Published : 24 Aug 2018 09:25 AM
Last Updated : 24 Aug 2018 09:25 AM

திரைப்பள்ளி 16: இருவரில் யார் ‘தனி ஒருவன்’?

நாயகனையும் அவனது ஹீரோயிசத்தையும் முன்னிறுத்தினால் போதும் என்ற இந்திய மனப்பாங்கு, புத்தாயிரத்துக்குப்பின் வெகுவாக மாறிவருகிறது. கதாநாயகனுக்கு இணையான பலமும் சித்தரிப்பும் கொண்ட பாத்திரப் படைப்பை வில்லனுக்கும் இணைக் கதாபாத்திரங்களுக்கும் வழங்கும் ஆச்சரியம் நிகழத் தொடங்கிவிட்டது. தமிழ் வெகுஜன சினிமாவில் அப்படிச் சமீபத்தில் ஆச்சரியப்படுத்திய திரைப்படம் ‘தனி ஒருவன்’.

அதன் திரைக்கதையில் தர்க்கப் பிழைகள் (Logical Flaws) மலிந்திருந்தபோதும் நாயகனுக்குச் சமமான பாத்திரப்படைப்பை வில்லனுக்கு அமைத்திருந்தார் அதை எழுதியிருந்த இயக்குநர் மோகன் ராஜா. அதேபோல் நாயகனுக்கும் வில்லனுக்கும் இடையிலான போராட்டத்தை, இருவரும் தூரமாக இருந்து சதுரங்கம் ஆடுவதுபோல நாடகமயப்படுத்தியிருந்தது பார்வையாளர்களை இருக்கை நுனியில் அமர்ந்து, தர்க்கப் பிழைகளை மறந்து அந்தப் படத்தை ரசிக்கவைத்தது.

வடிவமைப்பின் முக்கிய சூத்திரம்

ஒரு திரைக்கதையின் முதன்மை அல்லது மையக் கதாபாத்திரம், தனது லட்சியம் அல்லது பிரச்சினையை நோக்கிய பயணத்தில் உணர்ச்சிகரமாகச் செயலாற்றுகிறது. பிரச்சினையை நோக்கி முன்னேறும்போது கதாபாத்திரத்தின் வளர்ச்சி என்பது கதையில் அதன் வீழ்ச்சியாகவும் இருக்கலாம். இந்த இடத்தில் திரைக்கதை ஆசிரியர் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

முதன்மைக் கதாபாத்திரத்தின் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதற்காக, மற்ற கதாபாத்திரங்களின் உணர்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளுக்குத் திரைக்கதையில் தேவை இருந்தும் அவற்றைக் குறைப்பது மற்றும் முழுமையை அவற்றுக்குக் கொடுக்காமல் இருப்பது பலவீனமான கதாபாத்திர வடிவமைப்புக்கு அடிகோலிவிடும்.

‘சுப்ரமணியபுரம்’ போலவே பல வெற்றிபெற்ற படங்களை ஆராய்ந்தால் இணை, துணை கதாபாத்திரங்களுக்கு தரவேண்டிய முழுமை மற்றும் முக்கியத்துவம் கதாபாத்திர வடிவமைப்பில் உருப்பெற்றிருப்பது எளிதில் புலப்பட்டுவிடும்.

அதேபோல் முதன்மைக் கதாபாத்திரத்துடன் அதற்கு இணையான, வலுவான பல இணை மற்றும் துணைக் கதாபாத்திரங்கள் இடம்பெறுவது திரைக்கதைக்குப் பன்முகத்தன்மையைத் தந்துவிடும். இந்தப் பன்முகத் தன்மை கிடைத்துவிட்டால் திரைக்கதையை நாடகமயப்படுத்துவது எளிதாகிவிடும். ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் பரமனும் அழகரும் முதன்மைக் கதாபாத்திரங்கள் என வைத்துக்கொள்ளுங்கள்.

அழகர், பரமனோடு அவர்களது மற்ற மூன்று நண்பர்கள், கனகு, அவனுடைய அண்ணன், அவருடைய மகள் துளசி, அழகரையும் பரமனையும் பிணையில் எடுக்க உதவிய சக சிறைவாசி என இணை மற்றும் துணைக் கதாபாத்திரங்களின் வடிவமைப்புக்குத் தரப்பட்டிருக்கும் முழுமை, திரைக்கதையைத் தொய்வற்ற நாடகமயப்படுத்தலுக்கு உட்படுத்த அடித்தளமாக அமைந்திருப்பதைக் கவனியுங்கள்.

