Last Updated : 21 Sep, 2018 11:36 AM

 

Published : 21 Sep 2018 11:36 AM
Last Updated : 21 Sep 2018 11:36 AM

டிஜிட்டல் மேடை 01: அரேபிய பேயும் தேசபக்தி அரசியலும்

டிஜிட்டல் தொழில்நுட்பம், கட்டற்ற இணைய வேகம் இரண்டும் இணைந்து ஒரு பெரும் புரட்சியைத் தொடங்கி வைத்திருக்கின்றன. கைக்குள் அடங்கிய ஸ்மார்ட் கைபேசித் திரைகள், இந்தப் புதிய புரட்சியால் பொழுதுபோக்கு மற்றும் நவீனப் படைப்புகளின் புதிய முகத்தைத் திரையரங்குகளுக்கு வெளியேயும் விரியச் செய்திருக்கின்றன.

திரைப்படங்கள், குறும்படங்கள், பலவகையான தொடர்கள், ஆவணப் படங்கள் என இந்தக் கடலில் அவரவர் ரசனைக்கு ஆசை தீர முத்துக்குளிக்கலாம். மேலும், இந்தத் தளங்கள் வாயிலாகத் தனது படைப்பை முழுச் சுதந்திரத்துடன் வெளிப்படுத்தும் உரிமையும் படைப்பாளிக்கு வாய்த்திருக்கிறது. படைப்பின் இன்னொரு முனையில் இருந்தபடி அதைப் புசிக்கக் காத்திருக்கும் ரசிகனுக்கு இதுவே வரப்பிரசாதமாகி இருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் நெட்ஃபிளிக்ஸ் தனது பிரத்யேக சேவையை தொடங்கியபோது, இத்தனை அதிர்வுகள் இல்லை. இன்று ‘நெட்ஃபிளிக்ஸ் ஒரிஜினல்ஸ்’ என்ற பெயரில் ஆங்கிலத்துக்கு அப்பால் இந்தி, தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகின்றன. தொலைக்காட்சித் தொடர்களில் மூழ்கிக் கிடந்தவர்களைக் கிண்டலடித்த இளம் தலைமுறை, இன்று புதிய வெப்சீரிஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் சிலாகிக்கிறது. மாறும் இந்த போக்குகள், புதிய வரவுகள் உள்ளிட்டவற்றை விவாதித்தபடி டிஜிட்டல் மேடையில்  நாமும் நடைபோடலாம்.

திரைப்படங்களில் வரும் பேய்கள் வழக்கமாகப் பயமுறுத்தவோ திகிலூட்டவோ செய்யும். சிரிப்பூட்டும் பேய்கூட வந்திருக்கிறது. ஆனால், ஆகஸ்ட் இறுதியில் ‘நெட்ஃபிளிக்ஸ்’ வெளியிட்ட‘கௌல்’(Ghoul) தொடர் வெறுமனே பயமுறுத்துவதற்கு அப்பால் நடைமுறை அரசியல் அபத்தங்கள் பலவற்றையும் முகத்தில் அறையச் செய்கிறது.

தேசத்தில் பாசிச ஆட்சி தலையெடுக்கும் காலக் கட்டத்தில் கதை நகர்கிறது. கல்லூரிகளும் பள்ளிகளும் மூடப்பட்டு தேசபக்தியே பிரதானமாகப் புகட்டப்படுகின்றன. எதிர்ப்பவர்களும் சிறுபான்மையினரும் ராணுவ அடக்குமுறைகளுக்கு ஆளாகின்றனர். இவர்களை ‘நல்வழிப்படுத்துவதற்கும்’ விசாரிப்பதற்கும் என ஆங்காங்கே அபாயகரமான விசாரணைக் கூடங்கள் செயல்படுகின்றன.

