Published : 10 Oct 2018 05:34 PM
Last Updated : 10 Oct 2018 05:34 PM

அந்நாட்களில் சிரிப்பது கூட ரணமாக இருக்கும்: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சோனாலி பிந்த்ரே உருக்கம்

தான் சிரிப்பது கூட வலி மிகுந்ததாக இருந்த நாட்களும் உண்டு என, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகை சோனாலி பிந்த்ரே தெரிவித்துள்ளார்.

நடிகை சோனாலி பிந்த்ரே கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவ்வப்போது, தான் சிகிச்சைக்குப் பின் தன்னுடைய உற்சாகமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவார். கடந்த செவ்வாய்க்கிழமையும் சோனாலி பிந்த்ரே, தான் நம்பிக்கையுடன் புற்றுநோயிலிருந்து மீண்டு வருவதாகப் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சோனாலி பிந்த்ரே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “கடந்த இரண்டு மாதங்களாக எனக்கு நல்ல நாட்கள் மற்றும் மோசமான நாட்கள் இரண்டும் வாய்த்தன. சில நாட்களில் என்னுடைய விரலை அசைப்பது கூட வலி மிகுந்ததாக அமைந்தது. அந்த சமயங்களில் நான் முற்றும் சோர்வடைந்தவளாக உணர்ந்தேன். இது ஒரு சுழற்சி என்பதை அறிந்தேன். உடல் வலியில் இருந்து ஆரம்பித்து அதன்பிறகு மன வலியை அனுபவிக்க வேண்டும். நிறைய மோசமான நாட்கள் இருந்தன. கீமோ சிகிச்சைக்குப் பின்னரான நாட்களை அவ்வாறு சொல்லலாம். அந்த சமயத்தில் சிரிப்பது கூட ரணம் மிகுந்ததாக இருக்கும்.

சில சமயங்களில் அது என்னிடம் இருந்து எல்லாவற்றையும் எடுத்துச் சென்றுவிட்டது போல் இருக்கும். ஒவ்வொரு நிமிடமும் நான் என்னுடன் போராடிக் கொண்டிருக்கிறேன். ஆனால், இந்தப் போராட்டம் முக்கியமானது. இத்தகைய மோசமான நாட்களை நாம் ஞாபகம் வைத்திருத்தல் அவசியம். எப்போதும் நீங்கள் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்க உங்களை உந்தித் தள்ள வேண்டியதில்லை. நாம் ஏன் போலியாக நடிக்க வேண்டும்?

நான் சிறிது காலத்திற்கு அழுவதற்கும், வலியை உணர்வதற்கும், சுய பரிதாபம் கொள்ளுவதற்கும் என்னை அனுமதித்துள்ளேன். அப்போதுதான் அதனை ஏற்றுக்கொள்ள முடியும். உணர்ச்சிகள் தவறானவை அல்ல. எதிர்மறையான உணர்வுகளைக் கொண்டிருத்தல் தவறான செயல் அல்ல. ஆனால், ஒருகட்டத்திற்கு மேல் அவை உங்களை கட்டுப்படுத்துவதை தவிர்த்திடுங்கள். அந்தக் கட்டத்திலிருந்து வெளியே வருவதற்கு அதிகப்படியான சுய கவனம் வேண்டும். தூங்குதல் எப்போதும் உதவும், அல்லது கீமோ சிகிச்சைக்குப் பிறகு எனது விருப்பமான ஸ்மூத்தியை சாப்பிடுதல், மகனுடன் உரையாடுதல் உதவியாக அமையும்.

தற்போதைக்கு என்னுடைய சிகிச்சை தொடர்கிறது. இப்போது உடல் நலம் தேறி வீடு திரும்புவதே என் இலக்கு. வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொண்டிருக்கிறேன்'' என சோனாலி பிந்த்ரே பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x