Published : 06 Dec 2018 05:51 PM
Last Updated : 06 Dec 2018 05:51 PM

சென்னை சர்வதேச திரைப்பட விழா: நாடு கடத்தப்பட்ட மகள்!

பதின்பருவத்தின் வனப்பும் துடிப்பும் நிறைந்தவள் நிஷா. உலகின் மகிழ்ச்சியான நாடாகக் கொண்டாடப்படும் நார்வேயில் குடியேறிய பாகிஸ்தானியப் பெற்றோரின் மகள். வீட்டில் உருது மொழி பேசுபவள். இஸ்லாமியப் பண்பாட்டில் இருந்து பிறழாமல், பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற மருத்துவராகும் நோக்கத்துடன் தீவிரமாகப் படித்துக்கொண்டிருக்கும் செல்ல மகள்.

பள்ளியிலோ நார்வே ஐரோப்பிய நவீனத்தைத் தழுவிக்கொண்டவள். சக விடலைப் பருவத்தினரைப் போன்று, முகப்பூச்சு களால் ஒப்பனை செய்துகொள்பவள். வீட்டுக்குத் தெரியாமல் இரவு நேரங்களில் நண்பர்களுடன் சுற்றித் திரிபவள். ஆண் நண்பர்களுடன் நெருங்கிப் பழகுபவள். அதிநவீன டெக்னோ இசைக்கு ஆடிப் பாடுபவள்.

ஓரிரவு தன் வீட்டின் படுக்கை அறையிலேயே ரகசியமாகத் தன்னுடைய நார்வே சிநேகிதனுடன் நெருக்கமாக இருக்கிறாள் நிஷா. அந்தத் தருணத்தில் தந்தையிடம் பிடிபடுகிறாள். அதிலிருந்து அவளுடைய வாழ்க்கை தலைகீழாகப் புரட்டிப்போடப்படுகிறது. இன்னும் காதலனாகிவிடாத அவளுடைய சிநேகிதனைத் தந்தை அடித்துத் துரத்துகிறார்.

இந்தச் செயலுக்கு அவளைத் தண்டிக்காவிட்டால் இனி ஊருக்குள் தலை நிமிர முடியாது என எச்சரிக்கிறார்கள் நார்வேயில் இருக்கும் அவளது உறவினர்கள். அவளின் பேச்சைக்கேட்டு மகளை பாகிஸ்தானுக்கே வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்கிறார் தந்தை. பாகிஸ்தானில் இருக்கும் கண்டிப்பு மிக்க அத்தை, மாமாவிடம் அவளை ஒப்படைக்கிறார்.

சுயத்தை மீட்டெடுக்கத் தடை

பாகிஸ்தான் சென்றதும் முதல் காரியமாக அவளுடைய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) எரிக்கப்படுகிறது. மீண்டும் அங்கிருக்கும் பள்ளி ஒன்றில் சேர்க்கப்படுகிறாள். “எதற்காக இங்கு வந்தாய்?” என்று கேட்கும் வகுப்பு மாணவிகளிடம், “என்னுடைய பெற்றோரின் பண்பாட்டைக் கற்க வரவழைக்கப்பட்டிருக்கிறேன்” என்கிறாள்.

அவர்களோ, “அதாவது உன்னுடைய பண்பாடு அப்படித்தானே?” என்று அப்பாவித்தனமாகக் கேட்கிறார்கள்.  தன்னுடைய சுயத்தை மீட்டெடுக்க முயலும்போதெல்லாம் வீட்டிலும் வெளியிலும் துன்புறுத்தப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறாள் நிஷா.

நாடு கடத்தப்பட்டவள் போலத் தன்னுடைய அடையாளத்துக்காகப் போராடுகிறாள். அதில் தனிமையின் கொடுமையை, நிராகரிப்பின் வலியைச் சுமந்து கொண்டு, சில நேரம் நேசிக்கப்பட்டும் பல நேரம் வெறுக்கப்பட்டும் அல்லாடுகிறாள் நிஷா.

16-வது சென்னை சர்வதேசப் படவிழாவில் நீங்கள் நிஷாவைச் சந்திக்க இருப்பது ‘வாட் வில் பீப்பிள் சே’ (What Will People Say) என்ற நார்வே நாட்டுப் படத்தில். அவள் படும்பாட்டைப் பார்க்கும்போது, இப்படியெல்லாம்கூட ஒருவருடைய வாழ்க்கையில் அசம்பாவிதங்கள் நிகழுமா என்ற கேள்வி நமக்கு எழுவதைத் தவிர்க்க முடியாது.

ஆனால், நீங்கள் அப்படி அதிசயிக்கத் தேவையில்லை. உண்மை யில் ‘வாட் வில் பீப்பிள் சே’-ன் கதை, அந்தப் படத்தின் இயக்குநர் இராம் ஹக்கின் வாழ்க்கை அனுபவத்தின் தொகுப்பே.

