Last Updated : 11 Mar, 2017 11:12 AM

 

Published : 11 Mar 2017 11:12 AM
Last Updated : 11 Mar 2017 11:12 AM

ஜக்குவின் பார்வை: மொட்ட சிவா கெட்ட சிவா எப்படி?

ஜக்குவும் மக்குவும் நண்பர்கள். ஜக்கு மட்டும் மொட்ட சிவா கெட்ட சிவா படம் பார்த்துவிட்டு அறைக்கு வந்தான். தன்னைப் படம் பார்க்க அழைக்கவில்லை என்று மக்குவுக்கு பயங்கர கோபம்.

மக்கு: டேய் ஜக்கு. என்னை விட்டு படம் பார்த்துட்டல்ல.

ஜக்கு: திடீர்னு கிளம்புனேன் மக்கு. அதான் கூப்பிட முடியலை.

மக்கு: அதுக்கு ஸாரி கூட சொல்லலை

ஜக்கு: ஸாரியா? நியாயமா நீதான் எனக்கு தேங்க்ஸ் சொல்லணும்.

மக்கு: சும்மா சீன் போடாதே. படம் எப்படி?

ஜக்கு: ஒரு நல்ல போலீஸ் அதிகாரி. வில்லன்களுக்கு துணையா போற ஒரு போலீஸ் அதிகாரி. இவங்க ரெண்டு பேரும்...

மக்கு: நிறுத்துடா. மீதியை நான் சொல்றேன். தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் சண்டை. நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் சண்டை. அதே ஊரே வேடிக்கை பார்க்குது. அதானே?

ஜக்கு: லாரன்ஸ் பேய்ப் படத்துல பேசுற வசனமா சொல்ற. அப்படி எல்லாம் இல்லைப்பா. என்னை சொல்லவிடு.

மக்கு: சொல்லித் தொலை.

ஜக்கு: அந்த நேர்மையில்லாத போலீஸ் அதிகாரி லாரன்ஸ், நேர்மையான போலீஸ் அதிகாரி சத்யராஜ். அவரோட பையன்தான் லாரன்ஸ். அம்மா சுகன்யா.

மக்கு: அப்போ வால்டர் வெற்றிவேல் பார்ட் 2 படமா?

ஜக்கு: மக்கு...மக்கு... அவ்ளோ யோசிக்கக் கூடாது. அப்புறம் அன்பு, மனிதநேயம்னு தன்னை பாசக்காரனா நிரூபிக்க லாரன்ஸ் எங்கேதான் போவார்?

மக்கு: எப்பவுமே அவருக்குன்னு ஒரு டெம்ப்ளேட் இருக்கே. மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள்னு எல்லாரையும் 'சரியா' பயன்படுத்திப்பாரே!

ஜக்கு: ஆமாம், அவங்க எல்லாம் இதுலயும் இருக்காங்க. அவங்களைப் பார்த்துதான் லாரன்ஸுக்கு அன்பு, கண்ணீர் பொங்கி வருது.

மக்கு: அப்போ காமெடிக்கு கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினின்னு அவரோட கம்பெனி ஆர்டிஸ்ட்டுகள் இருப்பாங்களே!

ஜக்கு: கரெக்ட். கூடவே, மயில்சாமி, சாம்ஸ், சதீஷ், 'மகாநதி' சங்கர், 'நான் கடவுள்' ராஜேந்திரன்,மதன் பாப், தம்பி ராமையா, பாண்டு, மனோபாலா, விடிவி கணேஷ்னு ஒரு கூட்டமே இருக்கு.

மக்கு: அப்போ செம்ம காமெடி இருக்கா?

ஜக்கு: காமெடியர்கள் இருக்காங்க. காமெடி இல்லை.

மக்கு: அப்போ எப்படிதான் கதை நகருது?

ஜக்கு: லாரன்ஸோட படங்கள் பார்த்திருக்கேல்ல. நீயே சொல்லு.

மக்கு: யாருக்காவது லாரன்ஸ் உதவி செய்வாரு. அவங்களுக்கு ஆபத்து வரும். ஆபத்து தர்றவங்களை போட்டு புரட்டி எடுப்பாரு. ஒரு மதம் சம்பந்தமான நபருக்கு அறிவுரை சொல்லி திருத்துவாரு. இதனால லாரன்ஸ் மேல மாஸ் இமேஜ் உருவாகும். ஹீரோயினுக்கு அவரை பிடிச்சுப் போய்டும். லவ் பண்ணுவாங்க. இதானே?

ஜக்கு: போஸ்டர் பார்த்தே 'பிரம்மாதமா' கதை சொல்றியேப்பா.

