Last Updated : 09 Jan, 2015 11:37 AM

 

Published : 09 Jan 2015 11:37 AM
Last Updated : 09 Jan 2015 11:37 AM

எங்கே இருக்கிறது அந்த இணையதளம்?

எப்போது தொழில்நுட்பம் வளர ஆரம்பித்ததோ, அப்போதிலிருந்தே பைரஸியும் ஆரம்பமாகி விட்டது. திரையரங்கு மூலம் கிடைக்கும் வருமானத்தைத் தாண்டி, சிறிய முதலீட்டில் படமெடுத்து, உலகப் பட விழாக்களில் திரையிட்டுக் கோடிகளில் வருமானம் சம்பாதிக்கும் இயக்குநர்கள் எப்படிப்பட்ட படத்தை இம்மாதிரியான விழாக்களில் பங்கெடுக்க வைக்கிறார்கள்?

எப்படி யாரைத் தொடர்புகொண்டு அங்கே தங்கள் படத்திற்கான ‘லாபி’ செய்ய முகவர்களைப் பிடிக்கிறார்கள்? இப்படிப்பட்ட திரைவிழா வித்தைகளை மற்றவர்களுக்குச் சொல்லித் தருவதில்லை என்பது துரதிர்ஷ்டமான உண்மை.

ஒவ்வொரு பட விழாக்களுக்கும் போய், முகவர்கள் மூலமாய்ப் படங்களை அனுப்பி, திரையிடத் தெரிவு செய்யப்பட்டு, அங்கே கிடைக்கும் விருதுகள் மூலமாக, அந்த நாட்டில் உள்ள உள்ளூர் விநியோகஸ்தர்கள் மூலம், டிவிடி, அங்கேயுள்ள தொலைகாட்சியில் ஒளிபரப்பும் உரிமை, ப்ளூ ரே, அங்கேயுள்ள திரையரங்குகள் எனப் பல வழிகளில் பணம் பார்க்க முடியும்.

சமீபத்தில் கவனம் பெற்ற ‘குற்றம் கடிதல்’ போன்ற படங்கள் அதன் தகுதிக்காகத் தெரிவு செய்யப்பட்டுத் திரையிடப்பட்டது. ஆனால் பல தமிழ்ப் படங்கள் கான் பட விழாவில், துபாய் பட விழாவில் திரையிடத் தேர்வானது என்று விளம்பரப்படுத்துவார்கள்.

பெரும்பாலும் இத்தகைய படங்கள் இம்மாதிரி விழாக்களில் ‘பெய்ட் ஸ்கிரீனிங்’ எனப்படும் பணம் கட்டித் திரையிடும் முறையில் செய்யப்படுவது. ஆனால் வெளியில் சொல்ல மாட்டார்கள். சரி இதெல்லாம், தொழில் ரகசியம். உலகப் படமெல்லாம் எதுக்கு உள்ளூரில் போட்ட பணத்தை எடுக்கத் தியேட்டர் தவிர வேறென்ன வழி என்று கேட்பது புரிகிறது.

இந்த இணையம் எங்கே இருக்கிறது?

மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் நண்பர் ஒருவர். அவருக்குச் சம்பளம் மட்டுமே எழுபதாயிரத்துக்கும் மேல். தமிழில் வரும் அத்தனை படங்களையும் பார்த்துக் கருத்து சொல்வார். அவருக்கு வீடு ஏதோ ஒர் அத்துவானக் காட்டுக்குள் இருக்கிறது. அலுவலகத்திலிருந்து நடு இரவில்தான் வீட்டுக்கே போய்ச் சேரும் ஆபத்பாந்தவர்.

“எப்படிங்க எல்லாப் படத்தையும் பார்க்க நேரம் கிடைக்குது?” என்று கேட்டபோது “எல்லாம் இணையத்திலிருந்து தரவிரக்கம் செய்த கோப்புகள்தான்” என்றார். எல்லாப் புதிய படங்களும் வெளியான அன்று மதியமோ.. அல்லது இரண்டாவது நாளோ ‘டாரண்ட்’ இணையதளத்தில் வந்துவிடுகிறது. அதைத்தான் பெரும்பாலும் திருட்டு வீடியோக்காரர்கள் பிரதியெடுத்து விற்கிறார்கள்.

வெளிநாட்டு உரிமம் கொடுப்பதால் தான் பைரஸி வருகிறது; அங்கிருந்து வரும் தம்மாத்துண்டு பணத்துக்கு ஆசைப்பட்டே மொத்த வருமானத்தை இழக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்கிறது. அதற்கு டாரண்ட் இணையதளமே மூலக் காரணமாக இருக்கிறது. ஆனால் இந்த இணையதளம் எந்த நாட்டிலிருந்து இயங்குகிறது என்று துருவினால் சரியான தகவல் கிடைப்பதில்லை.

இது முழுவதுமே அடிக்கடி எளிதில் இடத்தை மாற்றிக்கொள்ளும் ‘மேகக் கணினி’ எனப்படும் க்ளவுட் கம்ப்யூட்டிங் சர்வர் முறையில் விட்டலாச்சார்யா படத்தின் தந்திரக் காட்சிபோலத் தனது ஜாகையைச் சட் சட்டென்று மாற்றிக்கொண்டே செல்வதால் அதைத் துரத்திப் பிடித்து சர்வதேசப் போலீஸிடம் ஒப்படைப்பது பெரும் சவாலாக இருக்கிறது. மற்றத் திருட்டு வீடியோ இணையதளங்களுக்கும் இதுவே வள்ளலாகவும் இருக்கிறது.