இந்தியன் பிரீமியர் காட்சி

தனக்கு நேர்ந்தவற்றைத் திரைப்படமாக்கியதன் மூலம், தங்களுடைய வீடுகளைக் காட்டிலும் தெருக்களில் பெண்கள் பாதுகாப்பாக உணருகிறார்கள் என்பதைக் காட்சிமொழியில் வடித்திருக்கிறார் நார்வே நாட்டின் நடிகையும் இயக்குநருமான இராம் ஹக். இந்தப் படம், ‘இந்தியன் பிரிமியராக’ சென்னை சர்வதேசப் படவிழாவில் திரையிடப்படுகிறது.

8 நாள் 6 திரையரங்குகள்

‘வாட் வில் பீப்பிள் சே’ படத்தின் நிஷா மட்டுமல்ல, 59 நாடுகளின் தலைசிறந்த 150 திரைப்படங்களில் நீங்கள் சந்திக்கவிருக்கும் கதாபாத்திரங்களின் வண்ணங்கள் பலவிதம். பல்வேறு கலாச்சார, வரலாற்றுப் பின்புலங்களில் இருந்து அவர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது 16-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா.

டிசம்பர் 13 தொடங்கி 20 வரை நடக்கும் இந்த 8 நாள் கொண்டாட்டத்தில், திரைப்பட ஆர்வலர்களின் அலைச்சலைப் போக்கும்விதமாக, சென்னை, அண்ணாசாலையில் அருகருகே அமைந்திருக்கும் தேவி, தேவிபாலா, அண்ணா, கேசினோ மற்றும் தாகூர் திரைப்பட மையம், ரஷ்யக் கலாச்சார மையம் உள்ளிட்ட ஆறு திரையரங்குகளில் படங்களைத் திரையிட ஏற்பாடுகளைச் செய்திருக்கிறது, கடந்த 16 ஆண்டுகளாக இத்திரைப்பட விழாவைத் திறம்பட ஒருங்கிணைத்து வரும் இண்டோசினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன்.

தமிழக அரசின் நிதி உதவி, ‘தி இந்து’ குழுமத்தின் ஊடகப் பங்கேற்பு ஆகிய சிறப்புகளும் இணைந்து கொள்ளத் தமிழகத்தின் கலாச்சாரப் பெருமிதங்களில் ஒன்றாக ஆண் டுக்கு ஆண்டு வளர்ச்சியைச் சந்தித்து வருகிறது சென்னை சர்வதேசப் படவிழா.

எண்ணிக்கை அதிகம்

இந்த ஆண்டின் சிறப்புகளைப் பற்றி இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் திரைப்படச் சங்கத்தின் செயலாளர் ஏ.தங்கராஜ் கூறும்போது  “உலக சினிமாத் திறமைகளுக்கான அங்கீகார மேடைகளாக கான், பெர்லின் சர்வதேசப் படவிழாக்கள் இருக்கின்றன.

இங்கே விருதும் கவனமும் பெறும் படங்களைத் தமிழகத்துக்குக் கொண்டுவந்துசேர்ப்பதில் எங்கள் முயற்சி முதன்மை பெறும். அந்த வகையில் இந்த ஆண்டு மே மாதம் நடந்து முடிந்த கான் படவிழாவில் தங்கப் பனை விருது வென்ற, ‘ஷாப் லிப்டர்ஸ்’ என்ற ஜப்பானியப் படத்தை, கலைவாணர் அரங்கத்தில் டிசம்பர் 13 அன்று நடைபெறவிருக்கும் தொடக்கவிழாவைத் தொடர்ந்து மாலை 6:15 மணிக்குத் திரையிடுகிறோம்.

சர்வதேசப் படவிழாக்களில் விருதுகளைக் குவித்த திரைப்படங்களைக் கொண்டுவந்து சேர்த்த விதத்தில் கடந்த ஆண்டைவிட எண்ணிக்கை அதிகம். அதேபோல 16-வது சர்வதேசப் படவிழாவுக்கு மேலும் சிறப்பு சேர்த்திருக்கும் தமிழ்ப் படங்களுக்கு இடையிலான போட்டி இந்த ஆண்டும் சூடு பிடித்திருக்கிறது.

2017, அக்டோபர் 16 முதல் 2018 அக்டோபர் 15 வரையிலான ஓராண்டு காலத்துக்குள் தணிக்கை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற நுழைவுத் தகுதியை ஏற்று விண்ணப்பித்த 20 படங்களில் இருந்து 12 படங்களை இறுதிப்போட்டிக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.” என்கிறார் ஏ. தங்கராஜ்.