மக்கு: இது கூட தெரியாதா? போலீஸ் படம்னா ரவுடி போலீஸ், நேர்மையான போலீஸ், பாசமான போலீஸ், மோசமான போலீஸ், கறார் போலீஸ், கண்ணிய போலீஸ்னு நிறைய பேர் இருக்காங்க.

டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார் பாடுறது, பஞ்ச் டயலாக் பேசுறது, பீர்ல முகத்தை கழுவுறதுன்னு எத்தனை போலீஸைப் பார்த்திருக்கோம். ஆனா, லாரன்ஸ் வேற லெவல் போலீஸ்னு என்னாலயே யூகிக்க முடியும்ல.

ஜக்கு: படம் ஆரம்பிச்சு ஒரு மணி நேரம் கழிச்சு கதைக்கு வர்றாங்க.

மக்கு: காமெடி, டான்ஸ்ல லாரன்ஸ் பின்னி எடுப்பார்ல

ஜக்கு: அதெல்லாம் சரி.ஆனா, எதுவும் ஒட்டாம இருக்கு. லாரன்ஸ் பஞ்ச் டயலாக் பேசுனா கூட தாங்கிக்கலாம். ஆனா, பழமொழி- புதுமொழி சொல்றேன்னு அவருக்கே புரியாம பேசுறாரு. சிலசமயம் கேமராவை ஆஃப் பண்ண மறந்துட்டாங்களான்னு கூட தெரியலை. நான் ஸ்டாப்பா பேசிக்கிட்டே இருக்காரு. காதுல அவ்ளோ சத்தம்...ச்சீ... ரத்தம்.

மக்கு: லாரன்ஸ் போலீஸ் டிரஸ்ல பார்க்க கேரக்டருக்கு ஏத்த மாதிரி தெரிஞ்சாரே?

ஜக்கு: அது போதுமா? தெனாவட்டா, திமிரா ரெண்டு மேல் பட்டன் போடாம காக்கிசட்டையில வந்தா கம்பீரம்னு அர்த்தம் ஆகிடுமா. அதுக்கான ஆட்டிட்யூட் இல்லையே தலைவா?

மக்கு: ரொம்ப டேமேஜ் பண்றியே..

ஜக்கு: உள்ளதை சொன்னா ரீலு அறுந்துடும்பா..

மக்கு: லாரன்ஸ் இந்தப் படத்துல வேற என்ன ஸ்பெஷலா பண்ணியிருக்கார்?

ஜக்கு: எம்.ஜி.ஆர் பாட்டு ஒண்ணு ரீமிக்ஸ் பண்ணி இருக்காங்க. பாட்டு முடிஞ்சதும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடணும்னு சொல்றார். அந்த ஆடலுடன் பாடலைக் கேட்டு பாட்டு ரொம்ப ஆபாசம்பா.. இதைத் தவிர முக்கியமான விஷயம், மக்கள் சூப்பர் ஸ்டார்னு லாரன்ஸுக்கு பட்டம் கொடுத்திருக்காங்க.

மக்கு: மக்கள் சூப்பர் ஸ்டார்னா?

ஜக்கு: மக்கள் திலகம் + சூப்பர் ஸ்டார் = மக்கள் சூப்பர் ஸ்டார்.

மக்கு: அப்போ திலகம் எங்கே போச்சு?

ஜக்கு: தியேட்டர்ல படம் பார்க்க வந்த ரசிகர்களோட நெற்றியில போட்டாச்சு.

மக்கு: நிஜமாத்தான் சொல்றியா? ('கற்றது தமிழ்' அஞ்சலி போல)

ஜக்கு: லாரன்ஸ் படத்துல வர்ற பேய் மேல சத்தியமா

மக்கு: அப்போ நிக்கி கல்ராணி, சத்யராஜ், வில்லன்?

ஜக்கு: ஒப்புக்கு ஹீரோயினா வந்துபோறாங்க. சத்யராஜ்... அவர் கெரகத்தை என்னன்னு சொல்ல. கட்டப்பா இந்தப் படத்துல ரொம்ப பாவம்பா. வில்லன்கள் அஷுதோஷ் ராணாவும், வம்சி கிருஷ்ணாவும் உதார் விட்டுக்கிட்டே இருக்காங்க.

மக்கு: ஏன் டா உருப்படியா ஒரு விஷயம் கூட இல்லையா?

ஜக்கு: ஒரு சீன் மட்டும் ரசிகர்களை திருப்திப்படுத்துது. வில்லன்கள் ரெண்டு பேரை லாரன்ஸ் கைது செய்ற காட்சி.

மக்கு: என்னப்பா இப்படி சொல்ற?

ஜக்கு: ஸாரி மை ஃப்ரெண்ட்!

மக்கு: இல்லை தெய்வமே... நீ சொன்ன மாதிரி நான் தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x