Last Updated : 17 May, 2019 09:01 AM

 

Published : 17 May 2019 09:01 AM
Last Updated : 17 May 2019 09:01 AM

ஹாலிவுட் ஜன்னல்: திக்குமுக்காடும் டிவி தொகுப்பாளினி!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், அவற்றின் போட்டிப் பின்புலங்கள் ஆகியவற்றை நகைச்சுவையாகப் பதிவு செய்திருக்கிறது ‘லேட் நைட்’ திரைப்படம்.

தொலைக்காட்சி ஒன்றின் புகழ்பெற்ற பின்னிரவுப் பேச்சரங்க நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் பெண்மணிக்கு வித்தியாசமான பிரச்சினை முளைக்கிறது. ‘பெண்களுக்கு எதிராக ஒரு பெண்ணே தொகுத்து வழங்கும் பிரைம் டைம் நிகழ்ச்சி’ என பெண் பார்வையாளர்கள் பலர் குற்றம்சாட்டத் தொடங்குகிறார்கள்.

இந்த சச்சரவே பரவலான கவனத்தையும் எதிர்பார்ப்பையும் பெற்றுத் தருகிறது. இருப்பினும் ஒரு கட்டத்தில் அதிருப்தி பார்வையாளர்களின் புறக்கணிப்பால் அவரது நிகழ்ச்சி சரியத் தொடங்குகிறது.

குற்றச்சாட்டின் பின்னணியை ஆராயும் நிகழ்ச்சி தொகுப்பாளர், தொடரின் எழுத்தாளர்கள் அனைவரும் ஆண்களாக இருப்பதுதான் காரணம் என்ற முடிவுக்கு வருகிறார். எனவே, எழுத்தாளர் குழுவில் பெண் ஒருவரைப் புதிதாக ஒருவரைப் புகுத்துகிறார்.

இதற்கிடையே நிகழ்ச்சிக்கு மூடுவிழா நடத்த தொலைக்காட்சி நிறுவனம் முடிவெடுக்கிறது. புதிய பெண்ணின் உதவியுடன் அடுத்தடுத்த சவால்களை சமாளிக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர், அவற்றிலிருந்து மீண்டெழுவதுதான் ‘லேட் நைட்’ திரைப்படம்.

நகைச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் தந்திருக்கும் இந்தத் திரைப்படத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் அதனையொட்டிய அலுவலக அரசியல் களேபரங்களையும் கண்டபடி பகடி செய்திருக்கிறார்கள்.

திரையிலும் அதற்குப் பின்னேயும் பெருவாரியாகப் பெண்களே பங்களித்திருக்கிறார்கள். 60 வயதாகும் எம்மா தாம்சன் மூத்த தொலைக்காட்சித் தொகுப்பாளினியின் மிடுக்கையும் தனித்துவத் தடுமாற்றங்களையும் பிரதிபலிக்கிறார்.

அவரின் உதவியாளராக வரும் மிண்டி கேலிங் நிஜத்தில் தொலைக்காட்சி பிரபலம் என்பதால், அந்த அனுபவத்தின் அடிப்படையில் ‘லேட் நைட்’ படத்தின் திரைக்கதை உருவாக்கத்துக்குப் பொறுப்பேற்றுள்ளார்.

அப்பா தமிழர், அம்மா வங்காளி என இந்தியப் பூர்விகப் பின்னணியும் இவருக்கு உண்டு. மற்றொரு இந்திய வம்சாவளிப் பெண்ணும் தொலைக்காட்சி படைப்புகளின் வாயிலாக வளர்ந்தவருமான நிஷா கனத்ரா, திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். படம், ஜூன் முதல் வாரம் வெளியாகிறது.

‘லேட் நைட்’ முன்னோட்டத்தைக் காண இணையச் சுட்டி: https://bit.ly/2C4Itkb

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x