Published : 15 Nov 2013 12:00 AM
Last Updated : 15 Nov 2013 12:00 AM

அந்த 7 நாட்களை எப்படி மறப்பது?

மைனாவின் வெற்றிக்குப் பிறகு பரபரப்பாகப் பேசப்பட்ட அமலா பாலுக்கு அடுக்கடுக்காக வாய்ப்புகளும் குவிந்தன. காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் என்று பெரும் எதிர்பார்ப்போடு வந்த படங்கள் அவ்வளவாகச் சோபிக்காவிட்டாலும் விஜயுடன் ஜோடி சேர்ந்ததும் இனி இவர்தான் நம்பர் ஒன் என்றார்கள். ஆனால் அடுத்தடுத்த தமிழ்ப் படங்களை ஒப்புக்கொள்வதில் நிதானம், தேடிவந்த இந்திப் பட வாய்ப்பை மறுக்கும் துணிச்சல் என்று ஆச்சரியப்படுத்துகிறார் அமலா. ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிமிர்ந்து நில் படப்பிடிப்பு முடிந்த கையோடு தனுஷ் ஜோடியாக ‘வேலையில்லா பட்டதாரி’ படப்பிடிப்பில் மும்முரமாகிவிட்டார். படப்பிடிப்புக்கு நடுவில் அவரைச் சந்தித்தபோது தன்னைப் பற்றிய ரகசியங்களை ‘தி இந்து’வுக்காக உடைத்துப் பேசினார்.

தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களை இயக்குவது யார்?

எதற்காக இப்படியொரு கேள்வி? நான் அப்பா பெண். அப்பா, அம்மாவைத் தவிர யாரும் என்னை இயக்க முடியாது.

தேடி வந்த இந்திப் பட வாய்ப்பை மறுத்திருக்கிறீர்களே?

இந்திப் பட வாய்ப்பை மறுத்ததால், நான் முடிவு எடுக்கத் தெரியாதவள் என்று அர்த்தமா என்ன? அக்ய்குமார் ஜோடியாக நடிக்க யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால் எனக்குப் பிரச்சனை அதுவல்ல. தொடர்ச்சியாக நான் ஒப்புக்கொண்டிருக்கும் மலையாள, தெலுங்குப் படங்களின் தேதிகள் குறுக்கிட்டதுதான் காரணம். முக்கியமாக இந்திப் பட பிரமோஷனுக்காக மட்டும் 15 நாட்கள் தனியாகக் கேட்கிறார்கள். இதுவும் கால்ஷீட்டில் அடங்குகிறது. அந்தப் பதினைந்து நாளில் இரண்டு பாடல் காட்சிகளில் நடித்துவிடலாமே! எனக்குப் பிரச்சனை கால்ஷீட்தான். பாலிவுட்டில் இதைவிடப் பெரிய வாய்ப்பு வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

தமிழில் தனுஷ் படம் தவிர வேறு படங்கள் இல்லையே?

நிமிர்ந்து நில் படத்தை விட்டுவிட்டீர்களே. தமிழ், தெலுங்கு இரண்டுமொழிகளுமே எனக்கு முக்கியம். இவை இரண்டை விடவும் எனக்கு மிக முக்கியம் எனது தாய்மொழி. மலையாளத்தில் இப்போதுதான் தொடர்ச்சியாக, நான் எதிர்பார்க்காத விதமாக வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.

தலைவா படத்தில் விஜயைக் காதலிப்பதாக நடிக்கும் கதாபாத்திரம் உங்களை வில்லிபோலச் சித்தரித்ததே?

அது உங்கள் பார்வை. மீரா நாரயணன் கேரக்டர் படத்தில் வலுவாகத்தான் இருக்கிறது. விஜயை வில்லனிடமிருந்து காப்பாற்றுவதே நான்தானே. அப்புறம் எப்படி என் கேரக்டரை வில்லி என்று சொல்கிறீகள்?

நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி படங்களில் என்ன மாதிரியான கதாபாத்திரங்கள்?

நிமிர்ந்து நில் படத்தில் ’பூமாரி’ என்ற கேரக்டரில் நடிக்கிறேன். கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து, இங்கே வேலை செய்யும் கேரக்டர். மைனா படத்துக்கு இணையாக எனக்குப் பெயர் வாங்கிக் கொடுக்கும். வேலைக்குச் செல்லும் இன்றைய இளம் பெண்களை அப்படியே பிரதிபலிக்கும் கேரக்டர். வீட்டை விட்டு வெளியே கிளம்பினால் எத்தனை விதமான மனநிலை கொண்ட ஆண்களைப் பெண்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதை என் கேரக்டர் மூலம் சூப்பராகச் சொல்லியிருக்கிறார் சமுத்திரக்கனி சார். கதை சொல்லும்போதே அவ்வளவு த்ரில்லிங்காக உணர்ந்தேன். சமுத்திரக்கனி சாருக்கும் எனக்கும் இந்தப் படத்துக்கு முன்பே ஒரு கனெக்க்ஷன் இருக்கிறது. அவரது நாடோடிகள் படம் மலையாளத்தில் ‘இது நம்முடே கதா’ என்று ரீமேக் ஆனது. அதில் ஒரு சின்ன கதாபாத்திரம் செய்திருந்தேன். எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்த படம் அது. வேலையில்லா பட்டதாரியில் சாரு என்ற இளம் டாக்டராக நடிக்கிறேன். இது ரொமாண்டிக் காமெடி. எனக்குக் காமெடியும் வரும் என்பதை டைரக்டர் வேல்ராஜ் நிரூபிப்பார். தனுஷோட தயாரிப்பில், அவரது 25ஆவது படத்தில் நடிப்பதில் பெருமைப்படுகிறேன். மயக்கம் என்ன படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து மிரண்டு போனவள் நான்.