திரைப்பட விழாவில் பங்கேற்றுப் படங்களைக் கண்டுகளிக்க முன்பதிவு செய்துகொள்ள வேண்டியது மிக முக்கியம்.

www.icaf.in - www.chennaifilmfest.com ஆகிய இணைய தளங்களுக்குச் சென்று முன்பதிவு செய்துகொள்ளும் அதேநேரம், 8 நாட்களும் திரையிடப்படும் படங்களைப் பற்றிய நறுக்கென்ற அறிமுகம், திரையிடப்படும் காட்சி நேரம் உள்ளிட்ட சுவாரசியமான தகவல்களை அறிந்துகொள்ள www.tamil.thehindu.com இணையதளத்தின் சிறப்புப் பக்கங்களுக்கு வருகை தாருங்கள்.

ciff-2jpgright

தமிழ்ப் படப் போட்டியில்…

தமிழ்ப் படங்களுக்கான போட்டிப் பிரிவில் மோதும், 96, அபியும் அவனும், அண்ணனுக்கு ஜே, ஜீனியஸ், இரவுக்கு ஆயிரம் கண்கள், இரும்புத் திரை, கடைக்குட்டி சிங்கம், மெர்குரி, பரியேறும் பெருமாள், ராட்சசன், வடசென்னை, வேலைக்காரன் ஆகிய 12 படங்களும் சிறப்புத் தமிழ்த் திரைப்படமாக ‘மேற்குத் தொடர்ச்சி மலை’யும் திரையிடப்படுகின்றன.

ஒலிப்பதிவுக் கலைஞராக ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தி சவுண்ட் ஸ்டோரி’ என்ற மலையாளப் படம் இந்தியன் பிரீமியராக, இந்திய பனோரமா பிரிவில் திரையிடப்பட இருக்கிறது.

இவை தவிர தெற்கு ஆப்பிரிக்க தேசங்களில் ஒன்றான ஸாம்பியா நாட்டிலிருந்து ஒரு படம், கென்யாவிலிருந்து இரு படம், லத்தின் அமெரிக்கா மற்றும் கரிபிய நாடுகளில் இருந்து 13 படங்கள் இந்தியன் பிரீமியராக திரையிடப்பட இருக்கின்றன.

 

தவறவிடக் கூடாத 12

பெர்லின் சர்வதேசப் படவிழாவில் கோல்டன் பெர்லின் பேர் விருது வென்ற ரோமானியா நாட்டின் ‘டச் மி நாட்'  (Touch Me Not),

கானில் சிறந்த இயக்குநருக்கான விருது வென்ற போலந்து நாட்டின் ‘கோல்ட்வார்’ (Cold War),

சிறந்த நடிகருக்கான விருது வென்ற இத்தாலி நாட்டின் ‘டாக்மேன்’ (Dogman),

பிரான்சுவா சலாஸ் விருது வென்ற எகிப்து நாட்டின் யோமேடின் ( Yomeddine)

தங்கப்பனை விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டு இறுதிப் பட்டியலில் இடம்பிடித்த பிரான்ஸ் நாட்டின் ‘அட் வார்’ (At War),

‘கேர்ள்ஸ் ஆஃப் தி சன்’ (Girls of the Sun) ஆகிய படங்கள்,

பெர்லின் படவிழாவில் சிறப்புக் கவனம் பெற்ற தென்கொரியப் படமான ‘ஹுயுமன், ஸ்பேஸ், டைம் அண்ட் ஹுயுமன் (Human, Space, Time and Human),

கானில் சிறந்த நடிகைக்கான விருது பெற்ற ஜெர்மன் நாட்டின் ‘இன் தி பேட்’ (In the Fade),

பெர்லினில் சில்வர் பெர்லின் பேர் விருது பெற்ற போலந்து நாட்டின் ‘மக்’ (Mug),

கானில் குயீர் பனை விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ‘ரபிகி’ (Rafiki),

ஆஸ்கரின் அயல்மொழிப்பட விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஐஸ்லாந்து நாட்டின் ‘வுமன் அட் வார்’ (Woman At War),

இந்தியாவில் முதல்முறையாகத் திரையிடப்படும் ‘வாட் வில் பீப்பள் சே’ ஆகிய 12 படங்கள் உலக சினிமா ரசிகர்கள் தவறவவிடக் கூடாதவை.

இந்தப் பன்னிரண்டில் ‘ஷாப்லிப்டர்ஸ்’, ‘கோல்ட் வார்’, ‘டாக்மேன்’, ‘யோமேடின்’, ‘அட் வார்’, ‘உமன் அட் வார்’, ஆகிய 6 படங்கள் நடந்துமுடிந்த கோவா படவிழாவிலும் திரையிடப்பட்டு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவை.


- ம.சுசித்ரா, ஆர்.சி.ஜெயந்தன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x