Published : 13 Oct 2017 10:10 AM
Last Updated : 13 Oct 2017 10:10 AM

சினிமா லேப்: இனி மியூசியத்தில் மட்டுமே பார்க்கலாம்!

சினிமாவுக்குக் கதை எத்தனை முக்கியமோ அதைவிட முக்கியமான ஒன்றாக பிலிம் சுருள் இருந்தது. சுமார் 100 ஆண்டுகள் முடிவில் சினிமாவிலிருந்து மறைந்தேவிட்டது படச்சுருள். ‘பெட்டி வந்தாச்சு’ என்ற நவயுகச் சொலவடையும் தன் பயன்பாட்டை இழந்துவிட்டது. டூரிங் டாக்கீஸாக, கிராமம் வரை சினிமா வந்து சேர்ந்துவிட்ட 60 மற்றும் 70-களின் கோயில் திருவிழாக்களில் அதிசயக் காட்சிகளில் ஒன்றாக வருகைதந்த பயாஸ்கோப்காரன் மீண்டும் வராமல் போனால் இனி படச்சுருளை மியூசியத்தில்தான் நாம் காண முடியும். அப்படியொரு மியூசியத்தை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறது புகழ்பெற்ற ‘பிரசாத் லேப்’ நிறுவனம். பிலிம் வாசனையை நுகரவும் அதன் ஸ்பரிசத்தை உணரவும் இதுபோன்ற அருங்காட்சியம்தான் இனி ஒரே வழி.

கைவிடப்படும் நெகடிவ்கள்

‘மேரிட் பிரிண்ட்’ எனப்படும் ஒரு திரைப்படத்தின் படச்சுருள் பிரதியை அச்சிட்டுத்தரும் ‘பிலிம் லேப்கள்’ கோடம்பாக்கத்தில் இதயமாக இயங்கிவந்த காலம் ஒன்று இருந்தது. இன்று அவற்றுக்கு இரங்கற்பா எழுத வேண்டிய நிலையில், அவற்றின் பொற்காலம் குறித்த நினைவுகள் என்னால் மறக்க முடியாதவை. அவற்றைப் பேசத் தொடங்கினால் ஒரு திரைப்படத்துக்கே உரிய விறுவிறுப்புடன் இருக்கும்” என்று உற்சாகத்துடன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் கே.ஆர்.சுப்ரமணியம். கே.ஆர்.எஸ் என்று பிரசாத் ஸ்டூடியோ குழும ஊழியர்களால் அன்புடன் அழைக்கப்படும் அவர் கடந்த 15 ஆண்டுகளாக பிரசாத் லேப் நிறுவனத்தின் வணிகப் பிரிவுத் தலைவராகப் பணியாற்றிவருகிறார்.

“இன்று பிலிம் லேப் பிரிவு மூடப்பட்டுவிட்ட நிலையில் இங்கே நூற்றுக்கணக்கான படங்களின் நெகடிவ்கள் இன்னும் எங்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒரு படத்தின் கலர் நெகடிவுக்கு 10 முதல் 15 ஆண்டுகள்தான் ஆயுள்காலம். நெகடிவ்களைப் பராமரிக்கச் சரியான தட்ப, வெப்ப சூழ்நிலை அவசியம். நாங்களும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம்” என்று வருத்தத்துடன் கூறியவர் பிரசாத் லேப் பரபரப்பாக இயங்கிவந்த காலகட்டத்தை விவரித்தார்...

