Last Updated : 17 Aug, 2018 11:06 AM

 

Published : 17 Aug 2018 11:06 AM
Last Updated : 17 Aug 2018 11:06 AM

கலை வளர்த்த கட்டிடம்!

நூறு ஆண்டுகளுக்கு முந்தைய சென்னைக்கு, நகரம் என்ற அந்தஸ்தை வழங்கிய கட்டிடங்கள் பல. அப்படிப்பட்ட எல்லாக் கட்டிடங்களிலும் அனுமதியின்றி குடிமக்கள் அன்று அடி வைத்துவிட முடியாது. ஆனால் இந்தக் கட்டிடம் மட்டும் விதிவிலக்காக நின்றது.

எல்லோரையும் வரவேற்று அரவணைத்துக்கொண்டது. அன்பையும் சகோதரத்துவத்தையும் விதைத்தது. அதுதான் ‘விக்டோரியா பப்ளிக் ஹால்’. இன்றைய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கும் பெருநகர மாநகராட்சி இயங்கிவரும் ரிப்பன் மாளிகை கட்டிடத்துக்கும் இடையில் கம்பீரமான இண்டோ – சாரசெனிக் பாணி கோபுரத்துடன் (Indo-Saracenic architecture) செந்நிற சீன செராமிக் கற்களால் கட்டப்பட்ட மூன்றடுக்கு மன்றமாக நின்றுகொண்டிருக்கும் கட்டிடமே விக்டோரியா பப்ளிக் ஹால்.

எண்ணற்ற கலைஞர்கள், தலைவர்கள், பிரபுக்கள், சீமாட்டிகள், குடிமக்களின் காலடித் தடமும் ஜட்கா வண்டிகள், மோட்டார் கார்கள், ட்ராம் என அக்காலத்தின் அதிநவீனங்கள் அத்தனையும் அதன் வாசல் வரை வந்துசென்றதால் உயிர்ப்புமிக்க ஒரு நூற்றாண்டு சமூகக் கலாச்சார வாழ்வின் வரலாற்றை கலைநயம்மிக்க இக்கட்டிடம் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது. ராபர்ட் ஃபெல்லோஸ் சிஸ்ஸம் என்ற வெள்ளைக்கார இன்ஜினியரால் வடிவமைக்கப்பட்டாலும் அதை 1890-ல் கட்டி முடித்துக்கொடுத்தவர் நம்பெருமாள் செட்டி எனும் தமிழர்.

முதல் திரையிடல்

விக்டோரியா ஹாலின் தனிப்பெரும் சிறப்பு அது கலைகளை வளர்த்த கலாச்சாரப் பொக்கிஷம் என்பதுதான். இருபதாம் நூற்றாண்டு தொடங்கும் முன்பே திரைப்படம் எனும் கலை தமிழ் நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அற்புதம் நடந்தது இந்த ஹாலில்தான். 1895-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூமியர்ஸ் சகோதரர்கள் சலனப்படம் எனும் அறிவியல் ஆச்சரியத்தைக் கண்டறிந்தனர். இங்கே வெள்ளையர்கள் ஆட்சி நடந்து வந்ததால் அடுத்த இரண்டே ஆண்டுகளில் அது சென்னைக்கும் வந்து சேர்ந்துவிட்டது.

1897-ம் ஆண்டு எம்.எட்வர்டு என்ற ஆங்கிலேயர், இந்த விக்டோரியா ஹாலில்தான் லூமியர் சகோதரர்கள் எடுத்திருந்த சலனப் பட ஷாட்களை கினிமட்டோகிராஃப் கருவியைக் கொண்டு மக்களுக்குத் திரையிட்டுக் காட்டும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.

ரயில் ஒன்று நடைமேடையை நோக்கி வந்தடைதல், தொழிற்சாலை ஒன்றிலிருந்து பணி முடிந்து தொழிலாளர்கள் வெளியேறுதல் ஆகிய இரு ஷாட்களோடு இன்னும் சில சலனத் துண்டுகளும் திரையிட்டுக் காட்டப்பட்டன. அந்தத் திரையிடல் நிகழ்ச்சி அன்றைய சென்னை வாழ்க்கையில் பேசுபொருளாய் மாறித் தாக்கத்தை உருவாக்கியது. அதைத் தொடந்து சென்னையில் பல்வேறு இடங்களில் சலனப் படக்காட்சிகள் திரையிடப்பட்டு,  வந்த வேகத்திலேயே திரைப்படம் வரவேற்பு பெற்றத்தை வரலாறு பேசுகிறது.

