Published : 29 Jun 2018 10:28 AM
Last Updated : 29 Jun 2018 10:28 AM

ஜெயலலிதா ஆக ஆசை! - மஞ்சிமா மோகன் பேட்டி

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் நாயகி ஆனவர் மஞ்சிமா மோகன். ஒல்லியான நடிகைகளுக்கு மத்தியில், பப்ளியும் அழகுதான் என ரசிகர்களைக் கவர்ந்தவர். ‘குயின்’ இந்திப் படத்தின் மலையாள மறு ஆக்கமான ‘ஜம் ஜம்’ படத்தில் நடித்துவருபவரிடம் உரையாடியதில் இருந்து...

‘ஜம் ஜம்’ படப்பிடிப்பு எந்தக் கட்டத்தில் இருக்கிறது?

இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்டது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே படப்பிடிப்பு. இந்தியில் ‘குயின்’ படம் ரிலீஸானபோதே பார்த்துவிட்டேன். ரொம்பப் பிடித்திருந்தது. அதன் மலையாள ரீமேக்கில் நடிப்பேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. கங்கனா ரனாவத் நடித்த கேரக்டர் எனக்கு எந்த அளவுக்குப் பொருத்தமாக இருக்கிறது என்பதைப் படம் பார்த்து ரசிகர்கள் கூற வேண்டும். அதற்காக அ யம் வெயிட்டிங்! தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் நடிக்கும் நடிகைகளும் என்னைப் போல் காத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

மறு ஆக்கம் என்பதால் மலையாளத்துக்கான கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றனவா?

ஆமாம், கங்கனாவின் கேரக்டர் முஸ்லிம் என்பதால் சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதனால், பிரச்சினை எதுவும் ஏற்படக் கூடாது என்பதற்காக ஆங்காங்கே சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்திருக்கிறார் இயக்குநர்.

தமிழில் ‘தேவராட்டம்’ படத்தில் ஒப்பந்தமாகியிருப்பது பற்றி?

அதில் கவுதம் கார்த்திக் ஜோடியாக நடிக்கிறேன். இதுவரை அவரைச் சந்தித்தது கிடையாது. ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்ற பிறகு தான் அவரைப் பற்றித் தெரியவரும். அதனால் அவரைப் பற்றிய எந்த முன் அபிப்ராயமும் வைத்துக் கொள்ளவில்லை. பொதுவாக, நான் யாரைப் பற்றியும் அப்படி வைத்துக் கொள்வது கிடையாது. காரணம், நாம் ஒருவரைப் பற்றிக் கேள்விப்படுவது ஒன்றாக இருக்கும். பழகிப் பார்த்த பிறகு முற்றிலும் வேறொன்றாக இருக்கும்.

தமிழ், மலையாளம் இரண்டிலுமே குறைவான படங்களில் நடிப்பதற்கு என்ன காரணம்?

உண்மையைச் சொல்லப்போனால், நான் இதற்கு முன் ஒப்புக்கொண்ட நான்கைந்து படங்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. அதுவும் தொடர்ச்சியாக அப்படி நடந்ததால் இடைவெளி அதிகமாகிவிட்டது. அந்தப் படங்களில் நடித்திருந்தால், இப்போது அவை வரிசையாக வெளிவந்திருக்கும். எனக்கும் இடைவெளி விழுந்திருக்காது. குறைந்தது10 படங்களாவது இரண்டு மொழிகளிலும் சேர்த்து வெளிவந்திருக்கும். மற்றபடி வாய்ப்புகளை ஏற்றுக்கொள்வதற்கு நான் பெரிய கட்டுப்பாடு எதுவும் வைத்துக் கொள்வதில்லை. இயக்குநர் கதையை என்னிடம் விவரிக்கும்போது என்னுடைய கேரக்டரோ, கதையில் ஒரு சூழ்நிலையோ பிடித்திருந்தால் போதும்.உடனே ஓகே சொல்லிவிடுவேன்.

பெண்களின் பாதுகாப்புக்கு ‘பெப்பர் ஸ்பிரே’ மட்டும் போதாது என ஏற்கெனவே சொல்லியிருந்தீர்கள். இப்போது பெண்களின் பாதுகாப்பு எப்படியிருக்கிறது?

முன்பைவிடப் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவில்கூட, பெண்களுக்கு ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. இதுவே 2011-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் நான்காவது இடத்தில்தான் இந்தியா இருந்திருக்கிறது. அப்படியென்றால் வன்முறைகள் அதிகரித்திருக்கின்றன என்றுதானே அர்த்தம்?

ஆடை அணியும் விதம்தான் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரிக்கக் காரணம் என்றால், குழந்தைகளும் முதியவர்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? கடவுள் புண்ணியத்தில் எனக்கு இந்த மாதிரி அனுபவங்கள் ஏற்பட்டதில்லை. பெண்கள் மீதான பாலியல் கண்ணோட்டம் மாறுவதும், பாலியல் குற்றங்களுக்குத் தண்டனைகளை அதிகமாக்குவதும்தான் இதற்குத் தீர்வாக அமையும்.

கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ சமீபத்தில் வெளியானது. அதுபோல் வாழ்க்கை வரலாற்றுப் படங்களில் நடிக்க ஆசை இருக்கிறதா?

நிச்சயமாக இருக்கிறது. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அவரின் தைரியம் எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என்று அவர் முடிவெடுத்துவிட்டால், எதற்காகவும் அதை விட்டுக் கொடுக்க மாட்டார். இந்த தைரியம் எல்லாப் பெண்களுக்கும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். பயோபிக் படங்களைப் பொறுத்தவரை அந்த வாய்ப்புக்காகக் காத்திருக்கிறேன்.

படங்கள்: எல்.சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x