Last Updated : 16 Sep, 2016 10:56 AM

 

Published : 16 Sep 2016 10:56 AM
Last Updated : 16 Sep 2016 10:56 AM

இந்தியாவின் வானம்பாடியாக உயர்ந்தவர்

செப்டம்பர் 16: எம்.எஸ். சுப்புலட்சுமி நூற்றாண்டு நிறைவு

1939 முதல் 1941 வரை வருடத்துக்கு ஒன்றாக மூன்று படங்களில் நடித்து பெரும்புகழைப் பெற்றிருந்தார் எம்.எஸ். இருப்பினும் அந்த சினிமா வெளிச்சத்திலிருந்து நகர்ந்து எப்போதும்போல் மேடைக் கச்சேரிகளைத் தொடர்ந்துகொண்டிருந்தார். கச்சேரிகள் மூலம் கிடைக்கும் பணத்தின் பெரும்பகுதியைத் தயக்கம் சிறிதுமின்றி தர்ம காரியங்களுக்கு வழங்கிவந்தனர் ‘வள்ளல் தம்பதி’யாக விளங்கிய எம்.எஸ்.ஸும் சதாசிவமும்.

சதாசிவத்தின் மனக்குறை

எல்லாம் நல்லபடியாகத்தான் சென்றுகொண்டிருந்தன. ஆனாலும் ஏதோ ஒரு மனக்குறை சதாசிவத்தின் மனதை நெருடியது. ‘கச்சேரிகள் வழியே எம்.எஸ்.ஸின் இசை மேல்தட்டு, நடுத்தர வர்க்கத்தினரை மட்டுமே சென்றடைகிறது; பாமர மக்களை விட்டுச் சற்று விலகியே இருக்கிறதே… அதை அவர்களிடமும் கொண்டுசேர்க்க என்ன வழி?’ இதுதான் சதாசிவத்தின் மனக்குறை. சிந்தித்தார்… அதற்குத் திரைப்படம் ஒன்றுதான் சரியான வழி என்று நம்பினார். மீண்டும் எம்.எஸ்ஸைத் திரையில் கொண்டுவர விரும்பினார்.

பக்தியை வளர்க்க சினிமா

தன் விருப்பத்தை மனைவியிடம் கூறி, எம்.எஸ்.ஸின் சம்மதத்தை வாங்கினார். சினிமா என்றால் அது பொழுதுபோக்குக் கலையாக மட்டும் இருக்கக் கூடாது; அதை பக்தியை வளர்க்கவும் நாம் பயன்படுத்த வேண்டும் என்று கணவனும் மனைவியும் விரும்பினார்கள். அதன்படி, மனிதப் பிறவி எடுத்தும், தன் பக்தியால் கடவுளைச் சென்றடைந்த பக்த ‘மீரா’வின் வாழ்க்கைக் கதையைத் தம்பதியர் தேர்வுசெய்தனர். தென்னிந்தியாவில் ஆண்டாள் போல வட இந்தியாவில் மீரா.

படப்பிடிப்புக்கு நடுவிலும் இசை

முதலில் தமிழில்தான் ‘மீரா’ தயாரிக்கப்பட்டது. மீராவாக எம்.எஸ்.ஸும், மீராவின் கணவர் ராணாவாக, புகழ்பெற்ற நடிகர் சித்தூர்.வி. நாகைய்யாவும் நடித்தனர். எம்.எஸ்.,சதாசிவம் தம்பதியே படத்தைத் தயாரிக்க, எஸ்.வி. வெங்கட்ராமன் இசையமைத்தார். கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதினார். ‘சகுந்தலை’ படத்தை மிகச் சிறப்பாக இயக்கி முத்திரை பதித்திருந்த எல்லீஸ் ஆர். டங்கனையே ‘மீரா’ படத்தை இயக்க அமர்த்தினார் சதாசிவம்.

“ நிஜ மீரா வாழ்ந்த இடத்திலேதான் நானும் நடிப்பேன். அப்போதுதான் மீராவை என்னால் உணர்ந்து வெளிப்படுத்த முடியும்” என்று சொல்லிவிட்டார் எம்.எஸ். அவர் விருப்பப்படியே மீரா பிறந்து வளர்ந்த ராஜஸ்தானில் மீராவின் பாதம் பட்ட ஜெய்ப்பூர், உதய்பூர், சித்தூர், துவாரகா ஆகிய இடங்களில் உள்ள அரண்மனைகளும் கோவில்களும் பின்புலமாக அமைய, ‘மீரா’ வளரத் தொடங்கினாள். படப்பிடிப்புக்காகச் சென்ற இடத்திலும் மக்கள் விருப்பத்துக்காகக் கச்சேரிகள் நிகழ்த்தி வட இந்தியர்களை மகிழ்வித்தார் எம்.எஸ்.

