Published : 06 Apr 2018 10:58 AM
Last Updated : 06 Apr 2018 10:58 AM

ஆஸ்கர் 2018: எழுதுவதே எதிர்ப்பு! (சிறந்த படத்துக்கான பரிந்துரை)

 

ஸ்

டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘த போஸ்ட்’ படம், சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் படம் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும் திரைவிமர்சகர்கள், பொதுமக்கள் ஆகியோரின் வரவேற்பைப் பெற்றது. ஊடகச் சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுவரும் நிலையில் ஊடக சுதந்திரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டதாலேயே இந்தப் படம் முக்கியத்துவம் பெறுகிறது.

அம்பலமான உண்மை

அமெரிக்க – வியட்நாம் போர் தொடர்பான ஆய்வறிக்கையான ‘பெண்டகன் பேப்ப’ரில் உள்ள தகவல்கள் 1971-ல் ‘த நியூயார்க் டைம்ஸ்’ இதழில் வெளியாகிறது. அதைத் தொடர்ந்து வாசகர்கள் மத்தியில் தன் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய நிலை ‘த வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழுக்கு ஏற்படுகிறது. கணவரது மறைவுக்குப் பிறகு போஸ்ட் நாளிதழின் பதிப்பாளராகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டுவருகிறார் கேத்ரின் கிரஹாம். பத்திரிகையின் குறிப்பிட்ட அளவு பங்குகளை விற்பதற்கு கேத்ரின் முடிவெடுக்கும் சூழலில் இப்படியொரு நெருக்கடி.

நாளிதழின் மூத்த செய்தியாளர் ஒருவர் மூலமாக பெண்டகன் ஆய்வறிக்கை கிடைக்க, அதை வெளியிட ஆசிரியர் பென் பிராட்லி முடிவெடுக்கிறார். இந்த முடிவைப் பதிப்பாளர் கேத்ரின், நாளிதழின் தலைவர், குழு உறுப்பினர்கள், சட்ட ஆலோகர்கள் ஆகியோர் ஏற்கவில்லை. பிறகு நடப்பவை எல்லாமே ஊடகங்கள் யார் பக்கம் நிற்க வேண்டும் என்பதற்கான பாடம்.

அதிகாரத்தின் தலையீடு

ஊடகங்கள் செய்தி வெளியிடுவதில் வெள்ளை மாளிகை தொடர்ந்து தலையிடுவதை அதிகாரத்தின் தலையீடாகப் புரிந்துகொள்ளலாம். அதிகார வர்க்கத்தைப் பதிப்பாளர்கள் பகைத்துக்கொள்ளத் தயங்குவதை கேத்ரினின் சில செயல்பாடுகள் உணர்த்துகின்றன. ஆனால், பதிப்பாளர்கள் யாருக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும் என்பதையும் கேத்ரின் உணர்த்துகிறார்.

குறிப்பிட்ட நிருபர் செய்தி சேகரிக்க வர வேண்டாம் என வெள்ளை மாளிகையிலிருந்து சொல்லப்படுகிறது. கேத்ரின் அதை ஏற்றுக்கொள்ள, ஆசிரியர் பென் கண்டிக்கிறார். மற்ற ஊடகங்களுக்கும் இந்தத் தகவலைச் சொல்லி அவர்களின் ஒத்துழைப்பையும் கோருவோம் என்கிறார். செய்தி வெளியிடுவதில் ஊடக நிறுவனங்களுக்கு இடையே போட்டி நிலவினாலும் பத்திரிகையாளர்களுக்கோ ஊடக சுதந்திரத்துக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அனைவரும் ஓரணியில் நிற்க வேண்டும் என்பதைத்தான் இந்தப் படம் சொல்கிறது.

‘பத்திரிகையில் ஒரு விஷயத்தை எழுதக் கூடாது என்று அதிகார வர்க்கம் சொல்வதை எழுதுவதன் மூலமாகத்தான் வெல்ல முடியும்’ என்று ஆசிரியர் பென் சொல்வது எல்லாக் காலத்துக்கும் பொருந்தும்.

ஊடகங்கள் யார் பக்கம்?

அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்ஸனின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சிக்கும் பென், நாட்டின் அதிபர் தான்தோன்றித்தனமாகச் செயல்பட்டு தானே அனைத்தையும் முடிவுசெய்வதைக் கண்டிக்கிறார். உண்மையை அம்பலப்படுத்துவதன் மூலமாகத்தான் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று அதைச் செயல்படுத்திக்காட்டுவார்.

அரசுக்கு எதிரான செய்தியை வெளியிடுவதன் மூலமாக நாளிதழின் பங்குதாரர்களில் தொடங்கி கடைமட்ட ஊழியர்கள்வரை பாதிக்கப்படுவார்கள் என்று பதிப்பாளர் கேத்ரின் சொல்லும்போது, “இந்தச் செய்தியை நாம் வெளியிடவில்லை என்றால் நாம் தோற்றுப்போவோம், நாடும் தோற்றுவிடும். அதிபர் நிக்சன் ஜெயிப்பார்” என்று பென் சொல்வார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் செயல்பாடுகளுக்கு அந்நாட்டு மக்கள் மத்தியில் விமர்சனங்கள் அதிகரித்துவரும் நிலையில் அவரது ஆட்சிக் காலத்திலேயே ஊடக சுதந்திரம் குறித்தும் அதில் அதிபரின் தலையீடு குறித்தும் படம் இயக்கியிருக்கும் ஸ்பீல்பெர்கின் முயற்சி பாராட்டுக்குரியது.

மக்களுக்கு எதிரான அரசின் நிலைப்பாடுகளையும் மிகப் பெரிய ஊழல் வழக்குகளையும் வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைகளைப் போல வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த இந்திய ஊடகங்களின் பங்களிப்பை மறக்க முடியாது. அதே அறமும் துணிவும் உறுதியும் இப்போதும் ஊடகங்கள் மத்தியில் நிலவுகின்றனவா என்ற கேள்வியை ‘த போஸ்ட்’ படம் எழுப்புகிறது.

தொடர்புக்கு: brindha.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x