Last Updated : 07 Sep, 2018 10:37 AM

 

Published : 07 Sep 2018 10:37 AM
Last Updated : 07 Sep 2018 10:37 AM

சி(ரி)த்ராலயா 34: கோபுவை மேடையேற்றிய மலேரியா!

நாடகத்தில் கோபு மும்முரமாக இருந்த நேரம். திடீரென்று சிவாஜி அழைத்து தாதா மிராசி இயக்கும் ‘மூன்று தெய்வங்கள்’ படத்துக்குத் திரைக்கதை, வசனம் எழுதும்படி கேட்டுக்கொண்டதால் அதில் கவனம் செலுத்தினார். அப்போது அண்ணாமலை மன்றத்தில் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு ‘காசேதான் கடவுளடா’ நாடகம் ஏற்பாடாகி அத்தனை டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டிருந்தன.

ஆனால், வெண்ணிற ஆடை மூர்த்திக்குத் திடீரென்று மலேரியா ஜுரம். நடுங்கும் காய்ச்சலில் சுருண்டுகிடந்தார் மூர்த்தி. மாலை ஆறரை மணிக்கு நாடகம். ரசிகர்கள் கூட்டம் சேரத்தொடங்கிவிட்டது. “உண்மையான காரணத்தைச் சொல்லி நாடகத்தை ரத்துசெய்துவிடலாம்” என்றபோது, அண்ணாமலை மன்றத்தினர் ஒப்புக்கொள்ளவில்லை.

உடனே மனோரமாவுக்கு ஒரு யோசனை. “கோபண்ணா எங்கே… அவர் எங்கே இருந்தாலும் தேடி கண்டுபிடிச்சு அழைச்சுக்கிட்டு வாங்க. மூர்த்தி ரோலை அவராலதான் செய்ய முடியும். அவருக்குத்தான் அந்த பாடி லாங்குவெஜ் பொருத்தமாக இருக்கும், எழுதி, இயக்கிய அவருக்கு எல்லா வசனமும் மனசுக்குள்ள அத்துப்படியா இருக்கும்” என்று சொல்ல, அடுத்த நிமிடம் கோபுவைத் தேடி அலைந்தார் யுனிட்டி கிளப்பின் செயலாளர் ராமன்.

நடிகராய் மாறிய கோபு!

கோபுவை சிவாஜி பிலிம்ஸ் அலுவலகத்தில் கண்டு கையும் மெய்யுமாக அவரைக் கைதுசெய்வதுபோல் காரில் இழுத்துப்போட்டுக்கொண்டு அண்ணாமலை மன்றத்துக்கு விரைந்தார். நரைத்த தலை விக்குடன் தயாராகக் காத்திருந்த ஒப்பனையாளர்,''வாங்க சார்... முதல் பெல் அடிச்சாச்சு என்று சொல்லி அதனை கோபுவின் தலையில் அழுத்தி மாட்டி, ஒப்புக்குக்கூட அவரிடம் ஒரு வார்த்தை கேட்காமல் ரசாயன கோந்துவைப் போட்டு ஓட்டிவிட்டு அது செட்டாக ஓங்கி அவரது தலையில் ஒரு அடியைப் போட கலங்கிப்போனார் கோபு.

பக்கத்தில் நின்ற ராமனைப் பார்த்து “ நம்ம மேக் –அப் மேனுக்கு பேமண்ட் எல்லாம் சரியாப் போறதோ?” என்று கேட்டு உறுதிப்படுத்திக்கொள்ள, இரண்டாவது மணி அடித்தது. ஆறரை மணி நாடகத்துக்கு ஆறேகாலுக்கு வந்த கோபுவை பொம்மை மாதிரி ஆட்டிவைத்தார்கள் அத்தனைபேரும். அதற்குக் காரணம், கோபுவிடம் வழிந்தோடிய நிபந்தனையற்ற அன்பும் அவரது தனி அடையாளமாக இருக்கும் எளிமையும்தான்.

என்னதான் கோபு எழுதி இயக்கிய நாடகமாக இருந்தாலும், முத்துராமன், மனோரமா ஆகிய கலைஞர்களுக்கு ஈடு கொடுத்து நடிக்க வேண்டும் அல்லவா? கோந்து போட்டு ஒட்டிய விக் அவரது தலையில் ரத்த ஓட்டத்தையே நிறுத்திவிட்டது போல் உணர, எழுதிய வசனங்கள் அத்தனையும் நொடியில் மறந்து விட்டதுபோன்ற உணர்வு.

திரை எழும்பியவுடன், நாடகத்தின் முதல் வசனத்தைக் கோபுதான் போனில் பேச வேண்டும். மேக் அப் போட்டு கொண்டு பலியாடு மாதிரி நின்ற கோபுவை நோக்கி ஓடிவந்த மனோரமா, ''கோபண்ணே,, திரை ஓட்டை வழியா பார்த்தேன். சோவும் அவங்க நாடகக்குழு காரங்க அத்தனை பெரும் வந்து முதல் வரிசையில உட்கார்ந்து இருக்காங்க. ஜமாய்ச்சு தள்ளுங்க'' என்றார்.

“அடப் பார்த்தசாரதி…! நான் நடிக்கிற நாளா பார்த்தா அவங்க வரணும்..'' என்று புலம்பியபடி நடிப்பதற்குத் தயாரானார். திரையும் எழும்பியது. மனைவிக்கு வரும் தொலைபேசியை எடுத்து அவரிடம் திட்டு வாங்கும் காட்சி.