ஆனால் திரையுலகினர் ஒரணியில் திரண்டால் டாரண்டை உண்டு இல்லை என்று பண்ணிவிட முடியும். ஆனால் அது நடப்பதே இல்லை. தவிர டாரண்ட்டை ஒரு இணைய ராபின் ஹுட் என்றே சொல்லிவிடலாம். டாரண்ட் திரைப்படங்களை மற்றும் பரப்புவதில்லை.

மென்பொருட்கள், மின்நூல்கள், ஆவணங்கள் எனக் காசு கொடுத்து வாங்க முடியாத விலையில் எட்டாத உயரத்தில் இருக்கும் ஏழை மற்றும் வளரும் நாடுகளைச் சேர்ந்த மக்கள் பயன்பெறட்டும் என்றே அவர்கள் இவ்வாறு செய்வதாகத் தெரிகிறது. எப்படியிருப்பினும் குற்றம் குற்றம்தான்.

இப்படிக் கேட்பவர்களை என்ன செய்வது?

சமீபத்தில் நண்பர் ஒருவர் இயக்கி, ஓரளவுக்கு நல்ல நடிகர்கள் நடித்த படம்தான் அதன் வெளிநாட்டு உரிமையைப் பைரஸி வெளிவரக் கூடாது என்பதற்காக, படம் வெளியாகி இரண்டு நாட்கள் வரைக்கும் விற்கவில்லை. அப்படியிருந்தும் முதல் நாள் இரவே தெள்ளத் தெளிவான பிரதி இணையத்தில் உலாவியது.

இப்படி நமக்கும் உபயோகப்படாமல், எவனோ ஒருவன் சம்பாதிப்பதற்காக நாம் படமெடுப்பதா என்று யோசித்து டி.வி.டி.யைப் படம் வெளிவரும்போதே கொண்டு வந்தால் குறைந்தது பணம் தயாரிப்பாளருக்காகவாது வருமே என்று அதற்கான முயற்சி செய்தால் அதற்குப் பல இடங்களில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் வந்து கொண்டிருக்கிறது.

50 ரூபாய்க்கு டி.வி.டி போட்டால் அதையே பிரதியெடுத்துத் திருட்டு வீடியோக்காரன் 30 ரூபாய்க்குக் கொடுக்க ஆரம்பிப்பான். பைரஸியை ஒழிச்சுருவீங்களா?,

“இது பிரதியெடுக்கவே முடியாத தொழில்நுட்பத்தில் வெளிவருகிறது” என்றால், இப்படித்தான் “பாய்ஸ் படத்தின் டி.வி.டி.யையும் சொன்னாங்க அதை அடுத்த நாளே உடைத்தெறிந்து பிரதியெடுத்துக் கள்ளச் சந்தையில் வெளியிடவில்லையா என்று கேட்கிறார்கள்.

“திருட்டு டிவி.டி வந்ததும், பேருந்து, உள்ளூர் தொலைகாட்சியில் போட்டுவிடுவார்கள். குறைந்த விலையில் நிஜ டி.வி.டி.யே கொடுத்தால், அதான் அம்பது ரூபா கொடுத்துட்டோம்ல இனிமேல் அது எங்களுடையது, அதை என்னவேணா பண்ணுவோம். அப்ப என்ன பண்ணுவீங்க?” என்று அடாவடியாகக் கேட்பவர்களும் நம் மத்தியில் இருக்கவே செய்கிறார்கள்.

இசை வெளியீடு நடக்கும்போதே இணையத்தில் தரவேற்றும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கோம், நீங்கள் நிஜ டிவிடி கொடுத்தால், அதை வெளியிட்ட அடுத்த சில மணி நேரத்தில் இணையத்தில் தரவேற்றத்திருடர்கள் தயராக இருப்பார்கள் என்கிறார்கள் இன்னும் சிலர். அதேபோல் ஒரு டி.வி.டி. வந்தால் அதைப் பத்துப் பேர் பிரதிசெய்து போட்டுப் பார்க்கும் உலகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு டி.வி.டி. வாங்கிக்கொள்வார்களா என்று கேட்கிறார்கள் இன்னும் பலர்.

இது வேண்டாத வேலையென எதிர்மறையாகவே பேசுபவர்கள் நிறைந்திருக்கும் சூழ்நிலையில் “பெரிய படமே நாலு நாள்தான் ஓடுது, சின்னப் படத்தைப் பார்க்க நாலு பேர்தான் வர்றான். இதுல நீங்க டி.வி.டி. வேற போட்டு விற்றீர்கள் என்றால் திரையரங்கு வரும் நாலு பேரும் காணாமால் போய் நாங்க எங்க தொழிலையே இழுத்து மூட வேண்டியதுதான் என்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.

ஆனால் அந்த நாலு பேருக்குப் படம் காட்ட முடியாமல்தான் சின்னப் படங்கள், வெளியான இரண்டாவது காட்சியிலோ, அல்லது நான்காவது காட்சியிலோ திரையரங்கை விட்டுத்தூக்கப்படுகின்றன. அதற்குக் காரணம் திரையரங்க உரிமையாளர்கள் அல்ல. படங்களை வெளியிடும் முறை.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, வாடகை முறையில் விநியோகஸ்தர்கள் எடுப்பதில்லை. வருமான சதவிகித அடிப்படையில்தான் படங்கள் போடப்படுகின்றன. நான்கைந்து பேர் மட்டும் வரும் படங்களை அவர்கள் வெளியிட்டால் தியேட்டரைச் சுத்தம் செய்யப் பயன்படும் கிருமிநாசினி திரவம் வாங்கக்கூட வருமானம் இருக்காது என்பதும்தான் நிதர்சன உண்மை. பின் இதற்கு என்னதான் வழி? பேசுவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x