒரு கூட்டம் எங்கியிருந்து வந்தார்கள், என்ன நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதே புரியவில்லை.

10 வருடங்களாக போராடி கொண்டு வந்ததை மாணவர்கள் சரியாக கொண்டு போய் கொண்டிருக்கிறார்கள். அதற்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் உறுதுணையாக இருக்கிறார்கள். திடீரென்று அங்கு அங்கு ஒரு கூட்டம் முளைக்கிறது.

ஜல்லிக்கட்டுக்காக கூடிய இப்போராட்டம், திசைமாறி எங்கேயோ போய் கொண்டிருக்கிறது. மெரினாவுக்கு இன்னும் நான் செல்லவில்லை. அங்கு போகாததால் அதைப் பற்றி நான் பேச முடியாது. ஜல்லிக்கட்டை நோக்கி இப்போராட்டம் தொடங்கப்பட்டதால் மட்டுமே, இதில் முழு மூச்சாக பங்கெடுத்தேன். ஆனால், அங்கு இந்துத்துவா பற்றியெல்லாம் காகிதம் கொடுக்கிறார்கள்.

மாணவர்கள் அத்தனை பேரும் அமர்ந்துள்ள இடத்தில் ஜல்லிக்கட்டுக்காக நல்ல விதைகளை விதைத்தோம். அந்த விதைகள் முளைத்து காடாகும் சமயத்தில், இந்த மாதிரி விஷ விதைகள் முளைப்பதில் உடன்பாடில்லை. இது வேறு எங்கோ சென்று கொண்டிருக்கிறது .கோயம்புத்தூரிலிருந்து கிளம்பி இனிமேல் இதில் பங்கெடுக்கக் கூடாது, என முடிவு செய்தேன்.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு இச்சட்டம் நிரந்தர சட்டம் என்கிறார். அங்கிருந்து தான் நானே தெரிந்து கொள்கிறேன். இந்தப் போராட்டத்தில் தேச விரோதத்துக்கு உண்டான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதற்கெல்லாம் தனியாக வேண்டுமானால் போராடலாம். இந்த மாணவர்கள் ஒன்று கூடியிருப்பதில் விஷ விதைகள் விதைப்பதற்கு நான் உடன்பட மாட்டேன். எனது புகைப்படத்தை வைத்து போராட்டம் செய்வது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

நல்ல தீர்வு வேண்டும் என நானும் வேண்டி வருகிறேன். ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும் என்பது என் ஆசை. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்களுக்குள் இந்த விஷ விதைகளை விதைக்கிறார்களே என்று நினைக்கும் போது கஷ்டமாக இருக்கிறது. தேவையில்லாமல் இப்போராட்டத்தை திசை திருப்பி பற்ற வைக்கிறார்கள்.

போராட்டத்துக்கு வேறு ஒரு கலர் அடிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால்தான் விலகிவிட்டேன். என்ன பிரச்சினைக்கு கூடினார்களோ, அதை விடுத்து என்னவெல்லாமோ பேசுகிறோம். வதந்திகளை பரப்பி இப்பிரச்சினையை வேறு எங்கோ கொண்டு செல்லாதீர்கள். இது எனது அன்பான வேண்டுகோள்'' என்று ஆதி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x