Published : 20 Sep 2015 09:51 AM
Last Updated : 20 Sep 2015 09:51 AM

கபாலியில் நடிக்க முடியாததில் எனக்கு வருத்தம்தான்: பிரகாஷ்ராஜ் நேர்காணல்

இந்தியளவில் அதிகமாக மொழிப் படங்களில் நடித்து வருபவர் பிரகாஷ்ராஜ். நடிப்பைத்தாண்டி தற்போது தெலங்கானாவில் உள்ள கிராமத்தை தத்தெடுத்திருக்கிறார். 'தூங்காவனம்' படத்துக்கான சென்னை வந்திருந்தவரிடம் உரையாடியதில் இருந்து.

பிரகாஷ்ராஜ் தொண்டு நிறுவனம் ஆரம்பித்தற்கான காரணம் என்ன?

வாழ்க்கைக்கு திருப்பிக் கொடுக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது. 'ரூணம்' என்ற ஒரு வார்த்தை இருக்கிறது. கடனை அடைப்பது என்று சொல்வார்கள். தேவைகளை, பசியை ஜெயித்த பிறகு கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. அவற்றை அப்படியே திருப்பிக் கொடுக்கணும். என்னிடம் அதிகமாக இருப்பதே, அடுத்தவனுக்கு கொடுப்பதற்கு தான். மனிதர்கள், மழை, பூமி, நதி உள்ளிட்ட அனைத்துமே நமக்கு கொடுத்த மாதிரி தான் நாமும் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். நதியின் குணம் மனிதர்களுக்கு வர வேண்டும். அது தான் அழகு, அது தான் இயல்பு. ஒருத்தான் உயர்ந்தான் என்றால் அதன் அடையாளம் என்ன? அவன் உயர்ந்ததால் எத்தனைப் பேரை உயர்த்தினான் என்பது தான். அது தான் உயர்ந்தவனின் அடையாளம். அது தான் பிரகாஷ்ராஜ் தொண்டு நிறுவனம்.

கிராமத்தைத் தத்தெடுத்து நீங்கள் மேற்கொள்ள இருக்கும் பணிகள் குறித்துச் சொல்லுங்கள்..

ஒரு ஊரில் இருக்கும் மக்கள், பக்கத்தில் இருக்கும் மக்கள் அவர்களுக்கு சில கஷ்டங்கள், தேவைகள் இருக்கிறது. அதை நான் மட்டும் கொடுக்க தேவையில்லை, நான் கொடுத்தால் என்னுடன் சேர்வதற்கு 10 பேர் இருக்கிறார்கள். பெண் குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்கிறேன், இதை மட்டும் பண்ணுகிறேன் என்று சொல்வதில் அர்த்தமில்லை. ஒரு சமூகத்தை முழுமையாக பார்க்க வேண்டியதிருக்கிறது. அதனால் தான் ஒரு ஊரையே எடுத்தேன். அங்கு குழந்தைகள், இளைஞர்கள், முதியோர்கள் என அனைத்து தரப்பினரும், வெவ்வேறு தொழில் செய்பவர்களும் இருக்கிறார்கள். ஒரு கிராமத்துக்கான அடையாளத்துக்கு உயிரூட்ட முடிந்தால் நன்றாக இருக்கும் என தீர்மானித்தேன். இனிமேல் என்னுடைய படங்களின் ஊதியத்தில் ஒரு பகுதி எனது தொண்டு நிறுவனத்துக்குள் வரும். அதற்கான திறமையான ஆட்களை வைத்து சிறந்த முறையில் ஒரு கிராமத்தை வடிவமைக்க திட்டமிட்டு இருக்கிறேன். அந்த கிராமம் தன் காலால் நிற்கும் அளவுக்கு வடிவமைத்து கொடுத்துவிட்டு அடுத்த கிராமத்துக்கு போய்விட வேண்டும். அப்படிப்பட்ட முயற்சியில் இறங்கியிருக்கிறேன் சந்தோஷமாக இருக்கிறது.

உங்களது நண்பர் நானா படேகரும் விவசாயிகளுக்கான உதவியை மேற்கொண்டு வருகிறார். அவருடன் இணைந்து பணியாற்றும் திட்டம் இருக்கிறதா..

நானா படேகர் போல ஒரு மூத்த கலைஞர் இதை செய்வது அதே துறையில் இருக்கும் எனக்கு பெருமையாக உள்ளது. அவர் ஒரு உந்து சக்தியைப் போல இருக்கிறார். அவரோட நிறைய உரையாடியிருக்கிறேன். அவரது சமுதாய உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதை அவர் நீண்ட காலமாக நினைத்து வந்துள்ளார். தற்போது செய்ய ஆரம்பித்துள்ளார். அவருக்கு என்னால் முடிந்த ஆதரவை தருவேன். விவாசயிகள் தற்கொலையைத் தாண்டி பொதுமக்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும் என யோசிக்க வேண்டும். இப்படி தற்கொலைகள் நடப்பதை பார்த்து எதுவும் செய்ய முடியாமல் போனால் நாம் அனைவருமே ஒரு வகையில் இதற்கு பொறுப்பானவர்கள் தான். பிரச்சினையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவிக்கரமும், நம்பிக்கையும் தர வேண்டும்.

தமிழகத்தில் கிராமங்கள் எதுவும் தத்தெடுக்கும் திட்டம் இருக்கிறதா..