கேள்விகளும் கள ஆய்வும்

தன் அப்பாவைச் சட்டமன்ற உறுப்பினர் ஆக்குவதற்காக, தான் செய்யாத கொலைக்குப் பழியை ஏற்றுக்கொண்டு சிறைக்குச் செல்லத் துணிகிறான் 12 வயதுச் சிறுவன் பழனி. அவன் கைதான செய்தி, செய்தித்தாள்களில் வெளியாகிறது. இதுபோன்ற செய்திகளை வெறும் செய்தியாக வாசித்துவிட்டுக் கடந்துசெல்ல விரும்பாத மற்றொருவன், செய்திகள் வழியே அறிந்துகொண்ட குற்றங்களுக்கு இடையிலான ஒற்றுமைகளைக் கூர்ந்து கவனிக்கிறான்.

‘ஒவ்வொரு சிறிய குற்றத்துக்குப் பின்னாலும் கண்ணுக்குப் புலப்படாத பெரிய குற்ற உலகம் இயங்குகிறது” என்ற உண்மை அவனுக்குப் புலப்படத் தொடங்குகிறது. இந்த இரு முரண்பட்ட கதாபாத்திரங்களை இணைக்கும் புள்ளியில் இருந்தே ‘தனி ஒருவன்’ திரைக்கதையின் நாடகமயமாக்கம் தொடங்குகிறது.

நாடகமயமாக்கத்துக்குக் கதாபாத்திர வடிவமைப்பே அஸ்திவாரமாக அமைகிறது. எனவே, வடிவமைப்பைத் தொடங்கும் முன் உங்கள் கதாபாத்திரம் குறித்த சில கேள்விகளை எழுப்பிக்கொள்ளுங்கள். அவற்றுக்கான பதில்கள், தர்க்கப் பொருத்தத்துடன் உங்கள் வசம் இருக்க வேண்டும். உதாரணத்துக்கு, ‘தனி ஒருவன்’ படத்தின் வில்லன் சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்தை நீங்கள் எழுதுகிறீர்கள் என்றால் சித்தார்த் அபிமன்யு என்பவன் யார், யாரெல்லாம் அவனுடைய குடும்பத்தினர், அவனது சமூக, பொருளாதாரப் பின்னணி என்ன, அவன் செய்த முதல் முக்கியமான செயல் என்ன?

அதை எந்தச் சூழ்நிலையில் அவன் செய்கிறான், அவன் செய்யும் தொடர் செயல்கள் என்ன, அவற்றால் அவனது வாழ்க்கை எப்படி மாறியது அல்லது மாறுகிறது, அவன் எந்தப் புள்ளியில் பலவீனமடைகிறான், அந்தப் பலவீனம் யாரால் நிகழ்கிறது, யாரை அவன் அழிக்க அல்லது எதிர்க்க நினைக்கிறான், எதிர்ப்பையும் சூழ்ச்சியையும் அவன் எப்படித் திட்டமிடுகிறான், வெட்டவெளிச்சமாக்கப்பட்டு அவனது முகத்திரை விலகும்போது அவனது முடிவு என்னவாகிறது என்பதுவரை கேள்விகளை அமைத்துக்கொண்டாலே பதில்களை நீங்கள் தேட ஆரம்பித்துவிடுவீர்கள்.

கதைக் கருவும் கதாபாத்திரங்களும் முடிவுசெய்யப் பட்டபின் திரைக்கதை எழுத அமர்வது பெரும்பாலும் தோல்வியில் முடியலாம். அதற்கு முன் அவை வாழும் உலகங்கள் குறித்த கதைக்கள ஆய்வைச் செய்ய வேண்டியது வெற்றிகரமான திரைக்கதையாளர் செய்ய வேண்டிய மிக முக்கியமான செயல்முறை.

சித்தார்த் அபிமன்யு மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் கிடைக்க வேண்டிய ஜெனரிக் மருந்துகளைக் கொண்டு வருவதற்கான முயற்சியை முறியடிக்கிறான். இந்த இடத்தில் ஜெனரிக் மருந்துச் சந்தை, அதைத் தடுக்கும் கார்ப்பரேட் மருந்துச் சந்தை பற்றிய ஆய்வு திரைக்கதாசிரியருக்கு அவசியமாகிறது. உள்நாடு மற்றும் பன்னாட்டு மருந்து கம்பெனிகள், இந்தியா போன்ற நாடுகளைச் சந்தையாகப் பயன்படுத்திக்கொள்ளக் கடைப்பிடிக்கும் லாபி, கார்ப்பரேட் என்ற பெயரில் வெகுசிலரின் லாப வெறிக்காக அரசியல்வாதிகள் முதலாளிகளுக்கு எத்தனை விசுவாசமாக இருக்கிறார்கள் என்பது பற்றி ஆய்வும் திரைக்கதை ஆசிரியருக்குத் தேவைப்பட்டிருக்கிறது.

