Last Updated : 05 May, 2017 10:40 AM

 

Published : 05 May 2017 10:40 AM
Last Updated : 05 May 2017 10:40 AM

சந்தப் பேழையில் நிரம்பிய திராட்சை இசை: கவிப்பேரரசு வைரமுத்து பேட்டி

முப்பத்தைந்து ஆண்டுகளாக முன்னணியில் வீற்றிருக்கும் பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்துவுடன் திரைப்படப் பாடல்களின் மூலம் பாட்டுப் பந்தி வைத்த கண்ணதாசன் எம்.எஸ்.விஸ்வநாதனைப் பற்றி மேற்கொண்ட உரையாடல்.

எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் கண்ணதாசனுக்குமான இணக்கம் இருக்கிறதல்லவா, அது எப்படி ஒரு காவிய அழகாகப் பரிணமித்தது?

இந்தக் கேள்வியில் இருக்கிற இணக்கம் என்கிற வார்த்தையை மிகவும் ரசிக்கிறேன். ஓர் இசையமைப்பாளர் ஒரே காலகட்டத்தில் பல பாடலாசியர்களைக் கொண்டு எழுதுகிறார். ஒரு கவிஞர் ஒரே காலகட்டத்தில் பல இசையமைப்பாளர்களுக்குப் பணிபுரிகிறார். இப்படித் தொழில் செய்கிறபோது, யாரோ ஒரு பாடலாசிரியருக்கு யாரோ ஒரு இசையமைப்பாளர் மிக இணக்கமாகிறார். அந்த இணக்கம் என்பது தொழில்வயப்பட்ட இயைபு. எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இணக்கம் கண்ணதாசன். கண்ணதாசனுக்கு இணக்கம் எம்.எஸ்.விஸ்வநாதன். இது மன ஒருமைப்பாட்டால் நிகழ்ந்த ஒரு இணக்கம் என்று சொல்லலாம்.

இந்த இணக்கம் ஈகோ என்று சொல்லக்கூடிய தன் ஆணவத்தை உடைத்து எறிகிறது. இரண்டு பேருக்கும் மத்தியில் பேதம் இல்லை. விட்டுக்கொடுப்பதில் தயக்கம் இல்லை. அதுதான் இணக்கத்தின் அடிப்படையும்.

அவர்களின் இணக்கத்துக்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். நான் கேள்விப்பட்ட செய்தி. ஏவி.எம். ஸ்டுடியோ முழுக்க எம்.எஸ்.விஸ்வநாதனை ஓடவிட்டுக் கிச்சு கிச்சு மூட்ட பின்னாடியே துரத்திக்கொண்டு ஓடுவாராம் கண்ணதாசன். ஏவி.எம்.ஸ்டுடியோ முழுக்கவும் இதை வேடிக்கை பார்க்குமாம். “இல்லை.. இல்லைய்யா… என்னை விட்டுருய்யா” என்று கத்திக்கொண்டே ஓடுவாராம் எம்.எஸ்.வி. “உன்னை விட மாட்டேண்டா…” என்று சொல்லி வேட்டி கழன்றுவிழும் அளவுக்குக் கிச்சு கிச்சு மூட்டி இரண்டு பேரும் குழந்தைகள் மாதிரி விளையாடியிருக்கிறார்கள்.

இந்த இணக்கத்தில் வாடா போடா என்று சொல்கிற உரிமை கண்ணதாசனுக்கு இருந்திருக்கிறது. “நீ என்ன பெரிய கவிஞனா? இந்த மெட்டுக்குக்கூட உன்னால் எழுத முடியலையே…’’ என்று கண்ணதாசனைச் செல்லமாகச் சீண்டுகிற உரிமை எம்.எஸ்.வியிடம் இருந்திருக்கிறது. இந்த இணக்கம் தன் ஆணவம் என்கிற ஈகோவை உடைத்தெறிந்ததால் அவ்வளவு பெரிய காவிய அழகு வந்திருப்பதாக நான் கருதுகிறேன்.

பாடலின் சூழலைத் தாண்டிய பொருள் விரிவும் ரசனையும் கூடிய பாடல்களை இவர்கள் எப்படி உருவாக்கினார்கள்?

ஒரு கதாசிரியர் என்ன சொல்வார்? ஒரு இயக்குநர் என்ன சொல்வார்? இசையமைப்பாளர், பாடலாசிரியர் இரண்டு பேரையும் அருகில் வைத்துக்கொண்டு ‘‘இதோ பாருங்கள், எம்.ஜி.ஆர். ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே வருகிறார். விடுதலையாகி வந்தவுடன் சந்தோஷமாக ஒரு பாட்டுப் பாடிக்கொண்டே போகிறார்” என்று சொல்வார்கள். இதற்கு மேல் சொல்ல மாட்டார்கள். டைரக்டர் கே.சங்கர் இவ்வளவுதான் சொல்லியிருப்பார். மெட்டைத் தீர்மானிக்கிறவர் இசையமைப்பாளர். உள்ளடக்கத்தைத் தீர்மானிக்கிறவர் கவிஞர். உடனே கவிஞர் வினைப்படுகிறார். உலகம் பிறந்தது எனக்காக/ ஓடும் நதிகளும் எனக்காக/ மலர்கள் மலர்வது எனக்காக/ அன்னை மடியை விரித்தாள் எனக்காக’.

