Published : 16 May 2016 08:07 AM
Last Updated : 16 May 2016 08:07 AM

திரை விமர்சனம்: கோ 2

முதல்வரைச் சுற்றி நடக்கும் குற்றங்களைச் சுட்டிக்காட்ட முதல்வரையே கடத்தும் ஒரு பத்தி ரிகையாளரின் கதைதான் கோ 2

பத்திரிகையாளர் பாபி சிம்ஹா முதல்வர் பிரகாஷ்ராஜைக் கடத்துகிறார். ஆளுங்கட்சித் தொண்டர்கள் உண்ணா விரதம், கடை அடைப்பு, பேருந்து எரிப்பு என்று கலவரத்தில் ஈடுபடுகிறார்கள். அவரை மீட்க கமிஷனர் ஜான் விஜய் தலைமையில் ஒரு தனிக் குழு உடனடியாக அமைக்கப்படுகிறது. முதல்வர் மீட்கப் பட்டாரா? கடத்தலுக்குக் காரணம் என்ன? கடத்திய பாபி சிம்ஹாவின் நிலை என்ன?

பிரபலங்கள் கடத்தப்படுவதை மிகப் பெரிய ஆக்‌ஷன் நாடகமாக விவரிக்கும் காலாவதியான காட்சியமைப்பு அறவே கூடாது என்று நினைத்ததற்காகவே அறிமுக இயக்குநர் சரத்தைப் பாராட்டலாம். 2014-ல் தெலுங்கில் வெளியான ‘பிரதிநிதி’ படத்தின் மறுஆக்கமாக இருந்தாலும் தமிழக அரசியல் சூழலுக்கு ஏற்ப காட்சிகளைச் சேர்த்தும், நடப்பு நிலவரங்களைச் சுட்டிக் காட்டியும் கதையுடன் ஒன்ற வைப்பதில் படம் ஈர்க்கிறது.

ஆனால் முதல்வர் கடத்தப்பட்ட முக்கியப் பிரச்சினையின் மையத்தை நோக்கி தீர்க்கமாகப் பயணிப்பதற்குப் பதிலாக முக்கோணக் காதல் ஒன்றுக்குள் புகுந்துகொண்டு தட்டுத் தடுமாறி, எரிச்சலூட்டுகிறது படத்தின் முதல் பாதி. முதல்வர் கடத்தப்பட்டதன் காரணத்தை பாலசரவணன் காமெடியாகச் சொல்லும் இடமும் பெரிதாகக் கைகொடுக்கவில்லை.

இரண்டாம் பாதியில் தடம் மாறாமல், தடுமாறாமல் வேகமாக நகரும் திரைக்கதையும் ஏற்றுக்கொள்ளும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும் முடிவும் படத்தை வலுவான செய்தி சொல்லும் விறுவிறுப்பான படமாக ஆக்குகின்றன. பாக்யம் சங்கரனின் வசனங்கள் இதற்கு உதவியிருக்கின்றன. ஆட்சியாளர்களின் தவறுகளைத் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு நினைவூட்டுவது போல வசனங்கள் அமைந்துள்ளன.

மது வியாபாரத்தை அரசே நடத்துவது, கல்வி, மருத்துவத் துறைகள் தனியார் ஆதிக்கத்தில் சிக்கியிருப்பது ஆகியவற்றைப் பற்றி வசனம் வழியே படம் அழுத்தமாகப் பேசுகிறது. மீத்தேன் திட்டம், கனமழை பாதிப்பு, டாஸ்மாக் கேடு ஆகியவை கையாளப்படும் விதம் படத்துக்குச் சிறப்பு சேர்க்கிறது. அந்த இடத்தில் பாபியும் பிரகாஷ்ராஜும் பேசும் வசனங்களும் அப்ளாஸ் அள்ளுகின்றன.

