Last Updated : 05 Jan, 2017 08:07 PM

 

Published : 05 Jan 2017 08:07 PM
Last Updated : 05 Jan 2017 08:07 PM

நம் இயல்பு வாழ்க்கையை உலகுக்குக் காட்டுங்கள்: திரைப் படைப்பாளிகளுக்கு பாரதிராஜா வேண்டுகோள்

கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் உலகுக்கு காட்ட வேண்டும்; நம் இயல்பு வாழ்க்கையை உலகுக்குச் சொல்லுங்கள் என்று தமிழ் திரையுலக படைப்பாளிகளுக்கு இயக்குநர் பாரதிராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தோ சினி அப்ரிசியேஷன் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்படுகிறது. 14வது ஆண்டாக நடைபெறும் இந்தாண்டு திரைப்பட விழா தொடக்க நிகழ்ச்சி வியாழக்கிழமை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவை திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தொடங்கி வைத்தார். தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு, நடிகர் சங்கத்தின் செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். ஐஸ்வர்யா ராஜேஷ் குத்துவிளக்கு ஏற்றினார்.

இவ்விழாவை தொடங்கி வைத்து பேசிய இயக்குநர் பாரதிராஜா, "விவசாயி ஆக பிறந்த ஒரு பையன், சினிமா மீது ஈர்ப்பு ஏற்பட்டு வந்து என் வரலாற்றையும், சினிமா வரலாற்றையும் திரும்பிப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் நான் பார்த்த சினிமாக்களைச் சொர்க்க பூமி என்று நினைத்து ஓடிவந்தேன். ஆனால், வந்தவுடன் தான் இது சொர்க்க பூமி அல்ல, சமூகத்துக்கான ஊடகம் என புரிந்தேன்.

வலிமையான ஊடகமாக இன்று வரை உலகளவிலே அனைத்து கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் நாம் இங்கியிருந்து சொல்ல, அவர்கள் அங்கிருந்து சொல்ல உலகம் சுறுங்கிப் போய் உள்ளது. 14 ஆண்டுகளாக இந்த திரைப்பட விழாவை நடத்தி வருவதற்கு ஒரு பெரிய சக்தி தேவை.

நாங்கள் எங்கள் காலத்தில் சினிமா பார்க்க வேண்டும் என்றால், 'மதர் இந்தியா' பார்த்தால் 2 நாட்களுக்கு தூக்கம் வராது. மறுபடியும் பார்ப்பதற்கு 2 ஆண்டுகள் கழித்து, எங்கேயாவது ஒரு டூரிங் டாக்கீஸ் திரையிட்டுக் கொண்டிருப்பார்கள். மறுபடியும் அந்த படத்தைப் பார்ப்பதற்கு தேடினால் கிடைக்காது. அந்த காலங்கள் போய் சினிமா நேற்று வெளியானால், இன்று கைக்குள் வந்து விடுகிறது.

அதனால் தான் தமிழ் இளைஞர்கள் மிகப் பிரம்மாண்டமாக உலகளவிலே போட்டியிடுகின்ற அளவுக்கு தொழில்நுட்ப கலைஞர்கள் வளர்ந்திருக்கிறீர்கள். அதைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. டெல்லிக்கு எல்லாம் சென்று திரைப்பட விழாக்களில் படங்கள் பார்த்துள்ளேன். ஏனென்றால் புத்தகம் படித்த அனுபவத்தை ஒரு சினிமா கொடுக்கும்.

ஈரானிய மற்றும் ஜப்பான் திரைப்படங்களைப் பார்த்தோம் என்றால், அதற்குள் நுழைந்து ஒரு வாழ்க்கையைச் சொல்வார்கள். அவர்கள் தொழில்நுட்பத்தோடு கலந்து அவர்களோடு கலாச்சாரத்தையும் உலகளவிலே கொண்டு செல்கிறார்கள். இயக்குநர்களே, உதவி இயக்குநர்களே வருங்காலத்தில் இந்த தொழில்நுட்பத்தை கையில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அவர்களுக்கு காட்டுங்கள் என்பது தான் எனது தாழ்மையான வேண்டுகோள்.

நம்முடைய எதார்த்தமான வாழ்க்கையை அவர்களுக்கு சொல்ல வேண்டும். ஈரானிய படங்களைப் பார்த்து எவ்வளவு எதார்த்தமாக செய்திருக்கிறார்கள் என சொல்கிறோம். இந்த திரைப்படவிழாவில் அனைத்து உலக சினிமாக்களையும் பார்த்து தொழில்நுட்பத்தை கற்றுக் கொண்டு, நம்முடைய இயல்பு வாழ்க்கையை அவர்களுக்குச் சொல்லுங்கள்" என்று பேசினார் இயக்குநர் பாரதிராஜா.

இவ்விழாவில் சென்னை திரைப்பட விழாவின் இயக்குநர் ஏ.தங்கராஜ், சுஹாசினி, லிசி, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மனோபாலா, நடிகர் மோகன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சிறந்த படத்துக்கு பரிசுத் தொகையை ஏற்ற நடிகர் சங்கம்

இந்த திரைப்பட விழாவில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்படும் தமிழ் படத்துக்கான பரிசுத் தொகையான 3 லட்சத்தை தென்னிந்திய நடிகர் சங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x