“யாரைக் கேட்டு எனக்குவந்த போனை எடுத்தீங்க, இனிமே போனை தொடக் கூடாது!'' என்று ஆல் இந்தியா ரேடியோ லீலா சீறி விழ, ''இந்த வீட்டுல அதை மட்டும்தான் தைரியமா தொட்டுக்கிட்டு இருந்தேன். இனிமே அதையும் தொடக் கூடாதா... ரொம்ப சரி !'' என்று கோபு புலம்ப, ரசிகர்களின் கைதட்டல் அரங்கை அதிரச் செய்தது. அந்தக் கரவொலியைக் கேட்டபிறகே அப்பாடா… என்று இருந்தது கோபுவுக்கு. மூர்த்தி திரும்பி வரும் வரை, கோபுவே அந்தக் கதாபாத்திரத்தில் நடித்தார்.

இன்று எண்பத்து ஆறாவது வயதில் கோபு அதை நினைத்துப் பார்க்கிறார். கதை, வசனகர்த்தா, இயக்கத்துடன், திரைப்படத்தில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கலாமோ என்று அவருக்கு அவ்வப்போது எண்ணங்கள் எழுகின்றன. பலர் கேட்டும், இளமைப் பருவத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏனோ அவருக்கு வரவில்லையாம்.

கண்ணன் – அர்ஜுனன்

‘காசேதான் கடவுளடா’ நாடகத்தின் நூறாவது நாள் விழாவுக்கு சிவாஜி கணேசன் தலைமை வகித்து, சித்ராலயா கோபுவுக்குத் தங்கச் சங்கிலி ஒன்றை அணிவித்தார். சிறப்புப் பேச்சாளராக இயக்குநர் ஸ்ரீதர் அழைக்கப்பட்டிருந்தார். முழு நாடகத்தையும் பார்த்த சிவாஜி, மேடையேறியதும் கோபுவை மிகவும் புகழ்ந்தார்.

''முழுநீள நகைச்சுவை, நாடகத்தையோ திரைப்படத்தையோ எழுதுவது மிகக் கடினம். அதை கோபு அருமையாகக் கையாள்கிறார். அவர் எங்க வீட்டுச் செல்லப் பிள்ளை!'' என்றெல்லாம் பேச, கோபுவுக்கு உச்சி குளிர்ந்துபோனது. தொடர்ந்து மேடை ஏறிய ஸ்ரீதர், '' கோபுவை நான் பாராட்டிப் பேசினால், என்னையே நான் பாராட்டிக்கொள்வது போல! கண்ணன் - அர்ச்சுனன், பட்டி - விக்கிரமாதித்தியன், சந்திரகுப்தன் - சாணக்கியன் வரிசையில் ஸ்ரீதர் - கோபு என்று நாங்கள் அழைக்கப்படுவோம்” என்று நகைச்சுவையாகக் கூறி கைதட்டல்களைப் பெற்றுச் சென்றார்.

இயக்குநராக்கிய ஏவி.எம்.

இந்த நாடகத்தைப் படமாக்கும் உரிமையைப் பெற்ற ஏவி.எம். கோபுவையே இயக்கும்படி கூற. “எனது ஈடுபாடு முழுவதும் கதை வசனம் எழுதுவதில்தான். எனக்குத் தோதான இயக்குநர் சி.வி.ராஜேந்திரன். அவரையே இயக்குநராகப் போட்டு விடுங்களேன்!'' என கோபு சொன்னபோது, “நகைச்சுவை உணர்வு உள்ளவரால்தான் நகைச்சுவைப் படத்தை இயக்க முடியும்” என்று வலியுறுத்தி கோபுவையே பிடிவாதமாக இயக்குநராக அறிவித்தது ஏவி.எம்.

‘சித்ராலயா’வில் கூட ஒரு படத்தையும் இயக்கியிராத கோபு, அவர்கள் தன் மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்று எண்ணிக்கொண்டு பணியாற்றியபோது “ஏவி.எம். எனும் பிரம்மாண்ட பட நிறுவனத்தின் முதலாளிகளிடம் ‘பணிவு’ எனும் பாடத்தைக் கற்றுக்கொண்டேன் என்கிறார்.

தனக்கு மிகவும் ராசியான, எம்.எஸ்.வி. - வாலி கூட்டணியை இந்தப் படத்திலும் அமைத்துக்கொண்டார். முத்துராமன், லட்சுமி, மனோரமா, மூர்த்தி, ஸ்ரீகாந்த், தேங்காய் ஸ்ரீநிவாசன், ரமாப்ரபா என அனைவருமே போட்டிபோட்டுக்கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்திய ‘காசேதான் கடவுளடா’ திரைப்படம் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டுப் பெரிய வெற்றியைக் கண்டது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பிலும் அது வெளியானபின்பும் ஒரு இயக்குநராக கோபு சந்தித்த உணர்ச்சிகரமான அனுபவங்கள் பல. அவற்றில் ஒன்று ஏவி.எம்மில் “மெல்லப் பேசுங்கள் பிறர் கேட்கக் கூடாது” பாடலுக்காகப் போடப்பட்ட செட். மற்றொன்று பைலட் தியேட்டர் முன்பு ஒரே இரவில் வைக்கப்பட்ட கட் – அவுட்!

(சிரிப்பு தொடரும்)
தொடர்புக்கு: tanthehindu@gmail.com
படங்கள் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x