Published : 07 Sep 2018 10:38 AM
Last Updated : 07 Sep 2018 10:38 AM

திரைப்பள்ளி 17: ஜெயம் ரவி எனும் துப்பாக்கி!

ஒரு திரைக்கதையை எழுத எது தொடக்கப் புள்ளியாக இருக்க வேண்டும்? கதைக் கருவா, கதாபாத்திரமா என்று திரைக்கதையைப் பயிலும் மாணவர்கள் கேட்பது உண்டு. இரண்டுமே சரி என்பதுதான் சித் ஃபீல்டின் அனுபவம் வாய்ந்த பதில். மித்ரன் – சித்தார்த் அபிமன்யூ ஆகிய இரு நேரெதிர் இயக்கம் கொண்ட கதாபாத்திரங்களை உருவாக்கிவிட்டு, அவர்களைச் சுற்றி எழுதப்பட்ட திரைக்கதைதான் ‘தனி ஒருவன்’.

கதாபாத்திரங்களையும் அவர்களுக்கான தேவையையும் (Dramatic need) உருவாக்கியபின், அவர்கள் இயங்கும் உலகில் நிகழும் சம்பவங்களைப் பின்னணியாகக் கொண்டு திரைக்கதைக் கட்டிடம் எழுப்பப்பட்டிருக்கிறது.

இதற்கு மாறாக, கதைக் கருவைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு எழுதப்படும் திரைக்கதைகளில், பெரும்பாலும் முக்கியச் சம்பவமும் அதனால் ஏற்படும் தொடர் பின்விளைவுகளும் முதன்மை பெறுகின்றன. கதைக் கருவை அஸ்திவாரமாகக்கொண்டு எழுதப்படும் திரைக்கதையில், பல கதாபாத்திரங்கள் முக்கியத்துவம் பெறுவதோடு, கதை நிகழும் இடத்தின் கதையாகவும் அது மாற்றம் பெற்றுவிடும் உன்னதம் நிகழ்ந்துவிடுகிறது.

இந்த வகையில் எழுதப்பட்ட திரைக்கதைக்குத் தமிழில் ‘ஒரு கிடாயின் கருணை மனு’, சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆகிய இரண்டு சிறந்த படங்களைத் துல்லியமான உதாரணங்கள் எனலாம்.

தமிழ் சினிமாவுக்கு வெளியே கடந்த 15 ஆண்டுகளுக்குமுன் உலகம் முழுவதும் வெளியாகி, உலகின் மிக அழகான நகரங்களில் ஒன்று எனக் கருதிக்கொண்டிருந்த பிரேசில் தேசத்தின் ரியோ டி ஜெனிரோ நகரின் மற்றுமொரு வெளித்தெரியாத முகத்தையும் அங்கிருக்கும் வாழ்க்கையையும் உலகப் பார்வையாளர்கள் முன்வைத்த ‘சிட்டி ஆஃப் காட்’ படத்தை எடுத்துக்காட்டலாம்.

முரண்களும் மோதல்களும்

ஒரு சிறந்த திரைக்கதை என்பது ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே மையப்படுத்தி இயங்குவதாகவும் அதன் தேவையை நோக்கி மட்டுமே நகர்வதாகவும் அதன்பொருட்டு அது செய்யும் சாகசங்களைக் கொண்டாடுவதாகவும் மட்டுமே இருக்க முடியாது. ஆனால், ஹாலிவுட்டிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் வெளியாகும் ‘ஹீரோ’யிசத் திரைப்படங்கள் பெரும்பான்மையும் இத்தகைய ஒற்றைப் புள்ளியில் சுருங்கிவிடும் தன்மை கொண்டவையாகவே புத்தாயிரத்துக்கு முன்புவரை எழுதப்பட்டுவந்தன.

இன்று நம் ‘மாஸ்’ ஹீரோக்களுக்காக எழுதப்படும் வணிக சினிமா திரைக்கதைகள் இந்த ஒருமுகத் தன்மையிலிருந்து மெல்ல மீண்டெழுத் தொடங்கியிருப்பது தமிழ் வெகுஜன சினிமா திரைக்கதைகளின் போக்கில் சற்றே வரவேற்கத்தக்க வளர்ச்சி எனலாம்.

