Published : 15 Dec 2015 09:07 AM
Last Updated : 15 Dec 2015 09:07 AM

திரை விமர்சனம்: ஈட்டி

உடலில் சிறு காயம் பட்டாலும் ரத்தம் உறையாமல் வடிந்து கொண்டே இருக்கும் பிரச்சினை கொண்ட ஒரு தடகள வீரன் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான் ‘ஈட்டி’.

புகழேந்தி (அதர்வா) தஞ்சாவூரில் கல்லூரி மாணவர். தடை ஓட்ட வீரரான அவர் தேசிய அளவிலான போட்டியில் வெற்றி வாகை சூட வேண்டும் என்று தயாராகிவருகிறார். அவருக்கு ரத்த உறைவின்மை நோய் இருப்பது சிறு வயதிலேயே கண்டுபிடிக்கப்படுகிறது. மகனின் உடலில் சிறு காயம்கூடப் பட்டுவிடக்கூடாது என்று பார்த்து பார்த்து வளர்க்கிறார், காவல் துறையில் வேலைபார்க்கும் அப்பா ஜெயப்பிரகாஷ்.

இதற்கிடையில், சென்னையில் படித்துவரும் நாயகி காயத்ரி (ஸ்ரீதிவ்யா) யாரையோ திட்டுவதற்குப் பதில் தவறுதலாக அதர்வாவுக்கு போன் செய்து திட்டுகிறார். அந்த சண்டை நாளடைவில் நட்பாகி, காதலாக மாறுகிறது.

தேசிய விளையாட்டுப் போட்டிக்காகச் சென்னை வரும் அதர்வா காதலியை பார்ப்பதற்காகச் செல்கிறார். அப்படிச் செல்லும்போது அவர் கள்ள நோட்டு அச்சடிக்கும் ஒரு கும்பலோடு மோத நேர்கிறது. அதை எப்படி எதிர்கொள்கிறார், பந்தயத்தில் வெல்கிறாரா என்பது மீதிக் கதை.

நாயகனுக்கு இருக்கும் இரத்த உறைவின்மை நோய் பற்றிய விளக்கத்தோடு படம் தொடங்குகிறது. இதனால் கதையின் போக்கு என்னவாக இருக்கும் என்று யூகிக்க முடிந்தாலும், காட்சிகளைச் சித்தரித்த விதத்தில் ரசிக்கும்படியாகப் படத்தை நகர்த்தியிருக்கிறார், அறிமுக இயக்குநர் ரவி அரசு. ஒரு தடை ஓட்ட வீரன் எடுத்துக்கொள்ளும் பயிற்சி, முயற்சி ஆகியவை திரைக்கதை ஓட்டத்திலிருந்து சற்றும் பிசகாமல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

அரிதான நோய் கொண்ட இளைஞன் ஒருவன் விளையாட் டுப் போட்டியில் சாதிக்கத் துடிக் கும் கதையில் கள்ள நோட்டு அச் சடிக்கும் கும்பலின் நடவடிக்கை களை இணைத்து சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார் இயக்குநர்.

காட்சிகளைச் செதுக்குவதி லும் இயக்குநரின் கவனம் பாராட்டத்தக்கது. ரவுடிகள் அடிக்க வரும்போது நாயகன் ஓடிச் சென்று முன்னால் செல்லும் காரை மறிக்கும் காட்சியில் நாயகன் சாதனை புரிந்த தடகள வீரன் என்பதைக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொள்கிறார். ரத்தம் உறையாமை பிரச்சினை இருக்கும் நாயகன், தான் நாற்காலியில் உட்காருமுன் மேசையின் விளிம்பில் இருக்கும் கூர்மையை ஒரு நாணயத்தை வைத்து மழுங்கச் செய்கிறான்.

நாயகன், நாயகி, வில்லன் ஆகியோரின் கதாபாத்திரங்களில் மட்டுமே அதிக கவனத்தை செலுத் தாமல், நரேன், ஜெயப்பிரகாஷ், அழகம்பெருமாள், செல்வா முதலானோரின் கதாபாத்திரங் களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பு. கள்ள நோட்டு அச்சிடும் தொழிலில் ஈடுபடுபவராக வரும் ஆர்.என்.ஆர். மனோகர் அந்தப் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார்.

பார்க்காமலேயே காதல் பூத்த கதை எல்லாம் முன்பே காட்டப் பட்டாலும் இந்தப் படத்தின் திரைக் கதை அதைச் சலிப்படைய விடாமல் கொண்டுபோயிருக் கிறது. காதல் பரிமாற்றங்கள் அழகாக அமைந்துள்ளன.

சென்னைக்கு வரும் அதர்வா, திவ்யாவின் அண்ணனுக்குத் ‘தற்செயலாக’ உதவுவதும், அதன் பிறகு திவ்யா பிறந்த நாள் அன்று அவர் அண்ணனே ‘தற்செயலாக’ வீட்டுக்கு அழைத் துச் செல்வதும் சினிமாத்தனம். திவ்யாவின் அண்ணன் ரவுடி களால் துரத்தப்படும் நிலையிலும் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் இரவில் துணை கமிஷனரைச் சந்திக்க வந்து வில்லனிடம் மாட்டிக்கொள்வது, வில்லன் தரப்பினர், பொட்டலம் கட்டும் தாளில் வந்த பேட்டியைப் பார்த்துவிட்டு அதர்வாவை தீர்த்துக்கட்ட மீண்டும் புதிய திட்டம் வகுப்பது ஆகியவையும் கொஞ்சம் ஓவர்தான். இடை வேளை சண்டைக்கு முன் வரும் பாடல் பெரிய வேகத் தடை.

தடகளத்தில் ஓடுவது, பொறி பறக்கும் மோதலில் ஈடுபடுவது, உருகி உருகிக் காதலிப்பது என்று அனைத்திலும் அதர்வா முத்திரை பதிக்கிறார். பாத்திரத்துக்கு ஏற்ற உடல் கட்டு, காட்சிக்கு ஏற்ற உடல் மொழி, முக பாவங்கள் என முழுமையான நாயகனாக வெளிப்படுகிறார்.

தவறாக ஒருவரைத் திட்டிவிட்டதால் ஏற்படும் குற்ற உணர்ச்சி, பிறகு காதல் என்று உருமாறும் பாத்திரத்தில் ஸ்ரீதிவ்யா அழகாகப் பொருந்துகிறார்.

ஜி.வி. பிரகாஷ் இசையில் ‘நான் புடிச்ச மொசக்குட்டியே’ பாடல் ரம்மியம். எடிட்டர் ராஜா முகமதுவின் படத்தொகுப்பு சிறப்பு.

பெரும் லட்சியம் கொண்ட தடகள வீரனைப் பற்றிய கதை எப்படி முடியும் என்று எதிர் பார்ப்போமோ அப்படியே முடி கிறது என்றாலும் அதைக் காட்சிப்படுத்திய விதத்தில் நெகிழவைக்கிறார் இயக்குநர். சுவாரஸ்யத்துக்காக உருவாக் கப்பட்ட ‘தற்செயல்’ திருப்பங் களைக் குறைத்து நம்பகமான சம்பவங்களைக் கூடுதலாகச் சேர்த்திருந்தால் படம் அதர்வா வுக்கு இணையாக ஓடிப் பதக்கம் பெற்றிருக்கும். என்றா லும் விறுவிறுப்பான திரைக் கதையாலும் காட்சிப்படுத்திய விதத்தினாலும் ‘ஈட்டி’ தன் இலக்கை எட்டிவிடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x