Last Updated : 09 Jul, 2017 04:58 PM

 

Published : 09 Jul 2017 04:58 PM
Last Updated : 09 Jul 2017 04:58 PM

அரிசியை உருவாக்கும் விவசாயிக்கு அதன் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையில்லை: இயக்குநர் சீனு ராமசாமி வேதனை

அரிசியை உருவாக்கும் விவசாயிக்கு அதன் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையில்லை என்று இயக்குநர் சீனு ராமசாமி வேதனையுடன் குறிப்பிட்டார்.

காவிரியில் தண்ணீர் வராததால் ஏற்பட்ட விவசாய பாதிப்பு, விவசாயிகளின் தற்கொலை உள்ளிட்ட துயர சம்பவங்களை மையமாக வைத்து ‘கொலை விளையும் நிலம்’ என்ற பெயரில் ஆவணப்படம் எடுத்திருக்கிறார் க. ராஜீவ்காந்தி.

இந்த ஆவணப்படத்தின் திரையிடல் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, ஜி.வி.பிரகாஷ், இயக்குநர்கள் லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், சீனு ராமசாமி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆவணப் படத்தைப் பார்த்துவிட்டு பலரும் நெகிழ்வுடன் பேசினார்கள்

"இப்படத்தின் காட்சிகளுக்கு முன்பாக எந்தவொரு வார்த்தையுமே வரமாட்டேன் என்கிறது. உலக அரங்கில் இந்தியா என்றாலே விவசாய நாடு என்று தான் சொல்கிறார்கள். அப்படியென்றால் இந்தியாவின் உயிர்மூச்சு என்றால் விவசாயி. அந்த விவசாயில் சொந்த நாட்டில் அகதியாக, நிர்கதியாக வாழ முடியாமல் தற்கொலை செய்து கொள்வது அப்படிங்கிற அவலத்தை எதற்கும் பயப்படாமல் துணிச்சலாக காட்டியிருக்கும் ராஜீவ் காந்திக்கு வணக்கம்.

ஏறக்குறைய விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளையும் இந்த ஆவணப்படம் பேசுகிறது. இதை ஒரு கட்டுரையாக எழுதியிருந்தால் படித்துவிட்டுப் போயிருப்போம். காட்சி ஊடகத்தின் முக்கியத்துவத்தை இந்த ஆவணப் படத்தைப் பார்த்த பின்பு உணர்ந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் மொழி தோன்றுவதற்கு முன்பாக காட்சி தோன்றிவிட்டது.

காவிரி டெல்டா பகுதிகளின் அரசியல் காரணத்தை இந்த ஆவணப் படம் மிகத் தெளிவாக சொல்கிறது. அனைத்து விவசாயிகளும், விவசாய நிலத்தை விட்டுவிட்டு வெளியேறிய பிறகு நாங்கள் ரசாயன வேலை செய்யப் போகிறோம் என்பதற்காக எந்த உதவியையும் செய்யவில்லை என்பதை இந்த ஆவணப்படம் சுட்டிக்காட்டுகிறது.

இந்த நாட்டில் பல்பு தயாரிப்பவனுக்கு கூட, அதன் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையிருக்கிறது. ஆனால், அரிசியை உருவாக்கும் விவசாயிக்கு அதன் விலையை நிர்ணயம் செய்யும் உரிமையில்லை. இந்த உரிமை என்றைக்கு கிடைக்குமோ, அன்றைக்குத் தான் இந்தப் பட்டினிச் சாவு போகும். ஏனென்றால் உற்பத்தி செய்பவனுக்கு விற்கும் உரிமையில்லை. அதனால் இடைத்தரகர்கள் நம்பியே இருக்கிறான்.

காவிரி பிரச்சினையை நதிகள் இணைக்கும் திட்டம் மூலம் தான் சாத்தியம் என்பதை இந்த ஆவணப்படம் மிகச் துணிச்சலாக சொல்கிறது. இந்த தலைமுறையினரால் கையில் எடுக்கப்பட்டு, நம் கண் முன்னால் தீர்வுக்காக வந்து நிற்கிறது. இந்த ஆவணப்படத்தை தயாரித்த அனைவருக்கும் மற்றும் ஆவணப்படக்குழுவினருக்கும் எனது பாராட்டுகள், வாழ்த்துகள்" என்று பேசினார் இயக்குநர் சீனுராமசாமி

இந்நிகழ்ச்சியில் லிங்குசாமி பேசிய போது, "எனது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம். 40 வருடங்களுக்கு முன்பு பஞ்சம் பிழைப்பதற்காக தஞ்சாவூர் வந்தோம். 'ஆனந்தம்' படத்தின் முதல் காட்சியில் ரயில் வறண்ட பூமி வழியாக, பச்சையாக இருக்கும் வயல்வெளி வழியாக வருவது போன்று காட்சியமைக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், இன்று வித்தியாசம் இல்லாத அளவுக்கு வறண்டு விட்டது.

காவிரி ஆற்றில் தான் நீச்சல் கற்றுக் கொண்டேன். அவ்வப் போது ஊருக்குச் செல்லும்போது வறண்டு போன ஆற்றையும், ஊரையும் பார்க்கிறோம். எங்க பெரிய அண்ணன் தொலைபேசி வாயிலாக, விவசாயத்திற்கு ஆட்களே கிடைப்பதில்லை என சொல்வார்கள். ஆனால், இதை ஆவணப் படமாக எடுத்துப் பார்க்கும் போது வரும் உணர்வே வேறு. இந்த பதிவை செய்ய துணிந்த பத்திரிகையாளர் ராஜீவ் காந்தி, கவிதா இருவருக்கும் வாழ்த்துகள்” என்று பேசினார் லிங்குசாமி.

50 நிமிடங்கள் கொண்ட இந்த ஆவணப்படத்தில் ‘அம்மண அம்மண தேசத்துல..’ என்று தொடங்கும் பாடலை எழுதியிருப்பவர் தேசிய விருது பெற்ற ‘ஜோக்கர்’ படத்தின் இயக்குநர் ராஜுமுருகன். பாடலுக்கு இசை ஜி.வி.பிரகாஷ். ஆவணப்படத்தில் குரல் கொடுத்திருப்பவர் சமுத்திரக்கனி. இசையமைப்பாளர் ஜோஹன் இப்படத்துக்கு பின்னணி இசை அமைத்திருக்கிறார். கார்த்திக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை ராஜேஷ் கண்ணனும் ரமேஷ் யுவியும் செய்துள்ளனர். நா.சதக்கத்துல்லா, எஸ்.கவிதா இணைந்து இந்த ஆவணப் படத்தை தயாரித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x