Last Updated : 01 Mar, 2019 11:06 AM

 

Published : 01 Mar 2019 11:06 AM
Last Updated : 01 Mar 2019 11:06 AM

இதுதான் எனது முதல் படம்! - ஓவியா பேட்டி

ஓவியாவும் சர்ச்சைகளும் ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிறவி. சமீபகாலமாக அவர் ஒரு நிகழ்ச்சியில்  பேசினாலோ, ஒரு படத்தில் நடித்தாலோ அது பூதம்போல் பெருத்து வளர்ந்து வெடிக்கிறது.  சமூக வலைத்தளங்களிலோ லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரைப் பின்தொடர, ஓவியாவின் ஒவ்வொரு பதிவும் ‘லைக்’குகளால் அதிர்கிறது.

அதேநேரம்,  தற்போது ‘90 எம்.எல்’ திரைப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் ரீட்டா கதாபாத்திரத்துக்குப் பலத்த எதிர்ப்பு காட்டும் நெட்டிசன்களும் அதிகமாகவே இருக்கிறார்கள்.

அன்பையும் வெறுப்பையும் ஒருசேர எதிர்கொள்ளும் கதாநாயகி தற்போதைக்கு ஓவியாதான். அதைப் பற்றித் துளியும் கவலையில்லாமல் பேட்டி என்றதும் “ஓ.. வாங்க” என குளிர் சாரலாக நம் முன் வந்தமர்ந்தார்.

கதாநாயகியை மையப்படுத்தும் கதையில் நீங்கள் நடித்துள்ள முதல் படம். இது இவ்வளவு சர்ச்சைகளை எதிர்கொள்ள வேண்டுமா, என்ன?

ஆண் என்ன தவறுசெய்தாலும் இங்கே கேள்வியே இருக்காது. பெண் எனும்போது கூட்டம் கூட்டமாகக் கிளம்பி வந்துவிடுவார்கள். பெண் என்பவள் ஆணில் பாதி, பெண்ணுக்கும் அதே ரத்தம், அதே உணர்வு இருக்கிறது என்பதை ராக்கெட் விடும் காலத்திலும் நம்மில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

அதுதான் ‘90 எம்.எல்.’ போன்ற படங்கள் வரும்போது பதறுகிறவர்களும் அதிகமாக இருக்கிறார்கள். உண்மையில் இந்தப் படம் மிக ஜாலியான ஒரு பொழுதுபோக்குப் படம். சென்சாரில் தெளிவாக ‘ஏ’ சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த மாதிரி கதைகளில் நடிப்பதைத் தவிர்க்கலாம் அல்லவா?

எதற்காக? ஒரு நடிகை என்பவள் எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் நடிக்க வேண்டும். எனது நடிப்பு கதாபாத்திரத்துக்கானதே தவிர, அதை ஓவியாவுடன் தொடர்பு படுத்திப் பார்க்கும்போதுதான் இந்தச் சிக்கல். நீங்கள் இப்படிக் கேட்பது என் மீதான அக்கறையில் என எடுத்துக்கொள்கிறேன்.  அதேநேரம் இந்த மாதிரியான விஷயங்களை சினிமாவில் சொல்லாமல் இருக்கவும் முடியாது.

இதன் வழியே சமூகக் கருத்துகளை சொல்லவில்லை. நாட்டையே மாற்றிக்காட்டுகிறோம் என்றும் நிற்கவில்லை. நான்கு பெண்கள் ஒரு இடத்தில் இருந்தால் அவர்கள்  என்னவெல்லாம் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். அதுதான் களம். இங்கே சில பெண்கள் தங்களுக்குப் பிடித்த மாதிரி வாழ்க்கையை வாழ முடியாமல் அடக்கி வாசிக்கிறார்கள்.

அதற்குச் சமூகம் வாயிலாக நிறைய அழுத்தம் இருப்பதுதான் முக்கியக் காரணம். டீசர், ட்ரெய்லர் ரிலீஸானபோது எழுந்ததைப் போல, படம் ரிலீஸானதும் இன்னும் விமர்சனங்கள் வரலாம். அதையும் துணிவோடு எதிர்கொள்வோம். முதலில் நான் நடித்த ஒரு படம் எனக்குப் பிடிக்கவில்லை என்றால், அதை விளம்பரப்படுத்துவதை நானே விரும்ப மாட்டேன்.