முதல்வரை மீட்கும் பொறுப்பு போலீஸிடமிருந்து என்.எஸ்.ஜி. கைக்கு மாறுகிறது. அப்படி மாறும்போது போலீஸாரின் தலையிடல் இருக்க முடியாது. ஆனால், இங்கே என்.எஸ்.ஜி.யினரை கமிஷனர் கேலி செய்துகொண்டிருக்கிறார். அவ்வளவு சாதுரியமாக பாபி சிம்ஹாவை நெருங்கும் என்.எஸ்.ஜி.யினர், ‘வேறொரு இடத்தில் இருந்து ஆபரேஷன் நடக்கிறது’ என்று கண்டுபிடித்துச் சொல்கிறார்கள். ஆனால், படத்தின் பின் பாதியில் அதே கட்டிடத்திலிருந்து முதல்வரும் பாபி சிம்ஹாவும் வருகிறார்கள். என்ன லாஜிக் இது?

கடத்தலுக்குப் பின்னால் இருக்கும் சூத்திரதாரி யார் என்பதை முன் பாதியில் யூகிக்க முடியவில்லை. கடத்தலுக்கான காரணத்தை வெளிப்படுத்தும் இடங்களை இயக்குநர் திறமையாகக் கையாண்டிருக் கிறார். முடிவில் பாபி சிம்ஹா பத்திரி கையாளராக வெளியே வருவதும், முதல்வர் பிரகாஷ் ராஜ் அனைத்தையும் மறந்து இயல்பு நிலைக்கு மாறுவதும் அழகு.

படத்தை இரண்டு மணிநேரத்துக்குள் சுருக்கியது, இரண்டு பாடல்களை மட்டுமே வைத்தது, கதைக்குத் தேவையான அளவில் மட்டும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக்கொண்டது போன்றவை சரத்தின் நெறியாள்கைத் திறனைக் காட்டுகின்றன. ‘தேடிச் சோறு நிதந் தின்று’ என்று பாரதியின் வரிகளோடு வசனம் பேச ஆரம்பிக்கிறார், பாபி சிம்ஹா. அந்த இடத்திலிருந்தே அவரது நடிப்பும் முக பாவனைகளும் பாத்திரத்துடன் பெரிதாக ஒட்டவில்லை. கோபக்கார இளைஞன் கதாபாத்திரத்துக்கு பாபி பொருத்தமாகத் தெரிந்தாலும், உடல் மொழி, வசன உச்சரிப்பு என ஒரே மாதிரியான நடிப்பைத் தருவதிலிருந்து அவர் வெளியே வர வேண்டும். மிக முக்கியமாகத் தமிழைச் சரியாக உச்சரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

பிரகாஷ்ராஜ், நாசர் இருவரும் குறைந்த நேரமே வந்தாலும் தேர்ந்த முகபாவனைகள் மூலமே தங்கள் பங்களிப்பைத் தந்து விடுகிறார்கள். இளவரசு யதார்த்தமாக நடித்திருக்கிறார். கருணாகரனின் நடிப்பு அவரைத் தேர்ந்த கலைஞராக அடையாளம் காட்டுகிறது. பாலசரவணனும் கவனிக்க வைக்கிறார். நிக்கி கல்ராணி தனக்குத் தரப்பட்ட வேலையை ஒழுங்காகச் செய்திருக்கிறார். லியோன் ஜேம்ஸின் இசை, பிலிப் ஆர்.சுந்தரின் ஒளிப்பதிவு, கெவின் எடிட்டிங் ஆகியவை சுமார் ரகம்.

இரண்டாம் பாதியில் வேகமாக நகரும் கதையும் நடிகர்களைப் பயன்படுத்திக் கொண்ட விதமும், சொல்லவரும் செய்தியில் இயக்குநர் காட்டும் கூர்மையும் படத்தைக் காப்பாற்றிவிடுகின்றன. முன் பாதி திரைக்கதை அமைப்பிலும், பாபி சிம்ஹா கதாபாத்திரத்திலும் மேலும் மெனக்கெட்டிருந்தால் ‘கோ 2’ இந்தப் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பட்டையைக் கிளப்பியிருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x