Published : 17 May 2019 09:01 AM
Last Updated : 17 May 2019 09:01 AM

பாட்டொன்று கேட்கப் பரவசம்..

ஜமுனா ராணி 81-வது பிறந்த தினம் :  மே 17

திரை இசையில் நாற்பதுகளின் இறுதி முதல் ஐம்பதுகளின் ஆரம்ப காலம் வரை எம்.எல்.வசந்தகுமாரி, பி. லீலா. ஜிக்கி ஆகியோர் முன்னணிப் பாடகியராக இருந்து வந்தனர்.

ஐம்பதுகளின் இறுதியில் பி. சுசீலா, எஸ். ஜானகி ஆகியோர் அறிமுகமாகி முன்னணிக்கு வர ஆரம்பித்தனர்.

இடைப்பட்ட கால கட்டம் ஜமுனா ராணியின் மயக்கும் குரலின் வசம் வந்த வசந்த காலம்.

ஆந்திர தேசத்தைச் சேர்ந்த ஜமுனா ராணி 17.5.1938 இல் வரதராஜுலு-திரௌபதி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார்.

அவருடைய தாயார் திரௌபதி வீணை இசைக் கலைஞர். பெண்களையே கொண்ட ஒரு வாத்தியக்குழுவைத் தொடங்கி நிர்வகித்து வந்தவர்.

ஏழு வயதில் பாட வந்த ஜமுனாராணியின் முதல் பாடல் சித்தூர் நாகய்யாவின் ‘தியாகய்யா’ தெலுங்குப் படத்தில்.

தமிழில் மாடர்ன் தியேட்டர்ஸின் ‘கல்யாணி’ படத்தில் ‘சக்ஸஸ் சக்ஸஸ்’, ‘ஒன் டூ த்ரீ’ ஆகிய இரண்டு பாடல்களைப் பாடி, பின்னணிப் பாடகியாக அறிமுகமானார் ஜமுனாராணி.

முதல் டூயட் பாடல் டி. எம். சௌந்தர்ராஜனுடன். ‘வளையாபதி’ படத்தில் ‘குலுங்கிடும் பூவில் எல்லாம்’ என்ற பாடலை எஸ்.தட்சிணா மூர்த்தியின் இசையில் முதல் டூயட் - டி.எம்.எஸ்ஸுடன் தனது பதிமூன்றாவது வயதில் பாடினார்.

இசை மேதை சி.ஆர். சுப்பராமனின் இசையில் ‘தேவதாஸ்’ படத்தில் சின்ன வயது பார்வதிக்காக இவர் பாடிய ‘ஓ தேவதாஸ்’ பாடல் இன்றளவும் காற்றலைகளில் பவனி வந்துகொண்டிருக்கிறது. ‘குலேபகாவலி’யில் ‘ஆசையும் என் நேசமும் ரத்த பாசத்தினால் கலங்குவதைப் பாராயடா’ இவரை முன்னணிப் பாடகியர் வரிசையில் சேர்த்த பாடல்.

கவியரசரின் பரிந்துரை

அந்த நாட்களில் ‘விடுதி நடனப் பாடல்களை’ எல்.ஆர். ஈஸ்வரிக்கு முன்னால் அதிகமாகப் பாடி வந்தவர் இவர்தான். அந்த நேரத்தில் வந்த ‘மகாதேவி’ படத்தில் இடம்பெற்ற ‘சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே’, ‘காமுகர் நெஞ்சில் நீதியில்லை’ பாடலும் இவருக்குப் புகழை வாங்கிக்கொடுத்தன.

‘காமுகர் நெஞ்சில் நீதியில்லை’ பாடலின் பின்னணியில் ஒரு சுவாரசியமான சம்பவம். தொடக்கத்தில் இந்தப் பாடலை ஜமுனாராணியைக் கொண்டு பாட வைப்பதில் இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் -ராமமூர்த்திக்கு விருப்பமே இல்லை. ஆனால், இவர் பெயரைப் பரிந்துரைத்த கவிஞர் கண்ணதாசனோ பிடிவாதமாக இருந்தார்.

