Published : 06 Apr 2018 10:49 AM
Last Updated : 06 Apr 2018 10:49 AM

அயல் சினிமா: பாலிவுட்டை விஞ்சும் கதைகள்

 

காராஷ்டிர மாநிலத்தின் தலைநகரம், மும்பை. பாலிவுட் என்றழைக்கப்படும் இந்தி சினிமாவின் தலைநகரமும் அதுவேதான். சினிமாவைப் பொறுத்தவரை மராத்தியர்களுக்கு ‘மும்பை சினிமா’க்கள்தாம் மிகவும் நெருக்கம். தாய்மொழியான மராத்தியில் எடுக்கப்படும் சினிமாக்கள், மராத்தியர்களிடமிருந்தே மிகவும் அந்நியப்பட்டிருந்தன. ஒரு காலத்தில் மராத்திய சினிமாக்கள், இதர மாநில மொழித் திரைப்படத் துறையினருக்கு இலக்கணமாக விளங்கியவை. அந்தப் படங்களைப் பார்த்துத் திரைமொழியைக் கற்றுக்கொண்டவர்கள், ஒவ்வொரு மொழியிலும் நட்சத்திரங்களாகப் பரிணமித்தது ஒரு காலம்.

ஆனால், 90-களுக்குப் பிறகு, மராத்தி சினிமாக்கள் மிகப் பெரிய சரிவைச் சந்தித்தன. அதற்கான காரணங்களைத் தெரிந்துகொள்ளும் முன், மராத்திய சினிமாவின் தோற்றம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியாவின் முதல் திரைப்படம்

‘இந்திய சினிமாவின் தந்தை’ என்று போற்றப்படும் தாதா சாகேப் பால்கே, 1913-ல், ‘ராஜா ஹரிஷ்சந்திரா’ எனும் திரைப்படத்தை எடுத்தார். அதுதான், இந்தியாவின் முதல் சினிமா. மவுனப் படமான அதில் வரும் டைட்டில்கள் மராத்தியில் எழுதப்பட்டிருந்தன. அது மும்பையில் தயாரிக்கப்பட்டு, திரையிடப்பட்டது. அதன் பிறகு 1929-ல், வி.சாந்தாராம் எனும் பிரபல மராத்திப் பட இயக்குநர், ‘பிரபாத் ஃபிலிம் கம்பெனி’ எனும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நான்கு நண்பர்களுடன் இணைந்து கோலாபூரில் தொடங்கினார். அந்த நிறுவனத்தின் முதல் மராத்தி பேசும் திரைப்படமாக ‘அயோத்தியேச்சா ராஜா’ வெளிவந்தது.

தாதா சாகேப் பால்கே வலுவான தளத்தை அமைக்க, அவருக்குப் பின் வந்த சாந்தாராம், ஆச்சார்ய பி.கே. ஆத்ரே, பால்ஜி பேண்டார்கர், பாபுராவ் பெயின்டர், மாஸ்டர் விநாயக் போன்ற இயக்குநர்களால், மராத்தி சினிமா செழிப்பாக வளர்ந்தது.

அவர்களுக்குப் பிறகு அமோல் பாலேகர், சுமித்ர பவே, சுனில் சுக்தாங்கர், சச்சின் பில்காவ்கர், ஸ்மிதா தல்வால்கர் என இரண்டாம் தலைமுறை வந்தது. 50 மற்றும் 60-களில், ஓர் ஆண்டுக்கு 40 - 50 படங்கள் மராத்தியில் வெளிவந்தால் அதிகம். அந்த வேளையில், இந்தி சினிமாவும் வேகமாக வளர்ந்துகொண்டிருந்தது. பெரும்பாலும் இந்திப் படங்கள் பட்ஜெட்டை நம்பிக்கொண்டிருந்த வேளையில், மராத்தி சினிமாவோ கதையை நம்பியது. தங்களின் முயற்சியால் மராத்தி சினிமா உலகம் கவிழாமல் பார்த்துக்கொண்டதில் இரண்டாம் தலைமுறையினருக்குப் பெரும் பங்குண்டு.

