Last Updated : 06 Dec, 2018 05:54 PM

 

Published : 06 Dec 2018 05:54 PM
Last Updated : 06 Dec 2018 05:54 PM

சிம்மக்குரலோன் 90: பங்கேற்றோர் பார்வையில்…

முறுக்கு மீசை விழா!

தமிழ் இந்து அக மகிழ்வோடு, அவை கண்ட இவ்விழாவைக்  காண, சிவாஜியின் ரசிகனாய் வியப்பு கலந்த  வினாவோடு சென்றேன். ஓடி...ஓடி... தேடித் தேடி... ‘சிவாஜி எனும் ஆளுமை’ என்ற தலைப்பில் சிவாஜியின் வாழ்க்கையை மூன்று பாகங்கள் கொண்ட நூலாக வடித்த என் பேனாவுக்குத்  தலை கர்வம். நம்மை மிஞ்சி  என்ன பெரிய தகவலைத்  தந்து விடப்  போகிறார்கள்  என்ற திமிர்!

‘தி இந்து’ குழுமத்தின்  சார்பில் விழாவின் இறுதியில் காணொலித் தொகுப்பு  ஒன்றை  சிவாஜிக்காகத்  திரையிட்டார்கள். எவரும்  இதுவரை  சொல்லா விடயங்கள். எவரும் எட்டிப்  பார்க்காத பக்கங்கள். இந்து எனும் இதழியல் இயக்கத்தால் மட்டுமே  இது சாத்தியமாகும்.

விழா தொடங்கிய  நிமிடம்  தொடங்கி முடியும்வரை  பரவசத்தின் இன்பத் துள்ளல். ஒவ்வொரு நிமிடமும் கலைப் பட்டாம்பூச்சிகள் மகிழ்வு மத்தாப்புகளைத் தூவிக்கொண்டே இருந்தன. மொத்தத்தில்  பாரதியின்  மீசை முறுக்குபோல் கம்பீரம். சிவாஜி எனும் மகாகலைஞன்  பெயர் சுமந்த இந்து குழுமம் வாழட்டும்... மறக்க முடியாத இவ்விழாவுக்கு உழைத்த ஒவ்வொரு உள்ளங்களும்  புனிதமே.

மு.ஞா.செ.இன்பா, எழுத்தாளர், கைத்தடி பதிப்பகம்

சொன்னதைச் செய்தீர்கள்!

‘இந்து தமிழ்’ - பெருமையுடன் நடத்தும் சிம்மக் குரலோன்  நினைவுத் திருவிழா. – இதில் ‘பெருமையுடன் நடத்தும்’ என்ற இரு வார்த்தைகள் போதும்... நாங்கள் கொண்டாடும் நடிகர் திலகத்தின் அருமையைச் சொல்ல! சொன்னதை யாரும் காப்பாற்றுவதில்லை; ஆனால் இந்து தமிழ் அதைக் காப்பாற்றிவிட்டது. எத்தனை பிரம்மாண்டம், எத்தனை கச்சிதம். உச்சி முகந்து உம்மை மெச்சுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை!

நடிகர் திலகம் -வெண் திரையில் வியர்வைத் துளிகளால் எழுதப்பட்ட வெற்றி வரலாறு. அடுத்தடுத்த தலைமுறைக் கலைஞர்கள் அவரது நடிப்பாற்றில் தெறிக்கும் பாடங்களை அள்ளிப் பூசிக்கொள்ள வேண்டிய புனிதத் திருநீறு. மறக்க முடியாத மகா கலைஞனுக்கு ஒரு மெகா விழா எடுத்துப் போற்றிய இந்து தமிழுக்கு எனது இதய நன்றிகள்.

- ஆதவன் ரவி, சிவாஜி அபிமானி.

 

பரிசு ஒரு பொக்கிஷம்!

நானும் கணவரும் திருமணத்துக்கு முன்பிருந்தே சிவாஜியின் தீவிர ரசிகர்கள். அவர் நடித்த 300 படங்களில் 250 படங்கள் பார்த்திருப்போம். கணவர் பல சிவாஜி வசனங்களைப் பேசிக்காட்டுவார். சிவாஜி படப் பாடல்கள் வாழ்க்கையின் பல கட்டங்களில் ஆறுதலும் வழியும் காட்டியிருக்கின்றன. தொடக்கம் முதலே இந்து தமிழ் எங்கள் வீட்டில் ஒரு பிள்ளையைப் போல் ஆகிவிட்டது.

சிவாஜியைப் பற்றி சின்ன செய்தி அதில் வந்தாலும் என் கணவர் அதைக் கத்தரித்து வைத்துவிடுவார். சிம்மக் குரலோன் 90 போட்டி தொடங்கியதும் எங்களுக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. இரண்டில் ஒரு போட்டியிலாவது வெல்வோம் என்ற நம்பிக்கை இருந்தது. இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றோம். நீங்கள் அனுப்பிய கடிதத்துடன் விழாவுக்கு வந்தபோது இவ்வளவு உபசரித்து முன்வரிசையில் அமர வைப்பீர்கள் என்று நினைக்கவில்லை.

