Published : 15 Mar 2019 11:19 AM
Last Updated : 15 Mar 2019 11:19 AM

தரைக்கு வந்த தாரகை 04: மாப்பிள்ளைக்குச் சுண்டுவிரல் இல்லை!

சொன்ன பேச்சைக் கேக்கணும்

முன்னும் பின்னும் பார்க்கணும்

நின்னு நல்லா நிமிர்ந்து பார்த்து

நேர்வழியே நடக்கணும்!

காதில் எல்லாம் வாங்கிக்கிட்டு

காற்றுவாக்கில் பறக்கவிட்டு

பாதையில் வழுக்கி விழக்கூடாது-போகும்

பாதையில் வழுக்கி விழக்கூடாது!

படம்: மக்களைப் பெற்ற மகராசி.

பானுமதி காபி குடிக்க மாட்டாரே தவிர,  அதை ருசித்து அருந்துவதை ஒரு குழந்தையைப் போல வேடிக்கை பார்ப்பார். காபிக்குப்பின் நமது முகத்தில் உற்சாகம் கூடியிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்டு பேசத் தொடங்குவார். எழுபது வயது சபலத் தாத்தாவிடமிருந்து தப்பித்த அக்கம்மாவைப் பற்றிக் கூறி முடித்த பானுமதி, நினைவுகளைத் தொடர்ந்தார்.

அப்பாவுக்குத் திடீரென்று உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. தான் உயிரோடு இருக்கும்போதே எனக்குக் கல்யாணத்தைப் பண்ணிப் பார்த்துவிட வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஒருநாள் நான் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பியபோது என் கல்யாண ஏற்பாடு பற்றிய பேச்சு காதில் விழுந்தது.

‘பையன் பி.ஏ. படிச்சிருக்கான். லட்சணமாக இருக்கான்...’ – ‘எல்லாம் சரி. சுண்டுவிரல் இல்லை என்கிறீர்களே!’ என்றாள் அம்மா. ‘கல்யாணத்துக்கும் சுண்டு விரலுக்கும் என்ன சம்பந்தம்? அது பெரிய குடும்பம். என் நண்பனின் மகன்தான் அந்தப் பையன். குழந்தையை நன்றாகப் பார்த்துக்கொள்வார்கள்’ என்றார் அப்பா. ‘அதெல்லாம் முடியாது’ என்று சொல்லிவிட்டாள் அம்மா.

பக்கத்து வீட்டு தாத்தாவும் பாட்டியும் ‘கனகத்துக்கு இப்ப 12 வயசுதானே ஆகிறது. அதுக்குள்ளே எதுக்குக் கல்யாணம்; உனக்கு உடம்பு சரியில்லை என்பதற்காக பாப்பாவைப் பலிகடா ஆக்கணுமா?’ என்று கேட்டுச் சண்டைக்கு வந்துவிட்டார்கள்.

தேடிவந்த மாப்பிள்ளை

எனக்கு வரன் பார்க்கிற விஷயம் எப்படியோ வெளியே தெரிந்துவிட்டது. ஒரு நாள் ஒரு பெரியவர் எங்கள் வீட்டுக்கு வந்தார். அப்பா வீட்டில் இல்லை. அம்மா அவரை உட்காரவைத்து விசாரித்தார். அவர் தயங்கித் தயங்கிச் சொன்ன விஷயம்.

‘எனது இரண்டாவது மனைவி இறந்துவிட்டாள். நான்கு குழந்தைகள். நிறைய சொத்து இருக்கிறது. குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள எனக்கு மூன்றாவது மனைவி தேவை. இந்த வீட்டில் ஒரு பெண் இருப்பதாகக் கேள்விப்பட்டேன் பார்க்க முடியுமா?’

அவர் கூறியதைக் கேட்டு, அம்மா புடவைத் தலைப்பால் வாயைப் பொத்திக்கொண்டுவிட்டாள். அவளுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ‘இல்லை உங்களுக்கு ஏத்தமாதிரி பெண் இந்த வீட்டில் இல்லை’ என்று கூறி அனுப்பிவிட்டாள். என்னைத் தேடிக்கொண்டுதான் இந்தக் கிழவர் வந்திருக்கிறார் என்று புரிந்தது. எனக்குள் அவமானமும் ஆத்திரமும் வெடித்தன.

கிழவர் புறப்பட எழுந்தார். அந்த நேரம் பார்த்து அப்பா வந்துவிட்டார். கிழவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு விஷயத்துக்கு வந்தார். அப்பாவுக்கு அதிர்ச்சி. என்னைக் கூப்பிட்டார். கிழவருக்கு அப்பாவைவிட வயது அதிகம். என்னைக் காட்டி, ‘இந்தப் பெண்ணுக்குத்தான் நான் வரன் தேடுகிறேன்.

எனக்கு உடம்பு சரியில்லை’ என்றார். கிழவர் அதிர்ந்து போய்விட்டார். ‘கடவுளே என் பேத்தி வயசு இருக்கும் போல் இருக்கிறதே. நான் 25 அல்லது 30 வயசு இருக்குமென்று நினைத்தேன். என்னை மன்னியுங்கள்’ என்று சொல்லிவிட்டு ஓட்டமும் நடையுமாய்ப் போய்விட்டார்.

ஆனால், அப்பா அடங்குகிற மாதிரி இல்லை. ‘நல்ல வரன் அமைய மாட்டேன் என்கிறது. குழந்தையின் ஜாதகத்தை ஜோதிடர் ராமையாவிடம் காட்டலாம் என்று பார்க்கிறேன்’ என்று சொல்லிவிட்டு குண்டூர் போனார். அங்கேதான் ராமையா இருந்தார் அவர் என் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, ‘இந்தப் பெண்ணுக்கு 18 வயதில்தான் கல்யாணம் நடக்கும். அது மட்டுமில்லை; இது சாதாரண ஜாதகம் கிடையாது.