மூன்று குணங்கள்

கதாபாத்திரங்கள் பற்றிய அடிப்படையான கேள்விகள், அவை வாழும் உலகின் கள ஆய்வு ஆகியவற்றுடன் அவற்றிடம் மூன்று குணங்கள் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். நாயகன், வில்லன் அல்லது இணை, துணைக் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அவை மூன்று குணங்களைக் கொண்டவையாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கதாபாத்திரம் முழுமையான வடிவமைப்புக்குள் வந்து அமரும்.

அந்த மூன்றில் முதலாவது கதாபாத்திரத்தின் தேவை (dramatic need), இரண்டாவது அந்தத் தேவை மீதான அதன் நிலைப்பாடு (point of view), மூன்றாவது, அந்த நிலைபாட்டுக்கு என்ன சேதம் ஏற்பாட்டாலும் அதை இறுதிவரை கைவிடாமல் உறுதியாகக் கடைப்பிடிக்கும் மனநிலை (attitude), இந்த மூன்று குணங்களால் விளையும் செயல்களால்தாம் திரைக்கதையில் அவை வளர்ச்சி (Transformation) அடைகின்றன.

‘உன் எதிரி யார் என்று சொல், நீ யாரென்று சொல்கிறேன்’ என்று கூறும் மித்ரன் கதாபாத்திரத்தின் தேவை, தனது எதிரியை முடிவு செய்து அழிப்பது. “உன் எதிரி யார் என்று தெரிந்தால்தான் உனது கெப்பாசிட்டி பத்தி தெரியும்” என்று கூறும் மித்ரன், செயின் பறிப்பு போன்ற திருட்டுகள், குழந்தைகள் கடத்தல்போன்ற குற்றங்களின் பின்னால்

இருக்கும் ‘ஆர்கனைஸ்டு’ குற்றங்களை ஊடுருவிப் பார்க்கத் தொடங்கும் மனப்பாங்கே அவனது ‘பாய்ண்ட் ஆஃப் வியூ’வாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு குற்றத்தின் பின்னுள்ள தொடர்ச்சியை அலசி ஆராய்ந்து கண்டுபிடிக்கும் அவன், தனது வீட்டின் அறை முழுவதும் 500 குற்றங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றின் பின்னணியைப் புலனாய்வு செய்த குறிப்புகள், தரவுகளால் நிறைந்து வைத்திருப்பதும், அந்தக் குற்றங்களின் பின்னணி, கார்ப்பரேட் உலகின் வியாபாரப் பேராசையிலிருந்து உருவாவது என்ற தொடக்கத்தைக் கண்டுபிடிப்பதும் உறுதியான அவனது ‘ஆட்டிட்யூட்’டால் நடைபெறும் செயல்கள்.

மித்ரனின் எதிர்பாராத இறுதி இலக்காக அமைந்துவிடுகிறான் சித்தார்த் அபிமன்யு.

“ நீ கடைசிவரை சித்தார்த் அபிமன்யுவைச் சந்திக்காமல் போய்விட்டால் என்ன செய்வாய்” என சக காவல் நண்பன் கேட்கும்போது.. “வாழ்க்கை பூரா அதிக பணம் எங்க இருக்குன்னு தேடிப்போறவன் அவன், வாழ்க்கை பூரா அதிக குற்றங்கள் எங்க இருக்குன்னு தேடிப்போறவன் நான்.. அதனால் நாங்க ரெண்டுபேரும் கண்டிப்பா சந்திப்போம். நான் அழிக்கணும்கிறதுக்காவே பொறந்தவண்டா அவன்” என்கிறான் மித்ரன்.

“ஒருத்தனை அழிக்கிறதுக்கு இவ்வளவு ஃபாஷனாடா?!” என்ற நண்பனின் ஆச்சரியமான கேள்விதான் திரைக்கதையின் ஆக்ஷன் டிராமாவைத் தொடங்கி வைக்கிறது. அடுத்த காட்சியிலிருந்தே சுவாரசியமான நாடகமயப்படுத்தலைத் தொடங்கிவிடுகிறார் இயக்குநர். மித்ரன், சித்தார்த் ஆகிய இருவரில் யார் தனி ஒருவன் என்பதை நாடகமயமாக்காலின் இன்னும் சில சுவாரசிய உத்திகளோடு கூர்ந்து கவனிப்போம்

தொடர்புக்கு:jesudoss.c@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x