கதாபாத்திரம் அல்லது கதைக் கரு இரண்டில் எவ்வகை உத்தியை எடுத்துக்கொண்டாலும் திரைக்கதையின் முக்கிய உணர்ச்சிக் கூறாக முரணியக்கம் (Dialectics) பங்காற்றுகிறது. முரணியக்கம் என்ற சொல்லைக் கண்டு மிரண்டுவிட வேண்டாம். கதை நிகழும் உலகில் வாழும் ஒன்றுக்கு மேற்பட்ட கதாபாத்திரங்கள் தங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் காரணமாக மோதிக்கொள்வதாலும் தழுவிக்கொள்வதாலும் நிகழும் உணர்வுபூர்வ செயல்பாடுகளைத்தான் திரைமொழியில் முரணியக்கம் என்கிறார்கள்.

குடும்பம் என்றாலும் சமூகம் என்றாலும் வாழ்க்கையின் முக்கிய மதிப்பீடுகள் சார்ந்து மனிதர்களுக்குள் நிகழும் மோதல்களின் வழியேதான் வாழ்க்கை ஒரு நதியைப் போல் நகர்ந்துசென்றபடியிருக்கிறது. இந்த மோதலால் உருவாகும் உணர்ச்சிக் கொந்தளிப்பே காட்சிகளின் வழியான திரைக்கதையின் நாடகமயப்படுத்தல் சாத்தியமாகிறது. எனவே, கதாபாத்திரங்களுக்கு இடையில் நீங்கள் உருவாக்கும் மோதல்கள் மிகையற்ற நம்பகத் தன்மையுடன் இருக்க வேண்டும்.

அது மாஸ் ஹீரோவுக்காக எழுதப்பட்ட திரைக்கதை என்றாலும் நம்பகம் என்று வரும்போது நாயகனால் எல்லாம் கூடும் என்ற சித்தரிப்பு தற்போது வளர்ந்து நிற்கும் சினிமா ரசனைக்குமுன் எடுபடாது. இந்த இடத்தில் நாயகன் தனது ஒளிவட்டத்தைக் கழற்றி வைத்துவிட்டு, இணை, துணைக் கதாபாத்திரங்களிடம் உதவியைப் பெற்றுத் தன் தேவைக்காகப் போராடத் தொடங்குபவனான மாறிவிடுவதை இன்றைய ‘மாஸ் ஹீரோ திரைக்கதை’களில் காண முடியும்.

தனித்து இயங்காத ‘தனி இருவர்’

 “என்னைக்கு போலீஸ் ஆகணும்னு நினைச்சமோ அப்போலேர்ந்தே நாம போலீஸ்தாண்டா” என தன் சக நண்பர்களிடம் சொல்கிறான் மித்ரன். காவல் பயிற்சிக் கல்லூரியிலிருந்து இரவு நேரங்களில் வெளியேறிக் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களைத் தன் நண்பர்கள் உதவியுடன் மித்ரன் கண்டுபிடிக்கிறான்.

இதன் வழியாக நாயகன் கதாபாத்திரத்தின் வழக்கமான ஒருமுகத் தன்மையைக் குலைத்து, உதவிகள் தேவைப்படும் கதாபாத்திரமாக அதை மாற்றியதால் மித்ரன் நமக்கு நம்பகமானவனாக மாறுகிறான். சித்தார்த்தைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான போராட்டத்தில் காதலி மற்றும் நண்பர்களின் உதவியுடன் இலக்குநோக்கி மித்ரன் முன்னேறுகிறான்.

அதேபோல வில்லனாக வரும் சித்தார்த் அபிமன்யூ கதாபாத்திரம் சமூகத்தில் மரியாதைக்குரிய விஞ்ஞானி என்ற அந்தஸ்தில் இருக்கிறது. ஆனால், மொத்தக் குற்ற உலகையும் தனது நிழலுலகக் கூலிகள் உதவியுடன் நிர்வகிக்கிது. இடைத்தேர்தலில் போட்டியிட சீட் கேட்கும் இரண்டாம் கட்ட நிர்வாகி ஒருவரைக் கட்சியின் தலைவர் நாசர் கோபத்துடன் தள்ளப்போய் அவர் எதிர்பாராமல் இறந்துவிடுகிறார். கையறு நிலையில் அந்நேரத்தில் அங்கே மகனுடன் வந்திருக்கும் செங்கல்வராயனிடம் கொலைப் பழியை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சுகிறார் தலைவர்.