அப்படியொரு இடத்துக்குத் தனது பயிற்சி முடியும் முன்னரே இளம் விசாரணை அதிகாரியாக நீதா ரஹீம் (ராதிகா ஆப்தே) அமர்த்தப்படுகிறார். தேசநலன் விரும்பியான இவர், மாணவர்களின் எதிர்காலத்துக்காகப் போராடும் பேராசிரியரான தன் தந்தையையே அரசிடம் காட்டிக்கொடுக்கும் அளவுக்கு அரச விசுவாசியாக இருக்கிறார். நீதா பணியேற்கும் இந்த விசாரணைக் கூடத்துக்கு முக்கியத் தீவிரவாதி ஒருவன் கொண்டுவரப்படுவதிலிருந்து கதை சூடுபிடிக்கிறது.

பார்த்துச் சலித்த வழக்கமான பேய்களுக்கு மாற்றாகப் புதிய பயமுறுத்தலை இந்தத் தொடருக்காக இறக்குமதி செய்திருக்கிறார்கள். இஸ்லாம் மார்க்க காலத்துக்கு முன்பாக அரேபிய பாலைவனத்தில் அலையும் தீய ஆவியாக உருவகிக்கப்படும் கௌலும் மனித மனங்களில் மருகும் குற்றஉணர்வைப் பிடித்துக்கொண்டு அவை நடத்தும் கோரத்தாண்டவமுமே தொடரின் திகில் பக்கங்கள்.

‘ஸோம்பி’ வகையறாவிலிருந்து கௌலை வித்தியாசப்படுத்துவதும், அதன் பின்னணிக்கு நம்பகத்தன்மை கூட்டுவதுமே கதையோட்டத்தை விறுவிறுப்பாக்குகிறது. சராசரியாக, தலா 45 நிமிடங்களுடன் மூன்று அத்தியாயங்கள் அடங்கியதாகத் தொடரின் முதல் சீஸன் அமைந்திருக்கிறது.

மும்பை வாழ் இங்கிலாந்துக் குறும்பட இயக்குநரான பாட்ரிக் கிரஹாம் தொடரை எழுதி இயக்கி உள்ளார். அமெரிக்க சி.ஐ.ஏ. வதை முகாம் ஆவணங்களின் அடிப்படையிலான கதையில், அரேபியப் பேயைக் கோத்து இந்தத் தொடரை உருவாக்கியதாக இவர் தெரிவித்துள்ளார். மாற்று முயற்சிகளை அரவணைக்கும் இயக்குநர் அனுராக் கஷ்யப் இத்தொடரின் இணை தயாரிப்பாளர்களில் ஒருவர்.

ராதிகா ஆப்தே பின்னணி தவிர்த்து பெரும்பாலான பாத்திரங்கள் அலட்சியமாகக் கையாளப்படுவதும் அவ்வப்போது இடறும் நாடகபாணி காட்சிகளும் இந்தத் தொடரின் சில நெருடல்கள். அதேநேரம், அடிப்படை உரிமைகளை நசுக்கிவிட்டு அதீத தேசபக்தியின் பெயரிலான அரச பயங்கரவாதத்தின் அபத்தங்களை தோலுரிக்கிறார்கள்.

இந்தித் தொடரான கௌல், ஆங்கிலத்துக்கு அப்பால் தமிழ், தெலுங்கு போன்ற பிராந்திய மொழிகளிலும் பார்க்கக் கிடைக்கிறது. தமிழ்ப் பதிப்பு பல இடங்களில் படுத்துவதால், சப்-டைட்டில் உதவியுடன் ஆங்கிலம் அல்லது இந்தியிலே பார்க்கலாம்.

முதன் சீஸன் முடிவில் ராதிகா ஆப்தேவின் புதிய அவதாரத்தைக் கோடிட்டு காட்டியிருப்பது அடுத்த சீஸன் மற்றும் அத்தியாயங்களுக்கான எதிர்ப்பார்ப்புகளை விதைத்திருக்கிறது.

அடுத்த வாரம்

digital 2jpg

இந்திய சந்தையில் நெட்ஃபிளிக்ஸின் பிரதான போட்டியாளரான ‘அமேசான் பிரைம் வீடியோ’ தளத்தில் தொடங்கப்பட்டிருக்கும் ‘ஹார்மனி வித் ஏ.ஆர்.ரஹ்மான்’ தொடரை அடுத்த வாரம் பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x