Published : 06 Apr 2018 04:11 PM
Last Updated : 06 Apr 2018 04:11 PM

எனக்கு இப்போதும் கேமரா கூச்சம் இருக்கிறது: தீபிகா படுகோனே பேட்டி

எனக்கு இப்போதும்கூட அந்தக் கூச்சம் இருக்கிறது. ஆனால், அதைக் கையாளும் வழிமுறைகள் இப்போது எனக்குத் தெரிந்திருக்கின்றன என்று பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கூறியுள்ளார்.

வெற்றிகள் நம்மை வாழ்க்கையின் உச்சிக்குக் கொண்டு செல்லும்போதுதான் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏற்கெனவே திரையுலகில் வெற்றியாளராக அறியப்பட்ட தீபிகா படுகோனே 'பத்மாவத்' வெற்றிக்குப் பின் புகழ் உச்சியில் மேலும் ஒரு அடி முன்னேறிச் சென்றிருக்கிறார்.

வெற்றியின் உச்சம், திரைக்கதை தேர்வு, திருமணத்துக்குப் பின் நடிப்பது என பல்வேறு விஷயங்கள் குறித்தும் தீபிகா பேட்டியளித்துள்ளார்.

அந்தப் பேட்டியிலிருந்து..

'பத்மாவத்' வெற்றி உங்கள் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?

எதைச் செய்தாலும் அதில் ஓர் அர்த்தம் இருக்க வேண்டும். அந்தப் பணியின் பின்னால் ஒரு நோக்கம் இருக்க வேண்டும். ஏதாவது சில மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். யாரேனும் சிலரது வாழ்க்கையில் நம் வேலை ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதைத்தான் 'பத்மாவத்' எனக்கு உணர்த்தியிருக்கிறது.

நான் தேர்வு செய்யும் கதைகள் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். 'பிக்கு' என்பது ஒரு சிறிய படம்தான். ஆனால், அதில் ஓர் ஆழம் இருக்கிறது. கதைக்களத்துடன் எனக்கு ஓர் உடன்பாடு ஏற்பட வேண்டும். அப்போதுதான் நான் அந்தக் கதையைத் தேர்வு செய்வேன். எனது தெரிவுகள் பட்ஜெட் அடிப்படையில் அமைவதில்லை. அப்படி இருந்திருந்தால் நான் 'ஃபைண்டிங் ஃபேனி' (Finding Fanny) செய்திருக்கவே மாட்டேன்.

வெற்றியை எப்படிக் கையாள்வது?

உங்கள் வெற்றியைக் கையாள தன்னிலை உணருங்கள். நீங்கள் நிற்கும் இடத்தை, இலக்கை அடைய யாரெல்லாம் உதவினார்கள், எத்தகைய முடிவுகள் எல்லாம் உங்களை அந்த இடத்துக்குக் கொண்டு சேர்த்தது என்பதை உணருங்கள். இதை ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் வெற்றிக்கு வேர் வைத்தவர்களையும் வைத்த நிகழ்வுகளையும் மறக்காதீர்.

கேமரா கூச்சத்தை எதிர்கொள்வது குறித்து..

எனக்கு இப்போதும்கூட அந்தக் கூச்சம் இருக்கிறது. ஆனால், அதைக் கையாளும் வழிமுறைகள் இப்போது எனக்குத் தெரிந்திருக்கின்றன. கேமராவுக்கு வெளியே இருந்த கூச்சத்தை கேமராவுக்கு முன்னாலும் கொண்டுவந்ததுதான் நான் செய்த தவறு என நினைக்கிறேன். என்னை இயக்கிய இயக்குநர்கள் என்னைப் புரிந்துகொண்டு எனது கூச்சத்தை உடைத்தெறிந்தனர்.

கதைகளைத் தேர்வு செய்வதில் பின்பற்றும் நடைமுறை?

ஆரம்ப காலகட்டத்தில் பெரிய ப்ராஜக்ட் என்பதற்காகவும் சில பெயர்கள் திரையில் ஒன்றாக வரும்போது தாக்கம் இருக்கும் என்பதற்காக கதையை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று சில படங்களை ஓகே செய்திருக்கிறேன். வெற்றிகளைச் சுவைத்தபின் தன்னம்பிக்கை அதிகரித்திருக்கிறது. இன்று என்னால், தைரியமாக சில கதைகளுக்கு நோ சொல்ல முடிகிறது. வெற்றிகள் எனக்கு நம்பிக்கையை மட்டுமல்ல சுதந்திர சிந்தனையையும் தந்திருக்கின்றன. என்னை நானே வெளிப்படுத்தும் திறன் எனக்குக் கிடைத்திருக்கிறது. இப்போதெல்லாம் எனக்குக் கூடுதல் அதிகாரம் கிடைத்ததுபோல் உணர்கிறேன்.

அடுத்த படம் என்னவாக இருக்கும்?

'யே ஜவானி ஹே தீவானி' (Yeh Jawaani Hai Deewani) படம் போல் ஒன்று பண்ணமாட்டீர்களா? என என்னிடம் ஏராளமானோர் கேட்கின்றனர். ஆனால், அதுபோன்ற காதல் கதைகள் இப்போது வருவதில்லை. எல்லோரும் பயோபிக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. எனக்கு இலகுவான வேடிக்கை ததும்பம் கதைகள் மீது ஆர்வம் அதிகம். அந்த மாதிரியான கதை இன்னும் என்னிடம் வரவில்லை.

'பத்மாவத்'துக்குப் பிறகு வாழ்க்கை எப்படி இருக்கிறது?

எனது பெற்றோர்கள் வீட்டைக் கட்டி முடிக்க உதவிக் கொண்டிருக்கிறேன். எனது வீட்டை ஒழுங்குபடுத்துகிறேன். எனக்கு அது மிகவும் பிடித்த வேலை. எனது அலுவலகத்தின் மீதும் கவனம் செலுத்தி வருகிறேன். கணக்குகளை முடிப்பதில் ஆர்வம் காட்டுவதோடு சில் இமெயில்களுக்கு பதில் அனுப்புவது போன்ற வேலைகளைச் செய்து வருகிறேன். இவை எல்லாம் நான் ரசித்துச் செய்யும் செயல்கள்.

திருமணத்துக்குப் பின் நடிப்பீர்களா?

எனது தொழில் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கிறது. நான் விரும்பினால் அதிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ளலாம். ஆனால், குடும்பம், வீடு, பெற்றோர், திருமணம் இவை எல்லா எனக்கு மிகமிக முக்கியமானவை. இன்றைய காலகட்டத்தில் நான் என்னை வேலை பார்க்கும் மனைவியாகவும், வேலைக்குச் செல்லும் தாயாகவும் பொருத்திக் கொள்ள முடியும். நான் அவ்வாறு வேலைக்குச் செல்லாவிட்டால்தான் என்னைச் சுற்றி இருக்கும் அனைவருக்கும் பைத்தியம் பிடிக்கும் அளவுக்கு தொந்தரவு ஆகிவிடுவேன் என நினைக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x