Published : 10 Jun 2019 11:11 AM
Last Updated : 10 Jun 2019 11:11 AM

வீட்டுக் கடன் தேவைப்படுவோர் கவனத்துக்கு

கடனுக்கான வட்டி விகிதங்கள் கடந்த வருடத்தில் அதிகரித்துவந்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து குறைக்கப்பட்டுவருவது கடன் வாங்குபர்களுக்குப் பெரிய ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த வட்டி குறைப்பு குறைவாகவே உள்ளது. இந்த வருடத்தில் ரெபோ விகிதம் ஏற்கெனவே 50 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி மேலும் 25 அடிப்படை புள்ளிகளைக் குறைத்துள்ளது. 

பணப்புழக்கம் மிகவும் நெருக்கடியாக இருப்பதால் வங்கிகள் கடன்களுக்கான வட்டியைக் குறைக்க முடியாத நிலையில் இருந்தன. வரும் மாதங்களில் லிக்விடிட்டி பிரச்சினை விலகும்பட்சத்தில் வங்கிகள் வட்டி விகிதங்களைக் குறைக்கும்.

எனவே, கடன் வாங்க நினைப்போர் சிறிது காலம் பொறுத்திருந்தால் வட்டிகுறைப்பின் பலனை அடைய முடியும். குறிப்பாக வீட்டுக் கடன் வட்டி குறைக்கப்பட்டால் நிதி நெருக்கடி சற்று குறையும். ஜனவரி முதல் தற்போது வரை, பல வங்கிகள் அவர்களது ஒரு ஆண்டு MCLR (marginal cost of funds based lending rate) விகிதத்தை 5-10 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளன. வீட்டுக்கடனில் மாறக்கூடிய வட்டி விகிதங்கள் எம்சிஎல்ஆர் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதால், வங்கிகள் அதனைக் குறைக்கும்போது வட்டி விகிதமும் குறையும்.

ஒருவேளை எம்சிஎல்ஆர் விகிதத்தில் குறிப்பிடத்தக்க புள்ளிகள் குறைக்கப்படவில்லை எனில், வீட்டுக் கடன் வட்டி விகிதமும்குறைய வாய்ப்பில்லை. ரிசர்வ் வங்கி இந்த ஆண்டில் 75 அடிப்படை புள்ளிகள் என்ற அளவில் வட்டிகுறைப்பு நடவடிக்கையை எடுத்திருப்பதால் வரும் மாதங்களில் வங்கிகளும் வட்டியைக் குறைக்கும் நடவடிக்கையை எடுக்கவே அதிக வாய்ப்புள்ளது. எனவே பொறுத்திருந்து வட்டி விகித மாற்றங்கள் நடக்கிறதா என்பதைப் பொறுத்து பின்னர் கடன்களை வாங்கலாம்.

அதேசமயம், காத்திருக்கும் நேரத்தில் புத்திசாலித்தனமாக தற்போது வங்கிகள் என்ன வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குகின்றன என்பதையும் பார்த்துக்கொள்ளலாம். வட்டி விகிதம் குறையும் போது எந்த வங்கியில் கடன் வாங்கினால் அதிகப் பலன் கிடைக்கும் என்பதை உடனே முடிவு செய்வதற்கு இது உதவியாக இருக்கும்.

தற்போது வங்கிகள் வழங்கும் சலுகைகள் என்ன?

சம்பளதாரர்களுக்கு ரூ.30-75 லட்சம் வரையிலான கடன்கள் எனில் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 8.55 சதவீத வட்டி வீதத்தில் வீட்டுக்கடன் வழங்குகிறது. அதிக கிரெடிட் ஸ்கோர் வைத்திருப்பவர்களுக்கு அலஹாபாத் வங்கியும் யுனைட்டெட் பேங்க் ஆஃப் இந்தியாவும் 8.6 சதவீதத்தில் வீட்டுக் கடன் கொடுக்கின்றன.

பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ரா, கனரா வங்கி, பிஎன்பி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகள் 8.7 சதவீதம் என்ற அளவில் வீட்டுக் கடன் வழங்குகின்றன. ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட முன்னணி வங்கிகள் 9.15 சதவீத வட்டியில் கொடுக்கின்றன. எஸ்பிஐ கடன்தாரரின் ரிஸ்க் அளவை பொறுத்து 8.85-8.95 என்ற விகிதத்தில் கடன் வழங்குகிறது.

வீட்டுக் கடன் நிதி நிறுவனங்களின் வட்டி விகிதங்கள் வங்கிகள் வழங்குவதைக் காட்டிலும் அதிகமாகவே உள்ளன.  வட்டி விகிதங்கள் குறைக்கப்படும்போது, குறைவான வட்டியில் கடன் வழங்குவது யார் என்று பாருங்கள். நினைவில்கொள்ளுங்கள், எம்சிஎல்ஆர் அடிப்படையிலான வட்டி குறைப்பு நடந்தால் மட்டுமே கடன்களின் வட்டி விகிதம் குறைவாக இருக்கும்.

இந்த வட்டி விகித மாற்றம் குறிப்பிட்ட கால இடைவெளியில் மட்டுமே நடக்கும். உதாரணத்துக்கு, வீட்டுக்கடன் ஒரு ஆண்டு கால எம்சிஎல்ஆர் அடிப்படையில் வட்டிவிகிதம் நிர்ணயிக்கப்பட்டிருந்தால், ஒவ்வொரு ஆண்டும் வட்டிவிகிதம் மாற்றி நிர்ணயிக்கப்படும்.  எனவே வட்டி விகிதம் குறையும்வரை காத்திருந்து கடன் வாங்கினால் கூடுதல் பலன் அடையலாம்.

கடனை மாற்ற நினைத்தால்?

நீங்கள் இப்போது அதிக வட்டியில் கடன் வாங்கி கஷ்டப்படுகிறீர்கள் எனில், உங்களுடைய கடனை குறைவான வட்டி வழங்கும் வங்கிக்கு மாற்றிக்கொள்ளலாம். ஆனால், கடனை மாற்றுவதற்கு முன், கடன் திருப்பிச் செலுத்தும் காலம் அதிகமாக இருக்கிறதா என்று பாருங்கள். அப்போதுதான் கடனை மாற்றுவதன் மூலம் வட்டி குறைப்பு பலனை அடைய முடியும். ஏனெனில் கடனை மாற்றுவதற்கு கட்டணம் உண்டு. பலனில்லாமல் மாற்றி கட்டணம் கட்டுவது வீணானது.

- ராதிகா மெர்வின், radhika.merwin@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x