அப்போது, இன்று சித்தார்த் அபிமன்யூவாக மாறிவிட்ட அன்றைய சிறுவன் பழனி, தன் அப்பா செங்கல்ராயனைப் பார்த்து “ஏழையா பொறந்தது உன் தப்பு, நான் ஏழையாவே செத்தேன்னா அது என்னோட தப்பு. அந்தத் தப்பை மட்டும் நான் செஞ்சிரமாட்டேன்பா” என்று பழியை அவன் ஏற்றுக்கொண்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்குச் செல்கின்றான்.

இவன் நமது பிள்ளைதானா என ஆச்சரியமாகப் பார்க்கும் செங்கல்வராயனுக்கும் பழனிக்கும் இடையிலான தந்தை - மகன் முரண்பாடுதான் பழனி என்ற சிறுவன் சித்தார்த் அபிமன்யூ என்ற பேராசைக்காரனாக எப்படி மாறினான் என்பதை நாடகமயப்படுத்திக் காட்ட உதவியிருக்கிறது.

காவல்துறை அதிகாரிகளுக்கான பயிற்சியின் நிறைவு விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வருகிறான் ‘தி கிரேட் ஸ்காலர் அண்ட் சயிண்டிஸ்ட்’ சித்தார்த் அபிமன்யூ. அதிகாரிகளுக்கு அவன் பதக்கங்களை வழங்கும்முன்பு “வாழ்க்கையில ஒரேவொரு ஐடியாவ மட்டும் வச்சுக்கோங்க. அந்த ஒரு ஐடியாவையே வாழ்க்கையா ஆக்கிக்கோங்க. அதுதான் வெற்றியின் ரகசியம்” என்று பேசுகிறான்.

பணம், புகழ், பேராசை என்ற தேவையால் உந்தப்படும் அந்தக் கதாபாத்திரம் ஏற்கெனவே அதை வெற்றிபெற்று பத்மஸ்ரீ பட்டம் பெற்று சித்தார்த் அபிமன்யூ ஆகியிருக்கிறது. அதனிடம் பாராட்டுபெறும் மித்ரன்,

“ எனக்கும் ஒரு ஐடியா இருக்கு சார்.. நீங்க சொன்னமாதிரி அதையே என் வாழ்க்கையாக்கி ஜெயிப்பேன்” என்கிறான் மித்ரன். அந்தப் பயிற்சிக் குழுவில் சிறந்த மாணவராக விளங்கியதற்காகக் காவல்துறையால் வழங்கப்படும் கைத்துப்பாக்கியைப் பார்த்து “அழகான துப்பாக்கி” எனக் கூறி மித்ரனிடம் கொடுக்கிறான் சித்தார்த். அந்தக் காட்சி, அவ்விரு கதாபாத்திரங்களின் முரணியக்கத்தை மிகச் சிறப்பாக நாடகமயப்படுத்திய காட்சிகளில் ஒன்று.

சித்தார்த்தை வீழ்த்துவது ஒன்றையே கதாபாத்திரத் தேவையாகக் கொண்ட மித்ரனே சித்தார்த்தைத் துளைக்க இருக்கும் துப்பாக்கி என்பதை வெகுஜன சினிமாவுக்கே உரிய அழகியலுடன் திரைக்கதாசிரியர் சித்தரித்து தீவிர பொழுதுபோக்கை விரும்பும் ரசிகனின் கைதட்டல்களையும் பெற்றுகொண்டுவிடுகிறார்.

கதாநாயகன் யார்?

கதைக் கருவை தொடக்கப் புள்ளியாகக் கொண்டு எழுதப்பட்ட ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தில் கதாநாயகன் விதார்த்தா, குலதெய்வத்துக்குப் பலியிடக் கொண்டுசெல்லப்படும் ஆட்டுக் கிடாயா, அதுவும் இல்லையென்றால் அதன் திரைக்கதையில் நிகழும் முக்கியப் பிரச்சினையா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். அடுத்த வகுப்பில் அதை அலசிவிட்டு திரைக்கதை ஒன்றை எழுதப் பழகுவோம்.

தொடர்புக்கு:jesudoss.c@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x