முன்வந்து உதவிய மன்னர்

மக்கள் விருப்பத்தையே தட்ட முடியாதவர், மன்னர் கேட்டால் தாமதிப்பாரா? உதய்பூர் மன்னர் மஹாராணாவுக்காக அரண்மனை தர்பாரில் இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. எம்.எஸ்.ஸின் கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை ஆகியவற்றில் கரைந்தார் மன்னர். மகிழ வைத்த இசைக்கு அந்த மன்னர் கொடுத்த பரிசு சதாசிவத்துக்கு மிகப் பெரிய உதவியாக இருந்தது. மீரா படத்துக்காக யானைகளும் குதிரைகளும் தேவைப்பட்டன. அவ்வளவு யானைகளும் குதிரைகளும் மன்னரிடம்தான் இருந்தன. மஹாராணாவிடம் தன் தேவையைத் தெரிவித்தார் சதாசிவம். “சுப்புலட்சுமியின் கல்யாணி ராக ஆலாபனை ஒன்றுபோதுமே…. எதையும் எழுதி வைக்கலாம். யானை, குதிரைகளையா தர மாட்டேன்!? தராளமாக எடுத்துக்கொள்ளுங்கள்” என்றுமுன்வந்து உதவினார் மன்னர். அரச பரிவாரங்களுடன் மீரா வளர்ந்தாள்.

மீராவாக மாறிய எம்.எஸ்

மீராவின் வாழ்க்கைக்கும் எம்.எஸ்.ஸின் வாழ்க்கைக்கும் ஒரு மெல்லிய ஒற்றுமை இருந்தது. அரண்மனை வாழ்க்கையில் விருப்பமில்லாமல் கடவுள் மீது கொண்ட பக்தியால் இசையை, கடவுளை அடையும் ஊடகம் என உணர்ந்து கிருஷ்ணன் மீது பஜனைகள் பாடி, ஞானஒளி பெற்று கடவுளுடன் ஐக்கியமானார் மீரா. சுப்புலட்சுமியும் இசையை பக்தியின் மறுவடிவமாகப் பார்த்தார். இதை உணர்ந்ததாலோ என்னவோ, ஒரு சராசரி மனைவிக்குரிய சுமைகளையும், பொறுப்புகளையும் அவர் மீது சுமத்தவில்லை சதாசிவம். கணவர் தன் மனமறிந்து நடந்துகொண்டாலும் இல்லறத்தில் தன் கடமைகளைக் கண்ணெனக் கருதிச் செய்துவந்தார் எம்.எஸ்.

மீரா படப்பிடிப்பில் எம்.எஸ்.ஸுக்கு ஒரு விபத்து. மீரா (எம்.எஸ்) யமுனை நதியைப் படகில் கடக்க வேண்டும். திடீரென படகு கவிழும். யார் கண்ணுக்குக் தெரியாமல் மாறுவேடத்தில் படகில் இருக்கும் கிருஷ்ணன் மீராவைக் காப்பாற்ற வேண்டும். இதுதான் காட்சி. இதைப் படமாக்கும்போகும்போது, தலையில் அடிபட்டு தண்ணீருக்குள் மயங்கி விழுந்தார் எம்.எஸ். பிறகு படகுப் பயணிகளே அவருக்கு முதலுதவி செய்து காப்பாற்றினார்கள். மீராவைப் போலவே கிருஷ்ணன்தான் தன்னையும் காப்பாற்றினார் என்றார் எம்.எஸ்.

மீரா படத்துக்காக சித்தூர் கிரிதாரியின் சன்னிதியில் அமர்ந்து எம்.எஸ். பாடியபோது இனம்புரியாத உணர்வுகளில் மூழ்கித் தவித்து தன்னையறியாமல் அழுதிருக்கிறார் எம்.எஸ். தூவரகையின் கோயில் படிகளின் மீது மீரா ஏறி, கண்ணன் சன்னிதியில் கதறிக்கொண்டு நுழைந்து உணர்வற்று விழுகிற காட்சியில் எம்.எஸ். உண்மையாகவே சில நிமிடங்கள் உணர்விழந்துவிட்டார். அந்த அளவுக்குக் கண்ணனை நினைத்து பக்தியில் ஒன்றிவிட்ட எம். எஸ்., மீராவாகவே மாறியிருந்தார்.

காற்றினிலே வரும் கீதம்

படப்பிடிப்பின்போது நடந்த தெய்வீக சுவாரஸ்யங்கள் இன்னும் ஏராளம். அப்படிப்பட்ட மீரா திரைப்படம் 1945-ல் வெளியாகி சரித்திர வெற்றிபெற்றது. எதை எதிர்பார்த்து சதாசிவம் எம்.எஸ்.ஸைத் திரையில் மீண்டும் பாடவிட்டாரோ அது எதிர்பார்த்ததற்கும் மேலாகவே நடந்தது. மீரா படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பரவின. அதிலும் குறிப்பாக கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதி, எம்.எஸ். பாடிய ‘காற்றினிலே வரும் கீதம்’ பாடல், சங்கீத நுட்பங்கள் அறியாத, இசையின் இனிமையை மட்டுமே ரசிக்கத் தெரிந்த எளிய, பாமர மக்களின் மனதில் ஊடுருவி அவர்களது இதயங்களைக் கொள்ளையடித்தது.

