Published : 04 May 2018 10:02 AM
Last Updated : 04 May 2018 10:02 AM

கோடம்பாக்கம் சந்திப்பு: புதிய தொடக்கம்!

சின்ன பட்ஜெட் படங்களைத் திரையரங்குகளில் வெளியிட்டு வசூல் பார்ப்பது குதிரைக் கொம்பாகி வருகிறது. போட்ட முதலை எடுக்கத் திரையரங்குகளில் வெளியிடும் அதே நேரம், நெட்பிளிக்ஸ், அமேசன், கூகுள் பிளே உள்ளிட்ட இணைய தளங்களிலும் படத்தை வெளியிடத் தயாரிப்பாளர்கள் பலர் விரும்பினார்கள். அப்படிச் செய்தால் படத்தை வாங்க மாட்டோம் என்று திரையரங்கை நடத்தி வருபவர்கள் கூறி வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சில சமயங்களில்’ என்ற படத்தைத் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யாமல் நேரடியாக நெட் ஃபிளிக்ஸ் இணையதளத்தில் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுவிட்டனர். பிரகாஷ் ராஜ், அசோக் செல்வன், ஸ்ரேயா ரெட்டி நடித்திருக்கும் இந்தப் படத்தை, ஐசரி கணேஷ், இயக்குநர் விஜய், பிரபுதேவா இணைந்து தயாரித்திருக்கின்றனர். திரைப்பட விநியோகத்தில் இவர்கள் எடுத்திருக்கும் துணிச்சலான முடிவு புதிய தொடக்கமாக இருக்குமா என்பது போகப் போகத் தெரியும்.

ரசிகன் பாவம்!

‘மதுரை சம்பவம்’, ‘சிவப்பு எனக்குப் பிடிக்கும்’, ஆகிய படங்களின் மூலம் கவனிக்க வைத்தவர் இயக்குநர் யுரேகா. அவர் தற்போது ‘காட்டுப்பய சார் இந்தக் காளி’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாரதிராஜாவின் பேச்சில் அனல் தெறித்தது. “ரசிகன் பாவம், அவன் விவரம் தெரியாதவன். அவன் பாலாபிஷேகம் செய்யும்போது அவர் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.

‘கட் அவுட்டுக்கு மாலை கூடாது, கண்ணியமாகப் படம் பார்’ என்று அவர் சொல்லியிருந்தால், அதை ரசிகன் கேட்டிருப்பான். ஆனால், முடிந்தவரை அவனை முட்டாள் ஆக்கிவிட்டு ‘இப்ப நான் வரேன்’னா அவன் என்ன பண்ணுவான்? மிக மோசமான ஒரு சூழ்நிலை இது. சினிமாவில் இருந்துகொண்டு நானே இதையெல்லாம் பேச வேண்டியிருக்கிறது” என்று ரஜினியை மறைமுகமாகக் குறிப்பிட்டுப் பேசியதும் விழா அரங்கம் அதிர்ந்தது.

வசந்தபாலன் அடுத்து

‘வெயில்’ படத்தின் மூலம் ஜி.வி.பிரகாஷை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் வசந்த பாலன். முதல் வாய்ப்பைக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டதைத் தொடர்ந்து வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ், ஒரு கட்டத்தில் வசூல் நாயகனாகவும் உயர்ந்துவிட்டார். இதற்கிடையில் 2014-ல் வெளியான ‘காவியத் தலைவன்’ படத்துக்குப் பின்னர் படம் இயக்காமல் இருந்துவந்த வசந்த பாலன் விரைவில் அடுத்த படத்தைத் தொடங்க இருக்கிறார். அதில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

கான் விழாவில் தனுஷ்!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் மூன்றாவது படம் ‘வடசென்னை’. தொடர்ந்து பாலாஜி மோகனின் ‘மாரி-2’ படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கிறது. அதேபோல் கௌதம் மேனன் இயக்கத்தில் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’வும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இவை தவிர தலைப்பு சூட்டப்படாத கார்த்திக் சுப்பராஜின் படம், துரை.செந்தில்குமார் இயக்கவிருக்கும் படம் என தனுஷின் கால்ஷீட் டைரி நிரம்பி வழிகிறது. இந்த எல்லாப் படங்களுக்கும் முன் தனுஷ் நடித்திருக்கும் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்’ என்ற ஹாலிவுட் திரைப்படம் இந்த மாதம் நடைபெறவிருக்கும் கான் பட விழாவில் கலந்துகொள்கிறது.

எம்.ராஜேஷ் - சிவா கூட்டணி

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்திருக்கும் படம் ‘சீம ராஜா’. இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் அறிவியல் புனை கதையில் நடிக்கிறார். இந்தப் படம் தவிர எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கவும் கால் ஷீட் கொடுத்திருந்தார். இந்த இரண்டு படங்களிலும் மாறி மாறி நடித்துக் கொடுக்க முடிவு செய்திருக்கும் சிவகார்த்திகேயன், எம்.ராஜேஷ் இயக்கும் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பில் நடித்துவருகிறார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x