இருட்டறையில் விரிந்த கனவுலகம்

படச்சுருள் என்றால் செல்லுலாய்ட் பிலிம் நெகடிவ். இப்படி நெகடிவில் படம்பிடிக்கப்பட்டதும் அது எக்ஸ்போஸ்டு நெகடிவ் ஆகிவிடும். அதை பிலிம் லேபுக்கு எடுத்துக்கொண்டுவந்து 48 மணி நேரத்துக்குள் இருட்டறையில் வைத்து டெவலப் செய்ய வேண்டும். டெவலப் (develop) செய்யும் முன் வெளிச்சம் பட்டுவிடாதபடி பத்திரமாக வைக்க வேண்டும். அப்படிப்பட்ட மிகப் பாதுகாப்பான இடங்களாக பிலிம் லேப்கள் இருந்தன. படம்பிடிக்கப்பட்ட பிலிம் சுருளை கேனிலிருந்து எடுத்து டெவலப்பிங் இயந்திரத்துக்குள் அனுப்புவோம். அதன் உள்ளே இருக்கும் ரசாயன திரவக்கலவைத் தொட்டிகளில் படச்சுருளானது மூழ்கி டெவலப் ஆகி, பின்னர் ‘ஹீட் சேம்பர்’ என்ற பகுதி வழியாக முழுவதும் உலர்ந்து பிம்பங்கள் தெரியும் நெகடிவாக வெளியேவரும். இந்த டெவலப்பிங் முழுவதும் தானியங்கி முறையில் (automatic developing) நடக்கும் ஒன்று.

13chrcj_PRASAD LAB டெவலப்பிங் முடிந்ததும் நெகடிவ் சோதனை செய்யப்படுகிறது. 100

படப்பிடிப்புத் தளத்திலிருந்து எந்த நேரத்திலும் படம்பிடிக்கப்பட்ட நெகடிவ்கள் வரும் என்பதால், லேப்கள் 24 மணி நேரமும் வேலை செய்தன. மொத்தம் மூன்று ஷிப்ட் வேலை நடக்கும். மூன்று ஷிப்ட்களிலும் மொத்தம் 350 தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தார்கள். மாலை 6 மணிக்குள் பெரும்பாலும் எக்ஸ்போஸ்டு நெகடிவ்கள் வந்துவிடும் என்பதால் இரவு 10 மணிக்குள் டெவலப்பிங் செய்து பிரிண்டிங் செக்‌ஷனுக்குப் பத்திரமாக அனுப்பிவைத்துவிடுவார்கள்.

காலை ஆறு மணிக்குத் தொடங்கும் முதல் ஷிப்ட், மதியம் 2 மணிக்குத் தொடங்கும் இரண்டாவது ஷிப்ட் இரண்டிலுமே டெவலப்பிங் மற்றும் பிரிண்டிங் வேலைகள்தான் அதிகமாக நடக்கும். அதன் பிறகு இரவு பத்து மணிக்குத் தொடங்கும் மூன்றாவது ஷிப்ட்டில் ரிலீஸ் பிரிண்டுகளை அச்சிடும் பணி மட்டுமே நடக்கும். இந்த ரிலீஸ் பிரிண்ட் என்பது பாஸிடிவ். படப்பிடிப்பில் பயன்படுத்தப்படுவது நெகடிவ் என்றால் திரையரங்குகளில் திரையிடப்படுவது பாஸிடிவ் படச்சுருள். மூன்று ஷிப்ட்களிலும் சேர்த்து ஒருநாளைக்கு 60 பாஸிடிவ் பிரிண்ட்களை அச்சிடும் திறன் இங்கே இருந்தது.

தகர்ந்த கட்டுப்பாடுகள்

ஒரு படத்துக்கு எத்தனை பிரிண்டுகள் போடலாம் என்ற கட்டுப்பாடு இருந்தது. சென்னை மாநகரம் என்று எடுத்துக்கொண்டால் அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்பட நான்கு திரையரங்குகளில் மட்டும்தான் படங்கள் ரிலீஸ் ஆகும். அதன் பிறகு செகண்ட் ரவுண்டாக மற்ற திரையரங்குகளுக்கு அதே பிரிண்டுகள் போகும். இதனால் ஒரு படத்துக்கான வசூல் என்பது ஆண்டு முழுவதும் வந்துகொண்டே இருக்கும். ஆனால், காலப்போக்கில் எதற்கு ஆறு மாதம், ஒரு வருடம் என்று படத்தின் வசூலுக்காகக் காத்திருக்க வேண்டும், ஒரே மாதத்தில் எடுத்துவிடலாம் என்று படம் வெளியாகும் திரையரங்குகளின் எண்ணிக்கை, பிரிண்டுகளின் எண்ணிக்கை இரண்டையும் அதிகரித்தனர்.