"இந்தப் பாட்டை ஜமுனா பாடி... அது நன்றாக வராவிட்டால் இன்றைய செலவு முழுவதையும் நானே ஏற்றுக்கொள்கிறேன். நன்றாக அமைந்துவிட்டால் ஜமுனாவுக்குச் சம்பளத்தை இரட்டிப்பாக்கிக் கொடுத்துவிட வேண்டும்" என்று பந்தயம் கட்டி ஜமுனா ராணியைப் பாடவைத்தார் கவியரசர். கவிஞரின் நம்பிக்கை பொய்யாகவில்லை.

பாடல் வெகு அற்புதமாக அமைந்து மெல்லிசை மன்னர்களின் பாராட்டுக்களைப் பெற்றுத்தந்தது. இரட்டிப்பு ஊதியமும் கிடைத்தது.

தென்றாலாய்த் தீண்டிய பாடல்கள்

இவரது குரலை அதிகமாகப் பயன்படுத்திக்கொண்ட இசையமைப்பாளர் ‘திரை இசைத்திலகம்’ கே.வி.மகாதேவன்தான். அவரது இசையில் இவர் டி.எம்.சௌந்தர்ராஜனுடன் இணைந்து பாடிய ‘குமுதம்’ படத்தில் இடம்பெற்ற ‘மாமா மாமா மாமா’ பாடல் காலங்கடந்து, தலைமுறைகளை வென்று இளசுகளை இன்றும் கவர்ந்திழுக்கும் பாடலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.

‘ராணி சம்யுக்தா’ படத்தில் கே.வி.எம். இசையில் இவர் பாடிய ‘சித்திரத்தில் பெண்ணெழுதி ’ ஒரு அருமையான மெலடி.

மெல்லிசை மன்னர்களின் இசையில் கவிஞரின் ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் இவர் பாடிய ‘செந்தமிழ்த் தேன்மொழியாள்’ பாடலை இவரது அழுத்தமான தமிழ் உச்சரிப்புக்காகவே கேட்க வேண்டும். இதே பாடலை டி.ஆர். மகாலிங்கம் பாடி அடிக்கடி கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஜமுனாராணியின் குரலில் ஒரு முறை கேட்டுப்பாருங்கள். மெய்மறக்கவைக்கும்.

‘தெய்வப் பிறவி’யில் ‘தாரா தாரா வந்தாரா’, ‘காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு’. மன்னாதி மன்னனின் ‘நீயோ நானோ யார் நிலவே’ ‘பாசமலரி’ல் ‘பாட்டொன்று கேட்டேன்’ - இவையெல்லாம் மெல்லிசை மன்னர்களின் இசையில் இவரது தேன்குரலில் தென்றலாக வந்து தீண்டிய பாடல்கள்.

 ‘உத்தம புத்திர’னின் ‘யாரடி நீ மோகினி’ ராக் அண்ட் ரோல் பாணிப் பாடலில் இசைச் சக்ரவர்த்தி ஜி. ராமநாதனின் இசையில் டி.எம்.எஸ் - ஜிக்கியுடன் இணைந்து இவரும் கலக்கி இருப்பார்.

நவரச உச்சரிப்பு

1960-ல் ‘படிக்காத மேதை’ படத்தில் ‘பக்கத்திலே கன்னிப் பொண்ணிருக்கு’ பாடலில் ஏ.எல். ராகவனுடன் சேர்ந்து ‘கண்பார்வை போடுதே துடுப்பு’ என்று வார்தைகளாலேயே போடுவார் பாருங்கள் ஒரு துடுப்பு... அந்த உச்சரிப்பு ஜமுனாராணியின் தனி ஸ்டைல்.

1962-இல் வெளிவந்த ‘பலே பாண்டியா’ படத்தில் மெல்லிசை மன்னர்களின் இன்னிசையில் பி.பி.ஸ்ரீநிவாஸுடன் இவர் பாடிய ‘ஆதி மனிதன் காதலுக்குப் பின்’, ‘அத்திக்காய் காய் காய்’ பாடலும் இன்றளவும் பசுமையாக இவர் பெயரைச்சொல்லும் பாடல்களாக அமைந்துவிட்டன.