‘நாடகமும்’ அசலும்

இப்படிப் போய்க்கொண்டிருந்த மராத்தி சினிமா, 70-களுக்குப் பிறகு சரிவைச் சந்தித்தது. இந்தி சினிமாவுடன் போட்டி போடும் அளவுக்கு பட்ஜெட் இடம் கொடுத்திருக்காது என்று நினைத்தால், அது தவறு. அன்றும் சரி, இன்றும் சரி… மராத்தி சினிமா மிகக் குறைந்த பட்ஜெட்டிலேயே எடுக்கப்படுகிறது. அங்கு ஒரு காலத்தில் எடுக்கப்பட்ட மிகச் சிறந்த படங்கள் எல்லாம், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டவையே. அப்படியென்றால், வேறு என்னதான் காரணம்?

மோசமான கதை, தரமான இயக்குநர்கள் இல்லாதது, நானா படேகர் போன்ற சிறந்த நடிகர்களைப் பயன்படுத்துவதற்கான நல்ல கதைகள் கிடைக்காமல் இந்தி சினிமாவுக்குத் தத்துக் கொடுத்துவிட்டது, எடுத்த படத்தை விநியோகம் செய்வதற்கான தொடர்புகள் இல்லாதது போன்றவையே 90-கள் முதல் புத்தாயிரம் ஆண்டுவரை மராத்தி சினிமா சரிவைச் சந்தித்ததற்கான காரணங்கள்.

இந்தி சினிமாவைப் பார்த்து நிஜ வாழ்க்கையில் நம்ப முடியாத, நாயக பிம்பத்தை உயர்த்திப் பிடிக்கும் கதைகளை அதிகமாக எழுத ஆரம்பித்தார்கள் மராத்தி இயக்குநர்கள் சிலர். அப்படிச் செய்து சூடுபட்டுக்கொண்டதுதான் மிச்சம். காரணம் மராத்திய மொழி, சிறந்த இலக்கியங்களைக் கொண்டது. அதை அடிப்படையாக வைத்து, அங்கு நாடகக் கலை பல ஆண்டுகாலமாகச் செழித்து வளர்ந்திருந்தது.

இன்றைக்கு மராத்தித் திரையுலகின் சிறந்த கலைஞர்கள் பலர், நாடகக் கலையின் வழிவந்தவர்கள். விஜய் டெண்டுல்கர் போன்ற சிறந்த நாடகாசிரியர்களைக் கொண்டது மராத்தி மொழி. சினிமாவின் வருகைக்குப் பிறகு, நாடகக் கலை மீது மக்களுக்கு இருந்த ஈர்ப்பு குறைய, விஜய் டெண்டுல்கர் போன்றவர்கள் சினிமாவுக்குள் வந்தார்கள். அதனால் நிஜ வாழ்க்கையுடன் ஒன்றிப்போன திரைக்கதைகளை அவர்களால் எழுத முடிந்தது.

கிராமங்களை நோக்கி

இந்தி சினிமா நகரங்களையே காட்டிக்கொண்டிருந்த வேளையில், கிராமங்களை அதன் தூசு படிந்த சாலைகளுடன் காட்டியது மராத்தி சினிமா. சமீபத்தில் வெற்றியடைந்த ‘ஃபண்ட்ரி’, ‘சைராட்’ போன்ற படங்கள்கூட மகாராஷ்டிரத்தின் உள்ளடங்கிய கிராமங்களையே கதைக்களமாகக் கொண்டிருந்தன.

கதை, திரைக்கதை தவிர, தொழில்நுட்பரீதியாகவும் மராத்தி சினிமா சமீபகாலம்வரை பின்தங்கியிருந்தது. தொலைக்காட்சி நியூஸ் ரீல், ஆவணப் படங்கள் போன்றவற்றை எடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் 16 எம்.எம். பிலிமைக் கொண்டுதான் பெரும்பாலான மராத்தி சினிமாக்கள் எடுக்கப்பட்டுவந்தன.