ஜெயம் ரவி பற்றி...

ஜெயம் ரவியை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. கோபம் வரும் காட்சிகளில் அவரைப் பார்த்தாலே எனக்குக் கலக்கமாக இருக்கும். ஜெயம் ரவி கேமராவுக்காக நடிக்கிறாரா இல்லை நிஜமாகவே கோபப்படுகிறாரா என்ற சந்தேகமே வந்துவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

கடந்த மாதம் பிறந்த நாள் கொண்டாடினீர்கள், கொண்டாட்டத்தில் என்ன ஸ்பெஷல்?

ஐயோ.... என்னோட லைஃப்ல மறக்க முடியாத பிறந்த நாள் இது! ராஜாஸ்தான்ல இருந்த ஜெய்சல்மர் அரண்மனையில 6 நாள் படப்பிடிப்பு. ’ஒரு இந்தியன் பிரனயகதா’ ஷூட்டிங். நான் ரொம்ப விரும்பி நடிக்க நினைச்ச டைரக்டர் சத்தியன் அந்திக்காடு டைரக்‌ஷன். அவரோட ‘கோச்சு கொச்சு சத்தங்கள்’ படத்தை ஸ்கூல் படிக்கும்போது பார்த்து, இவர் டைரக்‌ஷன்ல நடிக்க மாட்டோமான்னு அப்போவே நினைச்சிருக்கேன். இப்போ நிஜமாவே அவர் இயக்கத்துல நடிக்கிறது கனவு மாதிரி இருக்கு. இந்தப் படத்துல என்னை ஒரு தேவதை மாதிரி சித்தரிக்கிறார். அந்த அரண்மனையில தங்கியிருந்த 7 நாட்களும் என்னை தேவதை மாதிரி பார்த்துகிட்டாங்க. 500 வருஷம் பழமையான ராயல் பெயிண்டிங்ஸ் இருந்த சூட் ரூமை எனக்குக் கொடுத்துட்டாங்க. ராஜ வாழ்க்கைன்னு சொல்வாங்களே, உண்மையாவே அதை உணர்ந்தேன். மொத்த அரண்மனையையும் படப்பிடிப்புக்காக டெக்டரேட்டிவ் லைட்டிங் பண்ணியிருந்தாங்க. என்னோட பிறந்த நாளுக்கு லைட் பண்ணின மாதிரி ஒரு ஃபீல். அங்கேதான் யூனிட்ல இருந்த எல்லாரோடயும் பிறந்த நாள் கொண்டாடினேன். அந்த அரண்மனையையும் யூனிட்டையும் பிரிஞ்சுவர மனசே இல்ல! அந்தப் படத்துல பகத் பாசில் ஹீரோ!

பொது நிகழ்ச்சி, சினிமா நிகழ்ச்சி இரண்டுலயும் மார்டன் டிரெஸ்ல கலக்குறீங்க? உங்களுக்குப் புடவையே பிடிக்காதா?

யாரு சொன்னது. அம்மாகிட்ட பெரிய காஞ்சிவரம் கலெனே இருக்கு. அம்மாகிட்ட பட்டுப்புடவை கட்ட நல்லா டிரெயினிங் எடுத்துட்டு இருக்கேன். அம்மாவோட பட்டுபுடவையக் கட்டி, அவங்க நகைகள்ல கொஞ்சம் எடுத்துப் போட்டா கொஞ்ச ஆரம்பிச்சுடுவாங்க. புடவை கட்டும்போதெல்லாம் என்னை நான் முழுமையான பெண்ணா உணர்ந்திருக்கேன்.

ட்விட்டர்ல உங்களால எப்படித் தொடர்ந்து அப்டேட் பண்ண முடியுது?

ஒரு ஸ்டேட்டஸ் போட எனக்கு 30 செகண்ட்ஸ் போதும். ட்விட்டர் இல்லன்னா எனக்கு மூச்சே நின்னுடும்! எவ்ளோ ஃபேன்ஸ்... ரொம்ப பக்கத்துல வந்து ரொம்ப வேலிடா ஃபீட் பேக் தராங்க தெரியுமா?

படம் உதவி: குணா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x