எல்லோரையும் போல கல்யாணம் பண்ணிக்கொண்டு, குழந்தை பெற்றுக்கொண்டு, ஒரு சாதாரணப் பெண்ணாகக் குடும்பத்தைக் கவனித்துக்கொண்டு வீட்டில் அடைந்து கிடக்கப் பிறந்தவள் இல்லை இவள். கலைகளில் இவள் புகழின் உச்சத்துக்குப் போவாள் என்று தெரிகிறது’ என்று சொல்லிவிட்டார். அப்பா சந்தோஷமாக வீடுவந்து சேர்ந்தார். ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி மாதிரி என் மகள் மிகப் பெரிய பாடகியாக வருவாள். நாடே அவள் பாட்டில் மயங்கப்போகிறது’ என்றார் அம்மாவிடம்.

இந்தப் பெண்ணுக்கு நடிப்பு வராது

அடுத்த வாரம் அப்பா கோர்ட் விஷயமாகச் சென்னைக்கு புறப்பட்டுக்கொண்டிருந்தார். நான் அவருடன் சென்னைக்கு வந்தே தீருவேன் என்று அடம்பிடித்தேன். சென்னையைப் பார்க்க எனக்குக் கொள்ளை ஆசை. அப்பா முதல் தடவையாகச் சென்னைக்கு அழைத்து வந்தார். சென்னையைச் சுற்றிக் காண்பித்தார். லைட் ஹவுஸ், விலங்குக் காட்சிச்சாலை, மெரினா கடற்கரை, உயர் நீதிமன்ற வளாகம் என்று பல இடங்களுக்கும் அழைத்துப்போனார்.

சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் வால்டாக்ஸ் சாலையில் அவர் எனக்குப் புதுக் காலணிகள் வாங்கிக் கொடுத்தது நன்றாக ஞாபகம் இருக்கிறது. அவை, காலைக் கடித்து நான் ‘நொண்டி நொண்டி’ நடந்ததும் ஞாபகம் இருக்கிறது. ‘இப்போது நாம், ஸ்ரீராமபிரம்மம் வீட்டுக்குப் போகிறோம்’ என்றதும் எனக்குத் திக்கென்றது. அவர் சினிமா படங்கள் எடுக்கிறவர் ஆச்சே! அப்பாவின் நண்பர்கள் பலர் சினிமா இண்டஸ்டரியில் இருந்தார்கள். அவர்களைப் பார்க்க என்னை அழைத்துக்கொண்டு போனார்.

என்னை சினிமாவில் நடிக்க வைக்கப் பார்க்கிறாரோ என்று எனக்குப் பயம் வந்துவிட்டது. அந்தக் காலத்தில் திரைப்படத்தில் நடிப்பவர்களுக்கு மரியாதை கிடையாது. நடிகை என்றால் கீழாகப் பார்ப்பார்கள். எனக்கு நடிக்கப் பிடிக்காததற்கு அதுவும் ஒரு காரணம்.

அப்பா என் முகம்போன போக்கைப் பார்த்துவிட்டுச் சிரித்தார். ‘நீ சின்னப் பெண் அம்மா. உனக்கு சினிமாவைப் பற்றி என்ன தெரியும்? நீ அவங்களுக்கு முன்னாடி அழாம… பாடிக் காட்டினா போதும். சின்னதா ஒரு பாட்டு அவ்வளவுதான்!’ என்றார். என்றாலும், எனக்கு உள்ளுக்குள் கொஞ்சமாய் உதறியது. நண்பர்கள் ஓரிடத்தில் பாயில் உட்கார்ந்து சினிமா எடுப்பதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். நடுநாயகமாக ஸ்ரீராமபிரம்மம் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். ‘குழந்தை நன்றாகப் பாடுவாள்’ என்று அப்பா சொன்னார். அவர்கள் எடுக்கப் போகிற படத்தில் என்னை நடிக்கவைக்க விரும்புகிறார்கள் என்று தெரிந்தது.

அங்கிருந்த ஒருவர் ‘டைரக்டர் நீ பாடணும்னு ஆசைப்படுகிறார். பயப்படாமல் பாடம்மா’ என்றார். நான் ‘சக்குபாய்’ படத்தில் வரும் பாடலைப் பாடினேன். பயத்தில் என் கீச்சுக் குரல் நடுங்கியது. எப்படிப் பாடி முடித்தேன் என்றே தெரியாது. ‘குழந்தை நன்றாகத்தான் பாடுகிறாள். ஆனால், பாடறதுக்கான தைரியம் போதாது; ரொம்ப சின்னப்பெண். இவளுக்கு சினிமாவில் நடிக்க வரும்னு தோணலை’ என்பதாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு ‘அப்பாடா’ என்றிருந்தது.

‘வேறு படவாய்ப்பு வந்தால் சொல்லி அனுப்புகிறேன்’ என்று டைரக்டர் சொன்னதும் சந்தோஷமாக இருந்தது. ரயில் ஏறிப் பத்திரமாக ஊர்வந்து சேர்ந்தோம்” என்று முடித்தார் பானுமதி. பானுமதியின் எண்ணம் இவ்வாறிருக்க, விதியின் எண்ணம் வேறாக இருந்தது.

(தாரகை ஒளிரும்)
தொடர்புக்கு:- thanjavurkavirayar@gmail.com | படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x