பொருளாதாரரீதியாகத் தயாரிப்பாளர்களுக்கு அந்த பிலிம் குறைவான செலவையே வைத்தது என்றாலும், அதில் எடுக்கப்பட்ட படங்களைப் பெரிய திரையில் காட்டும்போது, ‘வைட்’ அல்லது ‘லாங் ஷாட்’கள் எல்லாம் காணாமல் போயிருந்தன. இதனால், கதை தரமாக இருந்தபோதும் தொழில்நுட்பம் தரமாக இல்லாததால், பெருமளவுப் படங்கள் மராத்தி ரசிகர்களைக் கவர முடியாமல் போயின. படங்களை ‘எடிட்’ செய்வதற்கு, அங்குள்ள கலைஞர்கள் கத்தரிக்கோலையே அப்போது நம்பி இருந்தனர்.

இத்தனை இடர்பாடுகள் இருந்தும், மராத்தி சினிமா தாக்குப்பிடித்திருப்பதற்கு அங்குள்ள நடிகர்கள் பணத்தின் பின்னால் ஓடாமல் இருப்பதுதான் காரணம். அந்த நடிகர்களில் பலர், நாடகத்தின் குழந்தைகள். அதனால் அவர்களிடம் ஓர் ஒழுங்கு இருந்தது. படப்பிடிப்புக்குச் சரியான நேரத்தில் வந்தார்கள். எளிமையான கதை, ‘செட்’ போடத் தேவையில்லாத நிஜமான லொகேஷன்களில் நிகழும் படப்பிடிப்பு போன்ற காரணங்களாலும், ஒரு மராத்திப் படத்தின் பட்ஜெட் ரூ. 2 கோடியைத் தாண்டாமல் இருந்தது.

இந்நிலையில், ஒரு காலத்தில் 40 அல்லது 50 படங்கள்வரை வந்துகொண்டிருந்த மராத்தி சினிமாவில், ஒரு கட்டத்தில் ஒரு ஆண்டுக்கு 22 படங்கள் மட்டுமே வெளிவரும் சரிவுநிலைக்குத் தள்ளப்பட்டது. சரிவிலிருந்து மராத்தி சினிமாவை மீட்க 1997-ம் ஆண்டு முதல் தரமான மராத்திப் படங்களுக்கு மானியமும் அளித்து, வரிவிலக்கும் அளிக்கத் தொடங்கியது மகாராஷ்டிர அரசு. அதனால் புத்தாயிரம் ஆண்டுவரை, அவ்வப்போது சில தரமான படங்கள் வந்துகொண்டிருந்தன.

புத்தாயிரத்துக்குப் பிறகு இப்போதுவரையிலான காலத்தில் உருவான மூன்றாம் தலைமுறை இயக்குநர்களால் மராத்தி சினிமா மறுமலர்ச்சி கண்டிருக்கிறது. அவர்களின், ‘புதிய அலை’ சினிமாக்களால், இந்தித் திரைப்பட உலகில் உள்ள பலர், மராத்தி திரையுலகில் முதலீடு செய்ய முன்வந்திருக்கிறார்கள். ஷ்வாஸ் (2004), டோம்பிவ்லி ஃபாஸ்ட் (2005), ஹரிஷ்சந்திராச்சி ஃபேக்டரி (2009), விஹீர் (2010), தியோல் (2011), கக்‌ஸ்பர்ஷ் (2012), ஃபண்ட்ரி (2013), ‘யெல்லோ’(2014) கோர்ட்(2015) போன்ற பல படங்களை உதாரணங்களாகச் சொல்லலாம். கையைக் கடிக்காத பட்ஜெட், புதிய திறமைசாலிகளின் வருகை, இதுவரை தொடப்படாத கதைக்களங்கள்… இந்த மூன்றும்தான் கடந்த பத்தாண்டுகளில் மராத்திய சினிமாவைக் காப்பாற்றி வந்துள்ளன.

தொடர்புக்கு: vinothkumar.n@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x