Published : 15 Dec 2018 04:52 PM
Last Updated : 15 Dec 2018 04:52 PM

எது நிஜ சினிமா? - 15 ஆண்டுகளாக CIFF வரும் 72 வயது சினிமா ஆர்வலர்

இனியன்

உலகத் திரைப்படங்கள் பார்ப்பது மூலமாகவே உண்மை சினிமாவைப் புரிந்துகொள்ள முடியும் என்கிறார், 15 ஆண்டுகளாக சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவுக்கு வரும் 72 வயது உலக சினிமா ஆர்வலர் சத்தியமூர்த்தி.

கடலூரைச் சேர்ந்த சத்தியமூர்த்தி தனது 60 வயது வரை டூரிஸ்ட் கார் ஆபரேட்டராக பணிபுரிந்து, பிறகுதான் சேமித்து வைத்த பணத்தில் முதுமையை செலவு செய்வதாகக் கூறினார்.

"வருடந்தோறும் நடக்கும் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்காக சென்னையிலுள்ள தனது மகள் வீட்டில் தங்கி அங்கிருந்து திரையரங்குகளுக்கு வந்து செல்கிறேன்" என்றார். அவரது உலக சினிமா ஈடுபாடு எங்கு தொடங்கியது என்று கேட்டதற்கு மெல்லிய புன்னகையுடன் தன் பயணத்தை பகிர்ந்துகொண்டார்.

"சின்ன வயசுல இருந்தே தமிழ், கன்னடம், தெலுங்குன்னு எல்லா படமும் பார்ப்பேன். சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த காலத்தில் மெட்ராஸ் பிலிம் சொசைட்டி என்ற ஒரு அமைப்பு ஜெயலலிதா, எஸ்.வி.சேகர் போன்றோரை உறுப்பினர்களாகக் கொண்டு சந்தா அடிப்படையில் செயல்பட்டுக்கொண்டிருந்தது. அதில் மாதம் இத்தனை படங்கள் என குறிப்பிட்ட அளவில் உலகத் திரைப்படங்கள் திரையிடப்பட்டது. அங்குதான் எனக்கு உலக சினிமா பற்றிய அறிமுகம் கிடைத்தது.

பின்னர் அந்த அமைப்பிலிருந்து கருத்து வேறுபாடு காரணமாக சென்னை பிலிம் சொசைட்டி என்று மற்றொரு அமைப்பு உருவானது இயக்குனர் ஹரிஹரன் போன்றோர் அதில் முக்கியப் பொறுப்பில் இருந்தார்கள். அங்கே இடதுசாரி சிந்தனை உள்ளோர் இருந்ததனால் நல்ல திரைப்படங்கள் அதிகமான அளவில் திரையிடப்பட்டன. இவையெல்லாம் தான் எனக்கு உலக சினிமாவுக்கான வாயிலை திறத்து காட்டியது" என்றார்.

"நல்ல சினிமா பார்க்கவேண்டும்ங்கிற ஆசை தான் உலக சினிமா பார்க்க தூண்டியது. இப்போதெல்லாம் வெளிவரும் படங்களில் பெரும்பாலும் கமர்சியலாக வரக்கூடிய திரைப்படங்களே அதிகம். அதிலும் தமிழ், இந்தி என இரண்டும் ரொம்ப கமர்சியலாவே ஆகிடுச்சு. படங்கள் உள்ளடக்கமோ பெரும்பாலும் ஆபாசமா இருக்கு, நம்ப முடியாத செய்திகளை கொண்டிருக்கு. ஆனா இங்க, திரைப்பட விழாவுல திரையிடப்படும் திரைப்படங்கள் அப்படிப்பட்டது இல்லை. ஒவ்வொரு திரைப்படமும் வேற வேற தளத்துக்கு நம்மள கூட்டிட்டு போகுது.

உலகத் திரைப்படங்கள் பார்க்குறது மூலமா அறிவு வளரும், உண்மையான திரைப்படம்னா என்னனு புரியும்.

தமிழ்ப் படம் மட்டுமே பார்த்துட்டு இருந்தா கடைசி வரைக்கும் சினிமான்னா என்னனே புரிஞ்சுக்க முடியாது. சினிமா என்கிற பேர்ல ‘டிராமா’ பார்த்துருப்பீங்க அவ்ளோ தான்" என்றார் அவர்.

பல வருடமாக, சென்னையிலும் பல்வேறு இடங்களிலும் திரைப்பட விழாக்களுக்கு செல்லக் கூடிய சத்தியமூர்த்தி தாத்தாவிடம் இந்த மாதிரி விழாக்களில் சினிமா ரசிகரா இருக்கக்கூடிய உங்களுக்கு இருக்கும்? எதிர்பார்ப்புகள் என்ன? என்று கேட்டதற்கு,   

"இந்த வருட விழாவில் என்னுடைய எதிர்பார்ப்பாக அரசியல், குடும்ப உறவுகள் மற்றும் எதார்த்தமான திரைப்படங்கள் ஆகியவற்றை தேர்ந்தெடுத்து பார்க்கிறேன்.

எதிர்பார்ப்புன்னு சொல்லனும்னா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்னு ஒரு அமைப்பு இருக்கு, அவங்க வருஷா வருஷம் புதுசேரியில திரைப்பட விழா நடத்துறாங்க. பார்வையாளர்களுக்கு தங்குறதுக்கும் சாப்பாட்டுக்கும் ஒரு நியாயமான தொகை வாங்கிட்டு ஏற்பாடு பண்ணித்தறாங்க. அதுமாதிரி இவங்களும் இங்கு வசதிகள் ஏற்படுத்தினால் நல்ல இருக்கும். அது இல்லாததினால் ரொம்ப பேர் கஷ்டப்படுறாங்க.

ஒவ்வொரு இடத்துக்கும் போய் வர எதாச்சும் கொஞ்சமா சாபிட்டாலே நிறைய செலவாயிடுது. இதற்கு ஒரு மாற்று இருந்தா இன்னும் நிறைய பேர் கூட வர வசதியா இருக்கும். முன்னைக்கு விழாவில் திரைப்படங்கள் பார்க்கிறவர்கள் இப்போ அதிகம்தான். விழாவுக்காக திரையிடப்படும் திரையரங்களில் உள்ளவர்களை சேர்த்தால் கொறைஞ்சது ஆயிரம் பேராவது வர்றாங்க. இந்த ஆயிரம் பேர்ல பெரும்பாலும் உள்ளூர் ஆட்களே அதிகம். உலகத் திரைப்பட விழான்னா உலகம் முழுக்க இருக்கிறவங்க வந்து பார்க்கணும். ஆனா, தமிழ்நாட்டுல இருக்குறவங்க பார்க்கிறதே இங்க பெரிய விஷயம்னு ஆயிடுது.

முன்னாடி எல்லாம் பத்து நாள் இருந்த திரைப்பட விழா போன வருஷமும் இந்த வருஷமும் எட்டு நாள் ஆக ஆயிடுச்சு. நான் ஆரம்பிச்ச முதல் வருஷம் மட்டும் தான் வரல. இரண்டாவது வருஷத்துல இருந்து தொடர்ந்து வந்துகிட்டு இருக்கேன்" என்று பெருமையாக சொன்னார் அந்த 72 வயது உலக சினிமா ஆர்வலர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x