அரங்கேறிய அமெச்சூர் நாடகம்

ஆனால் முதல் திரையிடலுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே ‘ராவ் பகதூர்’ பம்மல் சம்பந்த முதலியாரின் ‘சுகுண விலாச சபா’வின் முதல் அமெச்சூர் நாடகம் அரங்கேறியதும் இதே விக்டோரியா பப்ளிக் ஹாலில்தான். அதன்பின் சுகுண விலாச சபாவின் நாடங்கள் தரமுயர்ந்ததும் பிரபலமடைந்ததும் இங்கேதான். 1902-ல் சுகுண விலாச சபா தனது அலுவலகத்தை முழுவதும் விக்டோரியா பப்ளிக் ஹாலுக்கு இடம்மாற்றிக் கொண்டதோடு, சொந்தக் கட்டிடத்துக்கு இடம்பெயர்ந்து சென்ற 1935-வரை சுமார் 33 ஆண்டுகள் அங்கே நாடகங்களை நடத்தி மக்களை மகிழ்வித்திருக்கிறது அந்தக் குழு.

நாடகங்களை மாலை ஆறு மணிக்குத் தொடங்கி, அதிகாலை 5 மணிவரை நடத்தும் வழக்கத்தைப் பம்மல் சம்பந்த முதலியார் தொடங்கியது இங்கேதான். இந்தப் பழக்கமே பின்னர் திரைப்படம் வளர்ந்து, நிரந்தரத் திரையரங்குகள் பெருகி நின்றபோது மாலைக் காட்சி மற்றும் இரவுக் காட்சிகளின் நேரமாக நாடகக் காட்சிகளின் நேரத்தை படவுலகம் பின்பற்றத் தொடங்கியதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

விக்டோரியா பப்ளிக் ஹாலில் தமிழ் நாடகங்கள் மட்டுமல்ல, தெலுங்கு நாடகங்கள், ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியரின் நாடகங்கள், சீமான், சீமாட்டிகள் ஜோடியாகப் பங்கேற்கும் பால் ரூம் நடனங்கள் என கலையும் அதன்வழியான மகிழ்வும் இங்கே பொங்கி வழிந்தோடியிருக்கிறது. அதனால் விக்டோரியா ஹாலுக்குச் செல்வது பெருமிதமும் கலா ரசனையும் மிகுந்த அன்றைய வாழ்வியல் கூறாக மாறியிருக்கிறது.

பொதுநிதியின் கம்பீரம்

அன்று சென்னையில் வசித்துவந்த பிரமுகர்கள் பலர் ஒன்றிணைந்து லன்டனில் இருக்கும் ‘டவுன் ஹால்’ போல மக்கள் பிரச்சினைகளைக் கூடிப் பேசுவதற்கு ஒரு பொதுக் கட்டிடம் வேண்டும் என்று தீர்மானித்தார்கள். அதை ஏற்றுக்கொண்ட அன்றைய சென்னை கார்ப்பரேஷன், ‘பீப்பிள்ஸ் பார்க்’ என்ற பகுதியில் இருந்து 3.5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கிக் கொடுத்தது. ஒரு கிரவுண்ட் இடத்துக்கு எட்டு அணாக்கள் வீதம் ஆண்டுதோறும் வாடகையாகச் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் 99 ஆண்டுகள் குத்தகைக்குக் கொடுப்பட்டது.

அதன்பின்னர் விஜயநகர மன்னர், திருவிதாங்கூர் மன்னர் என பல தென்னக சமஸ்தான மன்னர்களின் நன்கொடை, பொதுமக்கள், தனவந்தர் களின் நன்கொடை என திரட்டப்பட்ட ரூபாய் பதினாறாயிரம் பொதுநிதியைக் கொண்டே விக்டோரியா பப்ளிக் ஹால் கட்டப்பட்டது. அப்போது இங்கிலாந்து அரசி ராணி விக்டோரியாவின் பொன்விழா ஆண்டாக அமைந்ததால், அதைப் போற்றும் வகையில் இந்த டவுன் ஹால் விக்டோரியாவின் பெயர் சூட்டப்பட்டது.

முதல் சலனப்படத் திரையிடல் நடந்த அதே ஆண்டில்தான் அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் நடந்த ஆன்மிக மாநாட்டுக்குச் சென்று திரும்பியிருந்த சுவாமி விவேகானந்தர், விக்டோரியா பப்ளிக் ஹாலில் திரண்டிருந்த சென்னை மக்கள் முன்பு பேசினார். விவேகானந்தர் மட்டுமல்ல, 1915-ல்

காந்தியாருக்கும் அவரது துணைவியாருக்கும் இங்கே பொது மக்களால் வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்னும் எண்ணற்ற தலைவர்கள் உரக்கப் பேசி மேடைப்பேச்சை வளர்த்த இடம். நாடகத்தில் நடிகராக வும் சினிமாவில் துணை நடிகராகவும் வளர்ந்துவந்த எம்.ஜி.ஆர், முதன்முதலில் அறிஞர் அண்ணாவின் பேச்சைக் கேட்டதும் இதே விக்டோரியா பப்ளிக் ஹாலில்தான் என்ற குறிப்பு, கலை வளர்த்த இந்தக் கட்டிடம் குறித்த ஆர்வத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.

தொடர்புக்கு: jesudoss.c@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x