ராம்குமார், பிரபு ஆகியோருடன் போட்டோ எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது சிறப்பு. விழா மூன்று மணிநேரத்துடன் முடிந்ததைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இவ்வளவு சிறந்த விழாவை இரண்டு நாட்கள் நடத்தியிருக்கலாம். நீங்கள் தந்த பரிசை வாழ்நாள் முழுவதும் பாதுகாப்போம். ஏனென்றால் அதுவொரு பொக்கிஷம் என்று தெரியும்.

- சந்திரா நாராயணன் – சின்னக் காஞ்சிபுரம் - போட்டியில் பரிசு வென்ற வாசகர்

கதாசிரியர்களை நடிகர் திலகம் எவ்வளவு கொண்டாடியிருக்கிறார் என்பதை சித்ராலயா கோபுவின் ஊக்கமூட்டும் உரையின்மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது. ஒரு எழுத்தாளன் நடிகனாகவும் மிளிர்ந்தபோது அவரை வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்து பாராட்டிய சிவாஜி, நடிப்பை யார் நன்றாகச் செய்தாலும் அவர்களை மனம்விட்டுப் பாராட்ட மட்டுமல்ல, உடனுக்குடன் கற்றுக்கொடுக்கவும் தயங்காத கலைஞன்.

அதனால்தான் அவர் இருந்தபோதும் இறந்தபோதும் நடிப்புப் பல்கலைக் கழகம் என்று பாராட்டப்படுகிறார். திரை நடிப்பைப் பொறுத்தவரை சிவாஜிக்கு முன் சிவாஜிக்குப் பின் என்று பகுப்பது எத்தனை முக்கியமோ அதைப் போலவே வெளியே தெரியாத அவரது கொடையுள்ளத்தை வரும் தலைமுறைகளுக்குப் பகுத்துக் காட்ட வேண்டும்.

அதை வெளிச்சம் போட்டுக் காட்டிய இந்து தமிழ் தயாரிப்பில் திரையிடப்பட்ட சிறப்புக் காணொலி. ஒரு நாளிதழ், நடிகர் ஒருவருக்கு இத்தனை பெரிய விழாவை நடத்த முடியுமா என்ற ஆச்சரியம் ஏற்பட்டதைத் தவிர்க்க முடியவில்லை.

அஜயன்பாலா – கதாசிரியர்,  இயக்குநர்.

 

46 ஆண்டுகள் காத்திருந்தேன்!

சிம்மக் குரலோன் 90 வாசகர் போட்டிகளில் ஒன்றிலாவது நான் வெற்றிபெற்றுவிடுவேன் என்று நம்பினேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை. காரணம் நான் சிவாஜியின் தீவிர ரசிகை. ஓய்வு பெற்ற ஆசிரியர். சிவாஜி படங்களில் இடம்பெற்ற தன்னம்பிக்கை ஊட்டும் தத்துவப் பாடல்களை மாணவர்களுக்கு பாடிக் காட்டி பாடம் நடத்துவேன். அப்போது எங்கள் குடும்பம் விருதுநகர் ரயில்வே காலனியில் குடியிருந்தது. 11-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.

வசந்த மாளிகைப் படத்தைப் பார்த்து சிவாஜியை ஒரு நடிப்புக் கடவுளாக மனதில் வழிபட்ட நாட்கள். அவரை நோட்டுப் புத்தகத்தில் இங்க் பேனாவால் ஓவியமாக வரைந்து பாதுகாத்தேன். அப்போது நடிகர் திலகம் விருதுநகர் வழியே சபரிமலைக்குச் செல்கிறார் என்பதைக் கேள்விப்பட்டு தம்பியும் நானும் விரைந்தோம். அவரை ரயில் நிலையத்தில் எளிதாகச் சந்தித்தோம். நான் வரைந்த ஓவியத்தில் நடிகர் திலகம் தனது ஆட்டோகிராஃப் போட்டுக்கொடுத்து என்னைப் பாராட்டினார்.

அந்த ஓவியத்துக்குப் பொருத்தமாக நடிகர் திலகத்தின் நடிப்புத் திறமையைப் போற்றி கவிதையும் எழுதினேன். அதை 46 ஆண்டுகள் காத்திருந்து சிம்மக் குரலோன் 90 விழாவில் ராம்குமார் சாரிடம் வழங்கியது மறக்கமுடியாத அனுபவம். இந்த அரிய வாய்ப்பை வழங்கிய இந்து தமிழுக்கு என் நன்றி.

மு.மணிமேகலை – கவிஞர், சிவாஜி ரசிகை. ஓசூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x