Last Updated : 16 Sep, 2016 10:57 AM

 

Published : 16 Sep 2016 10:57 AM
Last Updated : 16 Sep 2016 10:57 AM

திரை நூலகம்: கனவு வர்த்தகத்தின் கதை

சாமானியனைப் பொருத்தவரை சினிமா என்பது உடனடிப் புகழ், உடனடிப் பணம், உடனடி வெளிச்சத்தோடு தொடர்புடைய ஊடகமாகத் திகழ்கிறது. ஆனால் சினிமா என்னும் கலை ஊடகத்தைப் பிரதான தொழிலாகத் தேர்ந்து, அதில் வெற்றிபெற்றவர்களின் போராட்டக் கதைகள் அத்தனை வெளிச்சம் கொண்டவை அல்ல. தோல்வியுற்ற ஆயிரக்கணக்கானவர்களின் கதைகளோ கண்ணீரிலும் ரத்தத்திலும் மவுனமாகப் புதைக்கப்பட்டவை.

1980-களின் மத்தியில் துணை இயக்குநராகப் பிரபல இயக்குநர்கள் மணிவண்ணன் மற்றும் ஆர். பார்த்திபனிடம் பணியாற்றி புதுவசந்தம் படம் மூலம் தமிழ் சினிமாவில் முத்திரை பதிக்கத் தொடங்கிய இயக்குநர் விக்ரமன் எழுதிய திரையுலக அனுபவங்கள் இவை. ‘நான் பேச நினைப்பதெல்லாம்’ நூலில் தனது துணை இயக்குநர் கால அனுபவங்கள், முதல் படம் கிடைப்பதற்காகப் பட்ட பாடுகள் தொடங்கி தனது வெற்றிப்படங்களை உருவாக்கிய விதம் வரை நேர்மையாகப் பதிவு செய்துள்ளார்.

குடும்ப சென்டிமென்ட் மற்றும் மென்னுணர்வுகள் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட விடைபெற்று விட்டது என்று கருதப்பட்ட காலத்தில் வன்முறை மற்றும் பாலியல் அம்சங்கள் சிறிதும் இல்லாத திரைப்படங்களை எடுத்து வெற்றிகண்டவர் விக்ரமன். கிருஷ்ணன் பஞ்சு, எஸ்.பி.முத்துராமன் வரிசையில் தயாரிப்பாளர்களுக்கும் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் உகந்த இயக்குநராக அறியப்பட்ட கடைசி தலைமுறை இயக்குநர்களில் இவரும் ஒருவர்.

காலையில் பட்டினி, மாலையில் லட்சாதிபதி என்ற விசித்திர சாத்தியத்தையும் அதனாலேயே வசீகரத்தையும் வைத்திருக்கும் சினிமாவின் சூதாட்டப் பரிமாணத்தையும் போகிறபோக்கில் விக்ரமன் எளிமையாகச் சொல்லிப் போய்விடுகிறார்.

நட்பின் மேன்மை, உழைப்பின் வெற்றி, காதலின் தூய்மை, குடும்ப மதிப்பீடுகளின் அவசியம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு படமெடுத்த விக்ரமன், தான் எடுத்த சினிமாக்கள் சார்ந்து போட்ட சில தப்புக்கணக்குகளையும் அதனால் ஏற்பட்ட தோல்விகளையும் வெளிப்படையாகவே பகிர்ந்துள்ளார். ஒரு பயண நேரத்தில் எடுத்துச் செல்ல, அசைபோட அருமையான புத்தகம் இது.

நான் பேச நினைப்பதெல்லாம்
திரைப்பட இயக்குநர் விக்ரமன்
வெளியீடு: போதி, இரண்டாவது தளம்,
எஸ்-2, ஜாஸ்மின் கார்டன், 5, வேதவல்லி தெரு,
சாலிகிராமம், சென்னை-93
விலை: ரூ. 170, தொலைபேசி: 044- 2376 3869

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x