Published : 21 Nov 2018 04:02 PM
Last Updated : 21 Nov 2018 04:02 PM

பாலிவுட் இயக்குநர்களுக்கு அறைவிட்ட‘பாகுபலி’: கரண் ஜோஹர் சிலாகிப்பு

தென்னிந்தியாவில் இருந்து இந்திக்குப் போய் இதுவரை ஒருசில படங்கள் குறிப்பிடத்தக்கப் புகழைப் பெற்றிருந்தாலும், ‘பாகுபலி’யின் வெற்றி  குறிப்பிடத்தக்க ஒன்று என பாலிவுட் முன்னணி தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கரண் ஜோஹர் கூறியுள்ளார்.

2015-ம் ஆண்டு, தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியான ‘பாகுபலி’ படத்தின் முதல் பாகம், மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்தியில் யாரும் எதிர்பாராத வண்ணம், 110 கோடி ரூபாய் வசூலையும் தாண்டி, டப்பிங் படங்களில் சாதனை படைத்தது.  ‘பாகுபலி 2’ திரைப்படமும் பல கோடிகளைக் குவித்தது. இந்தியாவில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையையும் பெற்றது.

தென்னிந்திய மொழிகளில் இருந்து இந்தியில் பல படங்கள் அவ்வப்போது டப்பிங் செய்யப்பட்டு வெளியானாலும், ‘பாகுபலி’ மட்டும் ஏன் அதிக முக்கியத்துவம் பெறுகிறது என்று, இந்தியில் படத்தை வெளியிட்ட கரண் ஜோஹர் பேசியுள்ளார்.

“பாகுபலி வரும்வரை அதுபோன்ற ஒரு பிரம்மாண்டத்தை யாருமே பார்த்ததில்லை. உணர்வுகள் அனைவருக்கும் பொதுவாக இருக்கும்போது, அதையொட்டிய கதைகளும் அனைவரையும் போய்ச் சேரும். அது எங்கு எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் சரி.

இவ்வளவு பெரிய வெற்றி அடிக்கடி நடக்காது என்பதையும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இப்படியான பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் படங்களுக்கு, வெளியீடே பெரிய நிகழ்வாக இருக்கும் படங்கள் வேண்டுமானால் இப்படியான வரவேற்பை மீண்டும் பெறலாம். ஆனால், எல்லாப் படங்களாலும் பெற்றுவிட முடியாது.

‘பாகுபலி’ படத்தின் காட்சிகளைப் பார்க்கும்போது, இந்தியாவில் எடுக்கப்பட்டுள்ள மிகப் பிரம்மாண்ட படம் இதுதான் என்று நான் சொன்னேன். முதலில் வந்த ‘பாகுபலி’ டீஸரே அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அவ்வளவு பெரிய நீர்வீழ்ச்சியை யாரும் இதுவரை திரையில் பார்த்ததில்லை. அவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்ததில்லை. இது இந்தியாவில் எடுக்கப்பட்ட படம்தானா?  எனப் பலரும் வியந்தனர். முதல் பாகம் பரிசோதனை முயற்சி, அது வெற்றி பெற்றதுமே கண்டிப்பாக 2-வது பாகம் வெற்றியடையும் என்பது தெரிந்துவிட்டது. ஏனென்றால், நடுவில் முதல் பாகம் தொலைக்காட்சியில் அவ்வளவு பார்வையாளர்களை ஈர்த்து டி.ஆர்.பி.யில் கலங்கடித்தது.

இந்தி சினிமாவில் இருப்பவர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளக் கூடாது. ஆனால், இந்தியில் பிரம்மாண்ட வெற்றிபெற்ற ஒரு படம் தெலுங்கில் எடுக்கப்பட்டது என்பதே உண்மை. வியாபார ரீதியிலும் அதுவே உண்மை. ‘பாகுபலி’ எங்களுக்கு (பாலிவுட் இயக்குநர்களுக்கு) அழகான அறை விட்டு விழிக்கச் செய்தது. நல்ல கதையை, நல்ல தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாகப் பார்க்க மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை எங்களுக்கு உணர்த்தியது.

ராஜமெளலி உணர்வுப்பூர்வமாகக் கதை சொல்வதில் வல்லவர். ஒவ்வொரு கதாபாத்திரத்துடனும் நம்மை ஒன்ற வைத்தார். முதல் பாகத்தை அவர் முடித்தவிதம், அவ்வளவு அற்புதமாக இருந்தது. கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? என்ற கேள்வி, தேசிய அளவில் பிரபலமானது. பலவிதங்களில் ‘பாகுபலி’ ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறது” என்று கரண் ஜோஹர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x