Published : 06 Oct 2016 10:28 AM
Last Updated : 06 Oct 2016 10:28 AM

‘கொடி’ படத்தில் நடித்த பிறகு இரட்டை வேடங்களில் நடித்தவர்கள் மீது பெரிய மரியாதை வந்தது: நடிகர் தனுஷ் கருத்து

‘கொடி’ படத்தில் நடித்த பிறகு இரட்டை வேடங்களில் நடித்தவர்கள் மீது பெரிய மரியாதை வந்தது என்று நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

துரை.செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ், த்ரிஷா, அனுபமா, காளி வெங்கட் நடிக்கும் ‘கொடி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. அப்போது நடிகர் தனுஷ் ‘கொடி’ திரைப்படம், நடிகை த்ரிஷா, ‘வடசென்னை’ திரைப்படம் என பல்வேறு விஷயங்களைப் பற்றி நிருபர்களிடம் பேசினார். அவர் பேசியதிலிருந்து:

‘கொடி’ படத்தில் நான் இரட்டை வேடத்தில் நடித்துள்ளேன். இரட்டை வேடங்களில் நடிக்கும் முதல் படம் இது. இது அரசியல் சார்ந்த படமாக இருக்கும். அதே நேரத்தில் அரசியலை நையாண்டி செய்யும் படமாக இருக்காது. இரட்டை வேடத்தில் நடிப்பது எனக்கு புதிதாக இருந்தது. இதில் நடித்த பிறகு இரட்டை வேடங்களில் நடித்தவர்கள் மீது பெரிய மரியாதை வந்தது. குடும்பத்துடன் பார்க்கக் கூடிய ஒரு கமர்ஷியல் படமாக ‘கொடி’ இருக்கும்.

த்ரிஷா

ஒரு சில காரணங்களால் ‘ஆடுகளம்’ படத்தில் த்ரிஷாவுடன் நடிக்க முடியாமல் போய்விட்டது. இந்த கதையில் வரும் நாயகி கதாபாத்திரம் அழுத்தமானது என்பதால் இயக்குநர்தான் த்ரிஷா நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார். அவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

இயக்கம்

‘பவர்பாண்டி’ படத்தை இயக்குவதன் மூலம் திரையுலகில் கடினமான வேலை இயக்குநர் வேலைதான் என்பதைப் புரிந்துகொண்டேன். ஒரு சில கதைகள் சரியான நபரைப் போய்ச் சேராது. ‘பவர்பாண்டி’ படம் ராஜ்கிரண் சாரை சரியாக போய் சேர்ந்திருக்கிறது. ராஜ்கிரண் சார் ஒரு நல்ல மனிதர், நடிகர். இப்படத்தில் அவர் சண்டைக் கலைஞராக நடித்திருக்கிறார். படத்தின் நாயகி யார் என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை. ‘பவர் பாண்டி’ படத்தின் கதையை 3 ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டேன். ஒன்றரை வருடங்களுக்கு முன்புதான் ஐஸ்வர்யா ‘சினிமா வீரன்’ ஆவணப் படத்தை எடுக்க ஆரம்பித்தார். எதையுமே நாங்கள் திட்டமிடவில்லை. தானாக அமைந்ததுதான்.

ஐஸ்வர்யா இயக்கும் படத்தை ‘வொண்டர்பார்’ நிறுவனம் தயாரிக்கிறது. அதில் நான் நடிப்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. படத்தின் கதை விவாதம் நடந்துகொண்டு இருக்கிறது. செளந்தர்யா இயக்கும் படத்தில் நான் நடிப்பதும் இன்னும் முடிவாகவில்லை. அந்த படமும் விவாத அளவில் மட்டுமே இருக்கிறது. அனைவருமே ஒரு குடும்பம் என்பதால் கதைகளைப் பற்றி ஒன்றாக அமர்ந்து பேசுவோம்.

ரஜினி படம்

ரஜினி சார் நடிக்கும் படத்தை தயாரிப்பதை மிகப்பெரிய கவுரவமாகவும் பெருமையாகவும் பார்க்கிறேன். அதை சரியாக செய்துவிட வேண்டும் என்ற மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. அடுத்த ஆண்டில் படத்தை தொடங்கலாம் என்று இருக்கிறோம்.

வடசென்னை

எனக்கும் வெற்றிமாறன் சாருக்கும் கனவுப் படமாக ‘வடசென்னை’ இருக்கிறது. இப்படத்தின் 40% படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும். என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம் இது. ஒரே பாகத்தில் அப்படத்தின் கதையை அடக்க முடியாது. ஒரே பாகமாக அதை எடுத்தால் 9 மணி நேரம் வரும். அதில் கிளைக் கதைகள் நிறைய உள்ளன.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x