‘தவழும் நிலவாம் தங்கரதம்/ தாரகை பதித்த மணிமகுடம்/ குயில்கள் பாடும் கலைக்கூடம்/ கொண்டது எனது அரசாங்கம்’ யார் சொல்லியிருப்பார் இதை? கவிஞரைத் தவிர! இதற்கேற்ற துள்ளல் இசையில் விளையாடுகிறது. இந்தப் பாடல் தரும் மகிழ்ச்சி தலைமுறையையும் தாண்டித் தவழும் மகிழ்ச்சி. இந்தப் பரவசம் உலகு தழுவியது. உள்ளூர் விஷயத்தை கூட உலகு தழுவியதாக ஆக்கக்கூடிய ஆற்றல் கவிஞருக்குத்தான் இருக்கும். பாடலாசிரியருக்கு இருக்காது.


பாசமலர்

‘என்ன நினைத்து என்னை அழைத்தாயோ?’ என்று ஒரு பாட்டு. அந்தப் பாடலின் சூழலை மறந்துவிட்டுக் கேட்டால்கூட அந்தப் பாட்டுக்குள் இருக்கும் வலி தெரியும். இப்படி எத்தனை பாட்டு? அவர்களால் பாத்திரத்துக்குள் மட்டும் மழை பெய்ய முடியாது. பாத்திரத்தை நிறைத்து, பூமியில் பரந்து விரிந்து, செழித்து ஓடுவதுதான் மழையின் குணம். மழை மாதிரிதான் எம்.எஸ்.வி.யும் கண்ணதாசனும். பாத்திரத்தை நிரப்பிவிட்டுக்கூட பாரெல்லாம் பறந்தார்கள்.

அதற்குக் காரணம் - இவர்கள் கதைச் சூழலை உள்வாங்கிக்கொண்டதும், கதையை மறந்து விடுகிறார்கள். மறந்துவிட்டுப் பொதுவாகச் சிந்திக்கிறார்கள். உதாரணத்துக்கு, ‘மலர்ந்து மலராத பாதி மலர் போல…’ என்கிற பாட்டு. ஒரு அண்ணன் தனது குழந்தையைத் தாலாட்டுகிறான். ஒரு தங்கை தன் குழந்தையைத் தாலாட்டுகிறாள். இதுதான் காட்சிச் சூழல். இதில் கண்ணதாசன் வைத்த கவிதைச் செழுமை என்பது பாத்திரங்களுக்கு மேலானது. இவ்வளவு கவிதையை ஒரு அண்ணனும் ஒரு தங்கையும் நிச்சயம் பாட மாட்டார்கள்.

‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி/ நடந்த இளந்தென்றலே’- இதை ஒரு அண்ணன் பாடவில்லை; கண்ணதாசன் அந்த அண்ணன் மேல் ஏறிப் பாடியிருக்கிறார். பாத்திரத்தின் தோள் மீது ஏறி அமர்ந்துகொள்கிற மாயா ஜாலம் எம்.எஸ்.வி., கண்ணதாசன் இரண்டு பேருக்குமே தெரிந்திருக்கிறது. அதனால்தான் பாத்திரங்கள் மறைந்துவிட்ட பிறகும்கூட இந்தப் பாடல்கள் கேட்கப்படுகின்றன.

இவர்கள் இருவரும் இணைந்து வழங்கிய பாடல் அமுதங்களில் உங்கள் நெஞ்சத்துக்குக் கூடுதல் இனிப்பை வழங்கிய பாடல்களைப் பட்டியல் இடுங்களேன்.

‘மலர்ந்து மலராத பாதி மலர் போல’ (பாசமலர்), ‘காதல் சிறகைக் காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவா’ (பாலும் பழமும்), ‘சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து’ (புதிய பறவை), ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ (ராமு), ‘பொன்னென்பேன் சிறு பூவென்பேன்’.

‘எங்கள் திராவிடப் பொன்னாடே’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘உலகம் பிறந்தது எனக்காக’, ‘பேசுவது கிளியா’, ‘மௌனமே பார்வையால்’ என்று சொல்லிக்கொண்டே போகலாம். நான் காரில் போகும்போதெல்லாம் இவர்களுடைய பாடல்களைத்தான் கேட்கிறேன். மொழியும் இசையும் தனித்தனியாக இயங்குகின்றன; மொழியும் இசையும் ஒன்றாக இயங்குகின்றன. இதுதான் இவர்களின் சிறப்பு. கண்ணதாசன் - எம்.எஸ்.விஸ்வநாதன் என்கிற இந்த இரண்டு மாபெரும் ஆளுமைகள் ஒன்றுசேர்ந்தது தமிழுக்குக் கிடைத்த பெரிய வரம்.

- சித்திரை மலர் 2017-ல் வெளியான பேட்டியின் சுருக்கமான வடிவம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x