krsjpgகே.ஆர்.சுப்ரமணியம்right

இந்தப் போக்கு மெல்ல மெல்ல முன்னேறி பின்னர் பிலிம் பிரதிகள் இருந்த காலத்திலேயே ஒரே வாரத்தில் மொத்த தியேட்டர் வசூலையும் எடுத்துவிட வேண்டும் என்ற வசூல் உத்தியைத் திரையுலகம் பின்பற்றத் தொடங்கியது. அதன் பிறகுதான் 100 பிரிண்டுகளாக இருந்த எண்ணிக்கை 300-ஆகவும், 500-ஆக இருந்த பிரிண்டுகள் 800, 1000 என்றும் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது.

எனக்குத் தெரிந்து பிலிம் பிரிண்ட் இருந்த காலத்தில் ‘எந்திரன்’ படத்துக்காக கடைசி கடைசியாக அதிகபட்சமாக 1000 பிலிம் பிரிண்டுகள் போடப்பட்டன. ரிலீஸ் நேரத்தில் பாஸிடிவ் பிரிண்டுகளை அச்சிட லேப்கள் இரவு பகலாக வேலை செய்யும். சாதாரண நாட்களின் வார இறுதியில் எங்கள் லேபிலிருந்து மட்டும் குறைந்தது மூன்று படங்கள் வெளியாகும்.

வேலையிழந்த ஊழியர்கள்

தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு போன்ற பண்டிகைக் காலத்தில் எங்கள் லேப் திருவிழாபோல இருக்கும். ஆனால், இங்கே டெவலப்பிங், பிரிண்டிங் பிரிவில் வேலைசெய்து வந்த 350 தொழிலாளிகள், மக்களை மகிழ்விப்பதற்காக இரவு பகலாக வேலை செய்வார்கள். தீபாவளி அன்று காலை 8 மணிவரை பிரிண்ட் போடப்பட்டுக்கொண்டே இருக்கும். பிரிண்ட்களை ரீல் வாரியாகச் சுற்றி, வட்டமான ரீல் பாக்ஸ்களில் கச்சிதமாகப் பொருத்தி, படப்பெட்டிக்குள் வைத்து டெலிவரி பிரிவுக்கு அனுப்பிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்துடன் இந்த மூன்று பண்டிகைகளையும் கொண்டாடியதே கிடையாது.

டிஜிட்டல் சினிமாவின் வருகையால் இந்தத் தொழிலாளர் அனைவருக்குமே வேலை இல்லாமல் போய்விட்டது. 1978-ல் தொடங்கப்பட்ட லேப் என்பதால் பெரும்பாலான ஊழியர்கள் ஓய்வுபெற சில வருடங்களே இருந்ததால் கவுரவமாக அவர்கள் விடைபெற்றார்கள். டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்குத் தங்களை அப்டேட் செய்துகொள்ள விரும்பிய கொஞ்ச ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்து அப்படியே தக்க வைத்துக்கொண்டோம்.

பிரசாத் லேப் உட்பட சென்னையில் பிஸியாக இருந்து மூடப்பட்ட மற்ற லேப்களில் வேலைசெய்த தொழிலாளர்களையும் சேர்த்து மொத்தம் 2,000 தொழிலாளர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். எங்களிடம் இருந்த பாஸிடிவ் பிரிண்டிங் மெஷின்கள் அனைத்தும் 15 கோடி ரூபாய் மதிப்புக்கு வாங்கப்பட்டவை. அவற்றில் சில மெஷின்களை மட்டும் நாங்கள் தொடங்க இருக்கும் மியூசியத்தில் வைப்பதற்காகப் பாதுகாத்து வருகிறோம். விரைவில் பிலிம் எனும் பொற்காலத்தை அதை இழந்த தலைமுறைக்குக் காட்டுவதற்கான மியூசியம் உருவாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x