கண்டிப்பாக எடுப்பேன். என்ன செய்தாலும் அரசின் ஒத்துழைப்போடு தான் செய்ய வேண்டும். மக்களால் தேர்ந்தெடுத்த அரசாங்கம் இருக்கும் போது, நான் மட்டும் தனியாக போய் செய்துவிட முடியாது. யார் சரி, யார் தப்பு என்பது எனக்கு முக்கியமில்லை. அரசு செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது, மக்களும் வேண்டும் என நினைக்கிறார்கள். அதற்கு நடுவில் நாம் அதை செய்ய வைக்க வேண்டும். ஒரு அரசின் ஒத்துழைப்போடு அவர்கள் செய்யும் காரியத்துக்கு, நாங்களும் சேவை தான் செய்ய முடியும். அது எல்லாருடைய கடமை. அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

தொடர்ச்சியாக ஒரே மாதிரியான வேடங்கள் வருவதால் தான் தமிழில் படங்களைக் குறைத்துக் கொண்டீர்களா?

எனக்கு ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப பண்ணினால் போர் அடிக்கும் இல்லையா. வில்லனாக நடித்துக் கொண்டிருக்கும் போது தன் 'மொழி', 'அபியும் நானும்', 'இருவர்', 'தூங்காவனம்', 'ஓ காதல் கண்மணி' போன்ற படங்களும் பண்ணுகிறேன். தொடர்ச்சியாக நான் வித்தியாசமான வேடங்கள் பண்ணிக் கொண்டு தான் இருக்கிறேன். தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி போன்ற மொழிகள் எல்லாம் வேற மாதிரி தான் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.

'கபாலி' படத்திலிருந்து விலகியதற்கான காரணம் என்ன?

தொடர்ச்சியாக 60 நாட்கள் கேட்டதால் கொடுக்க முடியாமல் போய்விட்டது. ரஜினி சாரோடு படம் பண்ண வேண்டும் என ஆசை தான். ஆனால் 10 மொழி படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது எல்லா படங்களையும் பார்த்து பண்ண வேண்டியதாக இருக்கிறது. 'கபாலி'யில் பண்ண முடியவில்லை என்பதில் வருத்தம் தான். ரஞ்சித் ஒரு அற்புதமான இயக்குநர், நல்ல கதை, நல்ல வித்தியாசமான ரஜினி சாரோட படமாக இருக்கும். 2 இந்தி படங்கள், மராத்தி படம், ஒரு குழந்தைகளுக்கான படம் என வரிசையாக பண்ணிக் கொண்டிருக்கிறேன். பெரிய பட்ஜெட்டில் பண்ணுவதால், மற்ற படங்களை விட்டுவிட்டு அதை மட்டுமே பண்ண வேண்டும். அதற்கான சூழல் இப்போது இல்லை.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தது தவறு, 'திப்பு சுல்தான்' படத்தில் ரஜினி நடிக்கக் கூடாது என்று கூறிவருகிறார்கள். ஒரு நடிகராக உங்களது கருத்து என்ன?

அனைவருக்குமே அவர்களை நினைத்ததைப் பண்ணும் உரிமை இருக்கிறது. யாரையும் இப்படி பண்ணக் கூடாது என்று எப்படிச் சொல்ல முடியும். ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற ஒரு கலைஞரை எப்படி ஃப்க்தவா பண்ணலாம். ஒரு மனுஷன் மாமிசம் சாப்பிட வேண்டும் என்றால் எப்படி சாப்பிடக் கூடாது என்று சொல்ல முடியும். இதெல்லாம் ரொம்ப நாள் நிற்காது. மக்கள் திரும்பிக் கேட்பார்கள். மக்களுக்காக மட்டுமே அனைத்து சட்டங்களும் இயற்றப்பட்டு இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு சேவை தான் பண்ண வேண்டும். எதையும் திணிக்க கூடாது.

திரையுலகில் அறிமுகமான போது இருந்த லட்சியத்தை அடைந்து விட்டீர்களா?

நான் என்ன ஆகப்போறேன் என்று இதுவரைக்கும் யோசித்ததே கிடையாது. லட்சியங்களைப் பற்றி கவலைப்பட்டதே இல்லை. எனக்கு எனது பயணம் மட்டும் தான் முக்கியம். அந்த பயணம், அந்த பாதை, அன்றைய புரிதலுக்கு, அன்றைய எனது தெளிவுக்கு, அன்றைய எனது மனசாட்சிக்கு என்ன சரி என்று படுகிறதோ அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறேன். வாழ்க்கை என்பது இயல்பாக தான் இருக்க வேண்டும். நல்லவனாக இருக்க வேண்டும், தெளிவாக இருக்க வேண்டும், தீவிரமாக வாழ வேண்டும், சிந்திக்க வேண்டும் அவ்வளவு தான்.

நடிப்பு, தயாரிப்பு, இயக்கம், தொண்டு நிறுவனம் என அனைத்தையும் மீறி குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க முடிகிறதா?

இவை எல்லாத்தையும் தாண்டி எனது குடும்பத்துக்கு நேரம் ஒதுக்கி இருக்கிறேன். அது போக எனக்கு இன்னும் நேரம் இருக்கிறது. ரொம்ப தீவிரமாக பணியாற்றுபவர்களுக்குத் தான் இன்னும் நேரம் இருக்கும். சோம்பேறிகளுக்குத் தான் நேரம் இருக்காது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x