‘கொடுத்து வைத்தவள்’ படத்தில் சீர்காழி கோவிந்தராஜனுடன் இணைந்து ஜமுனாராணி பாடியிருக்கும் ‘பாலாற்றில் சேலாடுது’ என்ற அருமையான டூயட் பாடலை கே.வி. மகாதேவனின் இசையில் கேட்பவர் மனங்கள் எல்லாம் ஆடும் வண்ணம் பாடி இருக்கிறார்.

வேதாவின் இசையில் ‘சித்ராங்கி’ படத்தில் டி.எம்.எஸ்.- சுசீலாவுடன் ‘நெஞ்சினிலே நினைவு முகம்’ பாடலில் சோகத்தை அற்புதமாக வெளிப்படுத்தி இருப்பார் ஜமுனாராணி.

அறுபதுகளின் இறுதியில் கே.பாலசந்தரின் ‘இருகோடுகள்’

படத்தில் ‘புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன்’ பாடலில் முதல் சரணம் முடிந்த பிறகு வரும் வசனத்துக்குப் பிறகு பி.சுசீலா ‘புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்’ என்று எடுத்துக்கொடுக்க ‘ருக்மிணிக்காக’ என்று அழுத்தமாக ஜமுனாராணி தொடர்வார் பாருங்கள்.. காதல் கணவனை இன்னொருத்திக்கு விட்டுக்கொடுக்க மனமில்லாத மனைவியின் ‘பொசசிவ்னெஸ்’ அந்த ஒரு அழுத்தத்திலேயே அற்புதமாக வெளிப்பட்டுவிடும் வண்ணம் அசத்தி இருப்பார் ஜமுனாராணி.

ஏனோ தெரியவில்லை அதன் பிறகு அற்புதமான இந்தப் பாடகியின் குரலை திரை இசையில் யாருமே பயன்படுத்திக் கொள்ளவில்லை.

கிட்டத்தட்ட மறந்துபோயிருந்த நேரத்தில் 1987-ல் இளையராஜாவின் இசையில் நாயகன் படத்தில் ‘நான் சிரித்தால் தீபாவளி’ பாடலை எம்.எஸ்.ராஜேஸ்வரியுடன் பாடினார். அதன் பிறகு ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா’ படத்தில் சந்திரபோஸ் இசையில் ஜிக்கியுடன் இணைந்து பாடிய பாடலுக்குப் பிறகு இந்த இசைக்குயிலின் குரலை யாருமே பயன்படுத்திக்கொள்ளாதது துரதிர்ஷ்டம்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மட்டுமில்லாமல் சிங்களத் திரை உலகிலும் முதல்வரிசைப் பாடகியாக வலம்வந்த பெருமை இவருக்கு உண்டு. மறைந்த பாடகி ஜிக்கி இவரது நெருக்கமான தோழி.

“ஜிக்கியின் குரலை நான் இருக்கற வரைக்கும் ரசிகர்களுக்கு நினைவு படுத்திக்கொண்டிருப்பேன்” என்று தனது இசை நிகழ்ச்சிகள் தோறும் ஜிக்கி பாடிய பாடல்களைப் பாடி அவருக்குப் பெருமை சேர்க்கத் தவறமாட்டார்.

இனிமை, நளினம், மென்மை ஆகியவற்றின் கலவையோடு கேட்பவரைச் சொக்க வைக்கும் குரல் - இவரது குரல். அந்தக் குரலுக்கு வயது எண்பத்தொன்றா? இல்லை இல்லை.. என்றுமே இருபத்தொன்றுதான். ஏனென்றால், குரலுக்கு என்றுமே வயதாவதில்லை.

தொடர்புக்கு: pgs.melody@gmail.com

படங்கள் உதவி: ஞானம்‘மன்னாதி மன்னன்’ஜமுனா ராணி‘உத்தமபுத்திரன்’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x