இந்தியில் சாதனை

மீராவின் படப்பிடிப்பு வட இந்தியாவில் நடந்தபோது அங்குள்ளவர்கள் “எங்கள் மீராவை இந்தியில் எடுக்காமல் ஏன் தமிழில் எடுக்கிறீர்கள். எம்.எஸ். குரலில் மீராவின் கானத்தை நாங்கள் கேட்க வேண்டாமா?” என்று கேட்டது சதாசிவத்தின் மனதில் எதிரொலித்துக்கொண்டேயிருந்தது. மீரா படத்தை இந்தியில் டப் செய்யாமல் நேரடியாக இந்தியில் மீண்டும் தயாரித்தார் சதாசிவம்.

வளர்ந்த மீராவாக எம்.எஎஸ்.ஸும், குழந்தை மீராவாக எம்.எஸ்.ஸின் மகள் செல்வி ராதாவும் சொந்தமாக இந்தியில் பேசி, பாடி நடித்தனர். சுந்ததிர இந்தியாவில் 1947- டிசம்பர் 5 அன்று டெல்லியில் நடந்த படத்தின் ப்ரீமியர் காட்சிக்கு அந்நாள் பாரதப் பிரதமர் நேருவின் அழைப்பை ஏற்று இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக இருந்த மவுண்பேட்டன் பிரபு தன் மனைவி குழந்தைகளுடன் வந்து பெருமைப்படுத்தினார்.

அந்தப் படத்தின் தொடக்கக் காட்சியில் தோன்றி அறிமுகவுரை நிகழ்த்தியிருந்தார் ‘நைட்டிங்கேல் ஆஃப் இந்தியா’ என்றைழக்கப்பட்ட கவிக்குயில் சரோஜினி நாயுடு. “மீரா படத்தின் மூலம் சுப்புலட்சுமியை உலகுக்கு அறிமுகப்படுத்துவதில் ஆனந்தப்படுகிறேன். இவர் மீராவின் நகல் அல்ல. மீராவேதான்” என்று கூறி ‘இந்தியாவின் வானம்பாடி’ என்று தனக்கு வழங்கப்பட்ட பட்டத்தை எம்.எஸ்.ஸுக்கு சமர்ப்பணம் செய்தார். இந்தி மீரா மூலம் இந்தியாவின் வானப்பாடியாகப் பெரும் புகழ் பெற்றார் எம்.எஸ்.

சுமதியில் தொடங்கி மீராவில் ஐக்கியம்

மீராவுக்குப் பிறகு, எம்.எஸ்.ஸைத் தேடித் திரைப்பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் அவற்றைப் பரிசீலிப்பதா வேண்டாமா என்ற குழப்பம் ஏற்பட்டது சதாசிவத்துக்கு. எந்த முடிவும் எடுக்க முடியாமல் நண்பர் கல்கி கிருஷ்ணமூர்த்தியிடம் யோசனை கேட்டார்.

“ மீரா படத்தில் நடித்தபிறகு வேறு எந்தப் படத்தில் எம்.எஸ். நடித்தாலும் ஒரு மாற்று குறைவாகத்தான் இருக்கும். மீரா மூலம் உன்னதமான தெய்வீக நிலைக்கு அவரை உயர்த்திய பிறகு, மறுபடி மானுட நிலைக்கு இறங்கிவரச் செய்ய வேண்டாம் என்பது என் அபிப்பிராயம்” என்று மனதில் பட்டதைப் பளிச்சென்று சொல்லிவிட்டார் கல்கி. நண்பரின் கருத்தை அப்படியே ஏற்றுக்கொண்டார் சதாசிவம்.

அதன்படி ‘ஸேவாஸதனம்’ படத்தில் சுமதியாக திரையில் பிறந்து மீராவோடு ஐக்கியமாகிவிட்டார் எம்.எஸ். அவரது நூற்றாண்டுதான் முடிகிறதே தவிர அவரது தெய்வீக இசை அல்ல.

- கட்டுரையாளர், கலைமாமணி, முனைவர் எஸ்.என். உமர்,
பத்திரிகையாளர், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர்.
இவர் எழுதிய ‘இசையரசி’ எம்.எஸ்.சுப்புலட்சுமி’ என்ற நூலில்
இடம்பெற்ற கட்டுரையின் சுருக்கமான வடிவம் இது.
புத்தக வெளியீடு: அல்லயன்ஸ் கம்பெனி.
தொடர்புக்கு: 044 - 24641314

கணவர் சதாசிவத்துடன் எம்.எஸ்

மீராவாக எம்.எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x