குட்டையைக் குழப்பி மீன்பிடிக்கிற வித்தைதான் இந்தப் படம் என்று பேசுகிறார்களே?

நிறையவே மிகைப்படுத்து கிறீர்கள். இயக்குநர் அனிதா  இந்தக் கதையைச் சொன்னதும் எனக்கு உடனே பிடித்ததற்குக் காரணம்; அழுத்தி அழுத்தி வைக்கப்பட்ட பெண் மனத்துக்கு தரப்படும் ஒரு ஒத்தடமாக எனது கதாபாத்திரமும் தோழிகளின் கதாபாத்திரமும் இருந்ததுதான்.  படத்தில் நான் வசிக்கும் ஏரியாவில் என்னைச் சுற்றி இருக்கும் சில பெண்களின் வாழ்க்கை முறையை நான் மாற்ற முயற்சிக்கிறேன்.

படத்தில் நாங்கள் தண்ணி அடிப்பது, புகைப்பது மாதிரி காட்சிகள் இருக்கும். இந்த மாதிரியான விஷயங்கள் நிஜ வாழ்க் கைக்குப் பாதிப்புதான். இருந்தாலும் சில பெண்கள் நடைமுறை வாழ்க்கையில் அப்படியான பழக்க வழக்கங்களோடு இருக்கத்தான் செய்கிறார்கள்.

அதன் வெளிப்பாடாகத்தான் இதைப் பார்க்க வேண்டும். நாங்கள் இந்த சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக இந்தப் படத்தை எடுக்கவில்லை. சினிமா ஒருபோதும் அதைச் செய்வதில்லை. அப்படி சினிமா வழியே புத்தி சொன்னால் அதைக் கேட்டுக்கொள்ள மக்களும் தயாராக இல்லை.

சிம்பு இசையமைத்திருக்கும் படம் இது. அவரது பங்களிப்பு எப்படி இருந்தது?

நடித்திருப்பதோடு ‘மரண மட்டை’னு ஒரு பாடலையும் பாடியிருக்கிறேன். வார்த்தையாகப் பேசிவிட்டுப் போவேன்.  ஒரு நாயகி படத்தில் சிம்பு மாதிரி மாஸ் நடிகர் உள்ளே வந்தது பெரும் மகிழ்ச்சி. சிம்பு இந்தப் படத்தில் இருப்பது எங்களுக்கு முதுகெலும்பு மாதிரியென்றும் சொல்லலாம்.

‘பிக் பாஸ்’ ஓவியாவுக்கு இது இரண்டா வது இன்னிங்ஸ் என்று சொல்லலாமா?

கண்டிப்பாக. அதுவும், பல துணிச்சலான கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என நினைத்தேன். அந்த வகையில் இந்த ‘90 எம்.எல்’ படம் என்னோட முதல் படம் என்றே தோன்றுகிறது. சொந்த வாழ்க்கையில் இது எனக்கு செகண்ட் இன்னிங்க்ஸ் இல்லை. நான் சின்ன வயதில் இருந்த மாதிரி  இப்பவும் அதே துணிச்சலான பெண்ணாகவே இருக்கிறேன்.

என்னால் என்னை விட்டுக்கொடுத்து வாழ முடியாது. தவறு செய்யவில்லை எனும்போது பயம் தேவையில்லை. எப்போதுமே நாம் எடுக்கும் முடிவு களில் தெளிவாக இருந்தால்தான் நம் பாதையில் தடைகளே இருக்காது.

உங்கள் நடிப்பில் அடுத்து?

 ‘களவாணி 2’, ‘காஞ்சனா 3’ என்று அடுத்தடுத்தப் படங்களும் தயார். ‘90 எம்.எல். படத்தோட வெற்றி, அந்தப் படங்களுக்கு இன்னும் பலம் சேர்க்கும். வெயிட் பண்ணிப் பாருங்க.

படங்கள்: கோமளம் ரஞ்சித்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x